ஜெயமோகன் (Jeyamohan) எழுதிய பின் தொடரும் நிழலின் குரல் (Pinthodarum Nizhalin Kural) - நூல் அறிமுகம் - https://bookday.in/

பின் தொடரும் நிழலின் குரல் (Pinthodarum Nizhalin Kural) – நூல் அறிமுகம்

பின் தொடரும் நிழலின் குரல் (Pinthodarum Nizhalin Kural) – நூல் அறிமுகம்

நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த புத்தகம். விலை அதிகம் என்பதால் வாங்கிப் படிக்க முடியவில்லை. சமீபத்தில் நண்பரொருவர் கொடுத்து உதவினார். வாசிக்க வாசிக்க அதிர்ச்சியில் உறைந்து போனேன். பக்கங்களை புரட்ட புரட்ட இத்தனை பொய்களா என்று வியந்து போனேன். இவரை ஏன் சமூக வலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இந்த ஒரு புத்தகம் போதுமானது. ஒரு மனிதன் ஒரு தத்துவத்தில் மீது கொண்ட வெறுப்பை, கோபம், அவதூறு, ராஜ நாகத்தின் நஞ்சு யாவற்றையும் எழுது கோலில் ஊற்றி எழுதினால் எவ்வாறு எழுத்துக்கெல்லாம் வரிக்கு வரி வஞ்சகம் வடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சொற்கள் யாவும் நீலம் பாரித்து கிடக்கின்றதை மிகுந்த பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் வாசித்து முடித்தேன்.

திட்டமிட்டு, முன் முடிவுகளோடு, ஆதரமற்ற கட்டுக் கதைகளை எந்தத் தரவுமற்று கம்யூனிஸ்டுகள் மீது சேற்றை வாரி இறைப்பதொன்றே, தான் வாழ்நாளில் பிறப்பெடுத்து வந்தது போன்று அபத்தக் களஞ்சியத்தை, வதந்திகளை, உண்மைபோல் நிறுவ முயன்று, தோற்றுப்போய் தனித்தலையும் மிருகமாய் இன்று வரை நிற்கிறார்.

கெ.கெ.எம். அருணாச்சலம், வீரபத்திரப் பிள்ளை, ராமசாமி, கதிர், இவர்களை மையப் பாத்திரங்களாக வைத்துக் கொண்டு, அவர்களின் வழியே ஸ்டாலின், லெனின், ட்ராட்ஸ்கி, புகாரி, மாவோ, இயேசு, புத்தர் என ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் சொல்லிக் கொடுத்த படி, அனைவரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவதூறுச் சேற்றை அள்ளி எறிவதாய் எண்ணி தன் மீது கரிபூசி நிற்கிறார்.

சர்வதேச தலைவர்கள் மீதான விமர்சனம் என்பதால், வாசிப்பு ஆர்வம் இயல்பாகவே கூடுகிறது. மூத்த தோழர் கெ.கெ எம் ஐ எதிர்த்து அவரிடம் பாடம் பயின்ற அருணாச்சலம் கட்சியால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற வைக்கப்படுகிறார். கட்சியே கதி என்று கிடந்த கெகெ எம் ஊரை விட்டு சாமியாராக போகிறார். வீரபத்திரப் பிள்ளை எனும் எழுத்தாளனைப் பற்றிய தகவல்கள் அருணாசலத்திற்கு கிடைக்கிறது. கட்சிக்கு விரோதமான திரிபுவாதத்தை செய்ததால் வீரபத்திரப் பிள்ளை கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார். அவரின் வீட்டில் இருந்து பிரசுரம் செய்யப்படாத எழுத்துக்களை தேடி படிக்கிறார் தோழர் அருணாச்சலம். அந்த எழுத்துக்களின் வழியே திரிபுவாத சிந்தனைகள் அருணாசலத்திற்கும் கடத்தப்படுகின்றன.

ட்ராஸ்கியவாத சிந்தனையில் ஊறிய வீரபத்திர பிள்ளை, ஸ்டாலினை கொடுங்கோலராகவே சித்திகரிக்கிறார். கோடிக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்தவராக அடையாளம் காணப்படுகிறார். எந்த அளவு என்றால் இட்லருக்கும் மேலான கொடூரராக பொய்களால் புனையப்படுகிறார். முதலில் எதிர்த்தாலும் தொடர்ந்து வாசித்து அவரின் நிலைப்பாடு சரியென்று பின்தொடர்கிறார். செத்துப் போன வீரபத்திர பிள்ளை அருணாச்சலத்தின் மீது உயிரெனப் பற்றி கொண்டு தனது சிந்தனையை மடைமாற்றம் செய்கிறார்.

அவரின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் மன நோயாளியாகி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் அளவு நோய் முற்றிப் போகிறார். பின்தொடரும் நிழலின் குரலாக வீரபத்திரப் பிள்ளையின் குரல் அருணாச்சலத்தை பற்றிப் படர்கிறது. அருணாச்சலத்தின் வாயிலாகவே ரஷ்யத் தலைவர்களின் மீதான கட்டுக் கதைகள் புனையப்படுகிறது. இயேசுவை புத்தரை காறி உமிழ்கிறார். பைத்தியம் முற்றிப் போய் மனைவி நாகம்மையால் மீட்கப்படுகிறார். மீண்டவர் ஆன்மீகச் சேற்றில் விழுவதாக பொய் மூட்டையை இறுகக் கட்டிக் கொண்டு கிளம்புகிறார்.

மார்க்சிஸ்டுகளின் மீதான வன்மத்தால் நிலை கொள்ளாமல் தவித்தலைகிறார். உன்மத்தம் பிடித்த நிலையில், பொருத்தமற்ற பொய்களை வாரி இறைக்கிறார். கிறித்தவம், இஸ்லாம் குறித்தெல்லாம் குறை காண்கிறவர் எட்டாயிரம் சமணர்களை பழி கொண்ட இந்து மதத்தை மறந்தும் கூட ஒரு வரி எழுதவில்லை. என்ன ஒரு ஒரவஞ்சனை அல்லது இரு கண் இரு காட்சிப் பார்வை. அரசியல் விவாதங்கள் வழியே காட்சிகளை நகர்த்துகிறார். தானொரு பாத்திரமாக மாறி உரையாடல் வழி காலத்தை பின் நகர்த்துகிறார். மார்க்ஸ் எழுதிய மூலதனம் உலக மக்களின் பொருளாதார விடுதலைக்கான பேராவணம். ரஷ்யாவில் லெனினால் நிகழ்த்தப்பட்ட புரட்சி என்பது ஒரு பரிசோதனைக்களம். உலகே வியந்து பார்த்த பூகோளத்தின் பொது உடமை மாடல். எதிரிகள் கூட வியந்து பார்த்த மானுடத்தின் சமத்துவ வரைபடம்.

கூட்டுப் பண்ணை விவசாய முறைகள், நிலபிரபுவத்தின் ஆணிவேரை பல தேசத்தில் அசைத்து பார்த்தன. உழவர்களின் சமத்துவ உழவை காணச் சகியாத கோணல் எழுத்து உழவை செய்யும் ஜெயமோகன் கோடிக்கணக்கான விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதாக, அபாண்டத்தின் உச்சியில் நின்று மனப்பிறழ்வேறி பிதற்றுகிறார். வர்க்கப் பகை நாடுகள் கூட முன்வைக்காத குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் அள்ளி வீசுகிறார். இருபதாம் நூற்றாண்டு கண்ட உலகின் ஒரே கொடுங்கோலன் இட்லர், அவனையே பின்னுக்கு தள்ளி ஸ்டாலினை முன் நிறுத்தி சர்வாதிகாரியென்ற தேய்ந்து போன ஒலிப்பேழைகளை எடுத்து வந்து வாசகர் காதில் பூச்சுற்றுகிறார். காந்தி தொடங்கி குஜராத் வரையிலான சங்கப் பரிவாரங்களின் பச்சைப் படுகொலைகளைப் பற்றி ஓரிடத்தும் பேசாதவர், கம்யூனிஸ்டுகளின் மீது அவதூறு சேறள்ளி வீசுகிறார்.

கட்சியை விட்டு வெளியேறிய தோழர்கள், ஆன்மீக பாதைக்குள் சென்று சேர்வதாக தன்னைத் தானே சொரிந்து கொண்டு சுகம் காணுகிறார். ரஷ்யா கம்யூனிச பாதையில் இருந்து விலகி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது, இவர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் யாவும் உலகத்தில் உள்ள வல்லாதிக்க முதலாளித்துவ நாடுகள் காலங்காலமாக மென்று துப்பியவை. அவற்றைத் தின்று செரிக்க முடியாமல் கொப்புளிக்கிறார் . கம்யூனிசத்தை குழி தோண்டி புதைக்க காத்திருக்கும், வல்லாதிக்க நாடுகளுக்கு கூட சிக்காத ஆவணங்கள், இவரின் புனைவின் வழி பொய்மையால் வெளியேறுகின்றது.

ஆனால் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் புதினம் என்ற பெயரால் ஒரு நவீனமான கட்டமைப்பை எழுத்தின் வழி பரிசோதனையாய் செய்திருக்கிறார். கட்டுரைகள் சிறுகதைகள் உரையாடல்கள் என்று நாவலை அபாரமான எழுத்தாற்றல் மூலமாக சுவாரசியப்படுத்தியிருக்கிறார். நல்ல உள்ளடக்கம் என்றால் கொண்டாடி இருக்கலாம் தீய நோக்கம் என்பதால் வன்மையாக கண்டிக்க வேண்டி இருக்கிறது.பின் தொடரும் நிழலின் குரலென்பது மனதின் சமநிலை குறைந்தவர்களின் உளறல்களால் நிறைந்தது.

நூலின் தகவல்கள் : 

நூல் : பின் தொடரும் நிழலின் குரல்(Pinthodarum Nizhalin Kural)
ஆசிரியர்  : ஜெயமோகன்
பக்கம் : 723
விலை :  290
ஆண்டு :  1999
வெளியீடு : தமிழினி பதிப்பகம்

நூல் அறிமுகம் எழுதியவர் : 

செ. தமிழ் ராஜ்
வண்டியூர்
மதுரை

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *