Subscribe

Thamizhbooks ad

பிறை 2: பிறைப் பொழுதின் கதைகள் – ம.மணிமாறன்

மய்யத்துக் குருவிகளும் தாய் வேர் அறுப்பதும்….

நீண்டு பரந்து கிடக்கிறது கடல். கடல்தான் எல்லாம். கடலைப் படைத்தவன் இறைவன், அதைப்பற்றிக் கொண்டு வாழும் மன உறுதியையும் தைரியத்தையும் அவனே தங்களுக்கு அளித்திருக்கிறான். இது அவர்களின் அழியாத நம்பிக்கை. எத்தனை இடர்களை இந்த பாழும் உலகம் அவர்களுக்கு அளித்தாலும், கொடூர கணங்கள் தங்களைச் சூழும்போதும் கூட வாழ்க்கையை அதன் வழியில் வாழ்ந்தே தீர்வது எனும் வைராக்கியத்தை இழக்காத எளிய மனிதர்கள் அவர்கள். அவர்களின் இருப்பிடம் துறைமுகம்.

துறைமுகம் என்ற உடனே சமகாலத்தைய மனிதர்களுக்குள் உருவாகும் காட்சிச் சித்திரம் போல் இல்லை தோப்பில் முஹம்மது மீரானின் துறைமுகம். இங்கே ஓங்கி வளர்ந்த கட்டிடங்கள் இல்லை. வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய ஜபர்தஸ்துகளை பிரஸ்தாபிக்கும் படியான எந்தச் சுவடும் இங்கு கிடையாது. மீன் பாடிற்குப் போகும் கிறிஸ்தவக் குடும்பங்கள் கடலுக்குள் சென்று மீன்களோடும், படகுகள்,வலைகளோடும் கரை ஒதுங்குவார்கள்.

சூரிய ஒளியில் தகிக்கும் குறுகுறு வெள்ளை மணலில் சாக்குப் படுதாக்களில் கருப்பட்டியும், இன்னபிற பொருட்களையும் பரப்பி வைத்து கடையாக்கிக் கிடக்கிறது ஜனம். பனையோலைகளால் உருவாக்கப்பட்ட கையகலக் கடைகளில் புட்டு, அப்பம் ,பழங்களை விற்பனை செய்யும் கடைகள். வலைகளில் இருந்து தெறித்து விழும் மீன்களைப் பொறுக்கி எடுக்க குழந்தைகள் ஆளுக்கொரு சட்டியோடு ஒடியாடித் திரிகிறார்கள். பொறுக்க வரும் குழந்தைகளை விரட்டியடிக்க கம்புகளோடு காத்திருக்கும் மீனவப்பெண்கள். இவ்வளவுதான் அந்தத் துறைமுகக்கிராமம்.

நெத்திலிப்பாடு இருக்கும் நாட்களில் அவற்றை காய வைத்துக் கருவாடாக்கி கொழும்பிற்கோ, தூத்துக்குடிக்கோ கச்சை கட்டி அனுப்பி வைக்கும் இஸ்லாமியக் குடும்பங்கள், அவர்களின் தரிப்பிடங்கள் சூழக்கிடக்கும் அரபிக் கடலோரத்து குறுங்கிராமமே துறைமுகம்.

தோப்பில் கட்டி எழுப்பியிருக்கும் துறைமுகம் எனும் நாவல் தொன்னூறுகளின் துவக்கத்தில் எழுதப்பட்ட, அவரின் மிக முக்கியமான நாவல்.

நாவல் முழுக்க, முழுக்க இஸ்லாமியர்களின், அதிலும் குறிப்பாக மலையாளமும்,தமிழும் ஒனறுடன் ஒன்று முயங்கிக் கிடக்கும் இஸ்லாமியக் குடும்பங்களின் கதையைப் பேசுகிறது. மனக்க மனக்க ஊரெங்கும் நிகழ்த்தப்படும் நேர்ச்சைகள். நேர்ச்சைகளளின் உணவுப்பண்டங்களில் இருந்து கிளம்பும் ஆவிகள் எழுதியதே துறைமுகம் நாவல்.

கடலை நம்பிக்கிடக்கும் இவர்கள் யாவரும் சித்திரையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சித்திரையின் நெத்திலிப்பாடு கடலையும், கடலோரத்து மனிதர்களின் வாழ்க்கையையும் செல்வம் கொழிக்கச் செய்யும். நெத்திலிப்பாடு கிடைத்தால் போதும் அதனை அவர்கள் கருவாடாக்கி கொழும்பிற்கோ தூத்துக்குடிக்கோ கச்சை கட்டி அனுப்பி வைப்பார்கள், கையில் காசு புரளும். ரமலான் மாதத்தில் ஜக்காத்து (தருமம்) தரும் அளவிற்கு கைகளில் செல்வம் கொழிக்கும். இவை யாவும் சித்திரையில்தான் சாத்தியம். சித்திரையின் பிறப்பில் அவர்களுடைய மனதெங்கும் நெத்திலிகள் துள்ளிக் குதிக்கும் கடலால் நிறைந்திருக்கிறது..எப்போதும் போல பிறக்கப் போகும் சித்திரைக்காகக் காத்துக் கிடக்கிறது ஊர். ஊரே காத்துக்கிடப்பது சித்திரைக்கு மட்டுமல்ல, கொழும்பிலிருந்து அ.பி.ஊ. என்கிற வியாபாரியின் வார்த்தைகளைத் தாங்கி வரும் தந்தி, கடுதாசிகளுக்காகவும்தான். கடுதாசி என்றால் சுபம். தந்தி என்றால் அவ்வளவுதான். தலைகுப்புற கவிழ்த்துப்போட்டுவிடும் தந்திகள் வாழ்வினை என்பதை அவர்களுக்கு காலம் புரிய வைத்திருந்தது. வரும் வழியில் கப்பலில் இருந்து சரக்குகள் கவிழ்ந்து போனதாக வந்த தந்திகள் பலியெடுத்த எளிய வியாயாபாரிகளின் மூச்சுக்காற்றாலும் நிறைந்திருந்திருக்கிறது கடற்கரை. எத்தனை துர்மரணங்களை உள்வாங்கிக் கிடக்கிறது இந்த துறைமுகக்கிராமம்…

துயரங்களை அப்பிக்கொண்டு வந்த சித்திரை அவர்களின் வாழ்வைக் கண்ணீரைக் கொண்டு எழுதினால் எப்படியிருக்கும் என்பதையே நாவலை வாசிக்கும் ஒவ்வொருவரின் அகமும் அடையும். ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன் நாற்பது வெள்ளை யானைகளுடன் வந்த மாலிக் இபுனு தீனார் உட்கார்ந்திருந்திருந்த அந்த கறுப்புக்கல், இவர்களின் எல்லாக் கதைகளுக்கும் சாட்சியாக அங்கே நிற்கிறது. மீரான் பிள்ளை எனும் கச்சைக் கட்டும் வியாபாரியின் வாழ்வின் ஊடாக அந்த ஊரின் கதையை நமக்குச் சொல்கிறார் தோப்பில். நாவலை வாசித்து முடித்த வெகு காலத்திற்குப் பிறகும் கடலோரத்து மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் மனித உடல்கள் அசைந்து கொண்டேயிருப்பதை எவராலும் தவிர்த்து நகர முடியாது. மரணித்த யாவரும் வர்த்தக சூதாடிகளின் குயுக்திக்கு பலிதரப்பட்ட பலியாடுகள். எளிய கச்சை கட்டும் வியாபாரிகள் அவர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதிநாட்களில் நகர்கிறது நாவல். காசிம் எனும் இளைஞன் கல்வியின் பலனாக அரசியலை மட்டுமல்ல, மார்க்கம் எனப் பெயரிட்டு அந்த கிராமத்தை பிற்போக்கு இருளுக்குள் மூழ்கி வைத்திருக்கும் பள்ளிவாசல் நிர்வாகிகளின் தந்திரத்தையும் புரிந்து கொள்கிறான். அப்போதைய நாட்களில் எவை எவையெல்லாம் ஹராம். எதுவெல்லாம் காபிர்களின் செயல்பாடுகள். இஸ்லாமியர்கள் பற்றி ஒழுக வேண்டிய மார்க்கக் கடமைகள் என்ன? என்பவை பற்றி நாவலுக்குள் நகரும் காட்சிகள் நமக்கு நாற்பதுகளில் இருந்த தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சொல்பவை. காலத்தை எழுதும் கலை நாவல் என்பதை நாவல் வாசிப்பின் போதான ஒவ்வொரு நொடியிலும் உணரத்தருகிறார் தோப்பில்.

இஸ்லாம் மதத்தைத் தழுவிய சேரமான் பெருமாளின் கட்டளையின் படி, மாலிக் இப்னு தீனார் நாற்பது வெள்ளை யானைகளுடன் வந்து ஒரே இரவில் மலபார் கடற்கரை நெடுகிலும் நாற்பது பள்ளி வாசல்களை கட்டினார். நாற்பது பள்ளிகளில் ஒன்று தலை நிமிர்ந்து நிற்கும் இப்புனித கிராமத்தைப் பார்க்கப் பற்பல ஊர்களிலிருந்தும் பல மௌலவிகளும் தங்கள்மார்களும் வருகை புரிந்து கொண்டேயிருக்கிறார்கள்…..

வந்து கொண்டேயிருந்த முஸ்லியார்களும், மதப்பிரசங்கிகளும் புதிய புதிய கட்டுப்பாடுகளை மார்க்கநடைமுறைகள் எனப்பெயரிட்டு அந்த ஊரில் நிலைப்படுத்துகின்றனர். எதுவெல்லாம் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வருகிறது தெரியுமா?. அந்த ஊரின் இஸ்லாமிய ஆண்கள் தலையில் முடி வைத்து கிராப் வெட்டிக்கொள்ள அனுமதியில்லை. தலைமுடி வைத்து கிராப் வைத்துக் கொள்வது ஹராம். அது காபிர்கள் மட்டுமே செய்கிற அராத்தான வேலை. இதற்கு இஸ்லாமானவர்களுக்கு அனுமதியில்லை..என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். இந்த மதக்கட்டுப்பாடு பத்துப் பண்ணிரெண்டு நூற்றாண்டுகளாக மவுலியாக்கள் இந்த நிலத்தில் விதைத்த மதச் சொற்பொழிவுகளின் உபவிளைவுகள். இந்த முடி வைத்திட உரிமை மறுக்கும் இந்தக் கட்டுப்பாடும் கூட ஒரு வெள்ளிக் கிழமை பிரசங்கத்தின் பிறகானதுதான். அந்த ஜும்மா தொழுகைப் பிரசங்கம் இப்படிப் போகிறது..

ஏய் முஸ்லிம்களே!. சகோதரர்களே! கியாமம் (உலக இறுதிநாள்) நெருங்கி விட்டது. கியாமநாள் நெருங்குவதற்கான அறிகுறிகள் கண்டாகிவிட்டது. பெண்கள் எவருமே தலையில் துணி போடுவதில்லை. முகமும் முன்கையும் நீங்கலாக உடலின் மற்றைய பாகங்களை மறைக்க வேண்டுமென அல்லாஹ் கூறியதை நீ, மறந்துவிட்டாயா?. நாளை மஹ்ஷரில் தலையில் துணியிடாப் பெண்களுக்கு நெருப்பால் மக்கன்னா போட்டு இறைவன் தண்டிப்பான். நஸ்ரானிகளின் (கிறிஸ்துவர்கள்) மொழியைப் படித்து கிராப்பும் வைத்து தீனுல் இஸ்லாத்தை மறந்து கொண்டு திரிகின்றனர். கால் ஸராயும் (பேண்ட் மற்றும் டவுசர்) போட்டு தலையில் கிராப்பும் வைத்து வாயில் நஸ்ரானி மொழியும் கொண்டு நடப்பவர்களே! நாளை உங்களுக்கு நரகம் தான்.

இந்தக் காட்சிகள் நமக்கு உணர்த்துவது எது?. இஸ்லாமியத் தெருக்களின் நடைமுறைகளுக்குப் பின்னால் ஏதோ ஒரு மதப்பிரசங்கியின் கையிருப்பதை நம்மால் உணர முடிகிறது. எதையும் இறைவனின் பெயரால் சட்டமாக்கலாம் எனும் நம்பிக்கை மத அடிப்படைவாதிகளை இயக்கியிருக்கிறது. இது இஸ்லாத்திற்கு மட்டுமல்ல. எல்லா நிறுவனமயமான மதங்களும் தங்களுடைய ஆளுகைக்குள் மந்தையாக மக்களை வைத்திருப்பதற்கான தொடர்முயற்சிகளில் இன்றுவரையிலும் இருந்து வருகின்றன. அது ஜனநாயக நடைமுறைகள் உலகெங்கும் பின்பற்றப்படுகிற சமகாலத்திலூம் கூட புதிய புதிய வடிவங்கள் எடுக்கின்றன. அதற்கு பின்புலமாக மதப்படுதாக்களைக் கட்டி வைக்கின்றனர். இப்போதைப் போல இல்லாவிட்டாலும் கல்வி மறுக்கப்பட்ட அந்த நாட்களிலும் கூட உடனடியான எதிர்ப்புகள் எழவே செய்திருக்கும். அதைக் கச்சிதமாக முகம்மது காசிம் எனும் இளைஞனின் பாத்திர வார்ப்பின் வழியாக நாவலுக்குள் காட்சிகளாக கடத்தியிருக்கிறார் தோப்பில்.

ஊரெல்லாம் ஆண்களின் தலைகள் மொட்டையடிக்கப்படுகின்றன. மறுப்பவர்கள் வலுக்கட்டாயமாக பிடித்து வரப்பட்டு மொட்டையடிக்கப்படுகின்றனர். இவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்காக ஆணை விழுங்கி எனும் நாவிதர் துறைமுகமெங்கும் நான்கு தடியர்களோடு அலைந்து கொண்டிருக்கிறார். மெளலவியின் பிரச்சாரத்தை சட்டமாக்கி நடை முறைப்படுத்துவர் பள்ளிவாசல் தலைவர் பரீதுப்பிள்ளை. அவரைப் பொருத்தவரை ஊர் என்பது மக்களின் ஊர் அல்ல. இது கொழும்பில் கொடி கட்டிப் பறக்கும் கருவாட்டு வியாபாரியான அ.பி.ஊனா முதலாளியின் ஊர். அவரின் ஊராக இந்தக்கிராமத்தை வளைத்து வைத்திருப்பதற்குத்தான் பள்ளிவாசல் நிர்வாகம். அவரிடம் வர்த்தகம் செய்து கடன்பட்டு வீடிழந்து வாசல் தொலைத்து கள்ளக்கப்பல் ஏறி இலங்கையில் தலைமறைவாகிப் போன இஸ்லாமியர்களைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளமாட்டார். இறைவனின் நாட்டம் எதுவோ அதுவே நடக்கும். இதில் நான் என்ன செய்ய முடியும். அல்லாஹ்விற்கு விரோதமான செயல்களை தடுத்து நிறுத்துவதே பள்ளிவாசல் தலைவரின் ஒரே பணி என ஊரையே நம்ப வைக்கிறார். நிஜத்தில் இது மட்டுமல்லை பள்ளிவாசல் தலைவர் பரீதுப்பிள்ளை. கேட்பாரற்ற ஊருக்குள் இறையச்சம் எனும் எளிய மக்களின் மன உணர்வை அடிப்படையாகக் கொண்டு ஊரை ஆட்சி செய்யும் முதலாளிகளுக்கு அனுசரனையானவர். எதிர்க்குரல் எழுவது இயல்புதானே. எழும் முதல் குரல் மீரான் பிள்ளையின் மகன் காசிமினுடையது.

காசிமிற்குள் கேள்விகள் முளைக்கின்றன. நாயர்மார்கள் கட்டி வைத்திருக்கும் பள்ளிக்கூடத்திற்குப் போகாதே, கண்ட கண்ட பேப்பர்கள படிச்சுத்தான் நீ கெட்டுப்போன, நீ பள்ளிக்கூடம் போக வேண்டாம், இது காபிர்களோட வேலை என அப்பா மீரான்பிள்ளையும், தாய் கதீஜாவும் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஊர் அவனை கொலைப்பழியில் ஈடுபட்டவனைப் போல உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. இவனுக்குள் கேள்விகள் முளைத்துக் கொண்டேயிருக்கிறது. ” இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய மௌலானா முகம்மது அலி ஆங்கிலம் படித்தவர். அவருக்கு நரகமா?. குர் ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிக்தாகலுக்கும், யூசுப் அலிக்கும் நரகமா கிடைக்கும்?.. இந்த ஊர்க்காரர்கள் அலிகார் பல்கலைக்கழகம் நிறுவிய சர். சையது அஹமதுகானுக்கு காபிர் பட்டம் வழங்கினார்கள். கிராப்பும் வைத்து ஆங்கிலமும் படித்ததனால் இவர்கள் முகம்மது அலி ஜின்னாவையும் மதவிரோதி எனப் பிரகடனப்படுத்தினர்.” இந்த ஊர் எளிய இஸ்லாமியக் குடும்பங்களில் வாழ்வினை சற்று மேலேற்றிவிட கல்வியால் மட்டுமே சாத்தியம். தான் கற்ற கல்வியும், அதனால் கிடைத்த சிந்தனைகளும்தான் மதப்பிரசங்கிகளின் தந்திரத்தையும். அதன் உபவிளைவையும் காசிமிற்கு புரிய வைத்திருக்கிறது.

முகம்மது தினார் அமர்ந்திருந்த கருப்புக்கல்லில் பள்ளிவாசல் நிர்வாகத்தை கேள்வி கேட்கும் வாசகங்களை எழுதி வைக்கிறான். அதைப் படித்துப் பார்த்துச் சொல்லவே ஆள் இல்லாத ஊர் இது. படித்துச் சொல்கிற போது ஊரும் பரீதுப்பிள்ளையும் பதறிப் போகிறார்கள். என்னப்பா இது காபிர்களோட வேலையை செய்கிறானே, இந்த காசிம்பய என்கின்றனர். ஊர் கூடுகிறது. வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு காபிர்களாக (இறை மறுப்பவர்கள்) மாறிப்போனவர்களுக்கான ஊரின் தண்டனையை நிறைவேற்றிட வேண்டியதுதான் என முடிவு செய்கிறார்கள். தண்டனை எது தெரியுமா?. கருப்புக் கல்லில் இறுத்தி முடி களைந்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் விடுவது. சிரட்டை மாலை போட்டு அவனை மானபங்கம் செய்வது. அவனையும், அவன் குடும்பத்தையும் ஊர்விலக்கம் செய்வது. அதன் வழியே ஊருக்குள் ஏற்கனவே நிலைப்படுத்தியிருக்கும் மதம் கட்டி வைத்திருக்கும் இறையச்சத்தை கயிறாக்கி ஊரை இறுக்கிக்கட்டுவது.

விளைவுகள். எதிர் விளைவுகள். இரண்டும் முரண்படுகிற போது உருவாகும் புதிய விளைவுகள் இதுதானே இயக்கவியலின் அடிப்படை.. இறைவனின் மீது அச்சம் கொண்டு மத நம்பிக்கையின் அடிப்படையில் எந்த எதிர் கேள்விகளும் கேட்காமல் இருந்தவர்தான் மீரான்பிள்ளை. தன் மகனைக் கூட காபிரா திரியாதடா எனத் திட்டியவர்தான். கருவாட்டுக்கு விலை மார்க்கெட்ல விழுந்து போச்சு. கச்சை கட்டி கப்பல்ல போன சரக்கு கடல்ல கவிழ்ந்து போச்சு எனச் சொன்ன போது கூட இறைவன் விட்ட வழி என கடந்து போனவர்தான். தன்னுடைய மனைவியின் தாலியை அடகு வைத்து வியாபாரத்தை நடத்திக் கொண்டு நகர்ந்தவர். கல்யணத்திற்குக் காத்திருக்கும் மகளுக்காக எதுவும் செய்ய முடியவில்லையே எனத்தடுமாறினாலும் அல்லாட்ட ஒப்படைச்சிருக்கேன், அவன் பார்த்திடுக்குவான் என்று இருந்தவரை அசைக்கிறது துர்மரணங்கள்.

கடல்புரத்தில் பெரும் மரியாதைக்குரியவராக இருந்த ஐதுரூஸ் முதலாளி மரித்துப் போகிறார். அவர் அன்பு கருணை யாவும் இறைவன் மனிதனுக்கு அளித்தவை என்பதில் உறுதியாக இருந்தவர். கடன் கேட்டுப் போன மீரான் பிள்ளையிடம் பணம் இல்லை என்று சொல்ல மனமின்றி பத்துப் பவுன் ஆரத்தைக் கொடுத்து செட்டியார்ட்ட அடகு வச்சு பணத்தை வாங்கி வியாபாரம் செய்யுங்க என்கிறார்… பதட்டமாகி விடுகிறார் மீரான் பிள்ளை. இவருக்கு மட்டுமல்ல, சிறு வியாபாரிகளுக்குப் பக்கபலமாக இருந்த பெரிய வியாபாரி அவர். அவருடைய வியாபார நிறுவனத்தை சூழ்ச்சியில் வீழ்த்துகிறார் கொழும்பு அ. பி.ஊ..முதலாளி. அவ்வளவுதான் எல்லாவற்றையும் இழந்து விட்ட பிறகு எப்படி உயிர் தரித்திருக்க என தற்கொலை செய்கிறார். அது ஊரையே அச்சத்தில் ஆழ்த்துகிறது. அவரோடு இருந்த விசுவாசமான வேலைக்காரனும் மரித்துப் போகிறான். கேள்வி கேட்காமல் இருப்பவர்களை அப்படியே வைத்துக் கொள்வது, எதிர்க் கேள்வி கேட்பவர்களை அல்லது போட்டியாக வியாபாரம் செய்பவர்களை சூழ்ச்சியாக வீழ்த்துகிறான் கொழும்பு முதலாளி. இது இன்று நடக்கும் விசயமல்ல. தன்னுடைய தந்தைக்கும் மட்டுமல்லாது ஊரில் பலபேரை கடனாளியாக்கி மரணத்தைப் பரிசளிக்கிறான் முதலாளி. தன்னுடைய மகன் நியாயத்தைக் கேட்டதற்காக அவனுக்கு பள்ளிவாசல் தலைவர் கொடுந்தண்டனை தரப் போவதாக தண்டோரா போடுகிற போது எரிச்சல் அடைகிறார் மீரான். இறைவனை நிந்தனை செய்கிற, எளிய மக்களை வஞ்சிக்கிற கொழும்பு முதலாளியல்லவா தண்டிக்கப்பட வேண்டியவன். அவனுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் பள்ளிவாசல் தலைவர் பரீதுப் பிள்ளைக்கு இறைவன் என்ன தண்டனை தரப் போகிறான். கடனுக்காக குடியிருப்பைக்கூட எழுதி வாங்கிடும் இவர்களுக்கு தண்டனையே இல்லையா என்று மருகுகிறார். தமிழ் இஸ்லாம் வாழ்வினை கூர்ந்து கவனித்து வாசிக்கப்பட்ட முதல் வர்க்க அரசியலைப் (உழைப்புத் திருட்டைப்) பேசிய நாவல் துறைமுகம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நாட்களை காட்சியாக கடத்துகிறது நாவல். ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் அருகமைந்த கேரளத்தில் நடந்ததையும், அதனை அடக்கி ஒடுக்க பிரிட்டிஷ் போலீசும், சி.பி. சர்க்காரின் ஆயுதம் தாங்கிய போலிசார் நடத்திய காட்டுத்தர்பாரையும் காட்சிப்படுத்த தவறவில்லை. காங்கிரஸ், காந்தி, ஜின்னா, சி.பி. அரசாங்கம், கதராடை என நாவலுக்குள் காலம் வரி வரியாக கரைந்து நகர்கிறது. அடிக்கடி ஊருக்குள் இருந்து காணாமல் போகிற காசிம் காங்கிரஸ் மாநாட்டில் மிக முக்கியமான தீர்மானத்தை முன் மொழிகிறான்.” தொழிலாளி வர்க்கத்தை அடக்கி ஒடுக்க முயலும் அடக்குமுறை ஆட்சிக்கெதிராக ஆயுதம் தாங்கிப் போர்க்களத்தில் இறங்கிய தொழிலாளர் வர்க்கத்தை சுட்டு வீழ்த்திய சி.பியின் ஆட்சியைக் காங்கிரஸ் கட்சியின் மண்டலக் கமிட்டி கண்டிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த உழைப்பாளி மக்களைத் திரட்டும் பணியினை காசிம் செய்யத் துவங்கிய காட்சி வாசகனுக்கு உணர்த்துவது பிறகான நாட்களில் காசிம் ஒரு கம்யூனிஸ்டாக உருமாறியிருப்பான் என்பதைத்தான்.

அரசாங்கம் சுட்டு வீழ்த்துகிறது. கொடுங்காலராவிற்கு மக்கள் கொத்து கொத்தாய் மடிகிறார்கள். கொழும்பு வியாபாரியும், பள்ளிவாசல் தலைவரும் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு மக்களை வஞ்சிக்கிறார்கள். கபர்ஸ்தானிற்கு (கல்லறை) குழிவெட்டுபவர்கள் அழுத்துச் சலிக்கும் அளவிற்கு மரணங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

இதையே தோப்பில் குறியீடாகக் காட்டுகிறார். கபர்ஸ்தானில் உயர்ந்திருக்கும் மரத்தில் இருந்து மய்யத்துக் (பிரேதம்) குருவிகள் கீச்சுடுகின்றன. அது உற்றுக்கேட்கும் போது ”குழிவெட்டடா… குழிவெட்டடா…” என்றே சப்தமிடுவதாகத் தோன்றுகிறதாம். இப்படி நாவலுக்குள் பல அபூர்வமான குறியீடுகள் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

எளிய மக்கள் துயருறும் போது அவர்கள் எதிர் கொள்ளும் காட்சிகள் இப்படி இருக்கிறது. வானத்தில் காக்கைகள் பறந்து வருகின்றன. கடற்புரத்தில் சிதறிக்கிடக்கும் கருவாட்டையும் மீனையும் கொத்தித்திரிகின்றன. சிறியவரோ, பெரியவர்களோ காக்கைகளைக் கல் கொண்டு எறிகிற போது காக்கைகள் பறந்து விடுகின்றன. எளிய மக்கள் அப்போது நினைத்துக் கொள்கிறார்கள். காக்கைகளுக்கு இறக்கைகள் இருக்கிறது. பறந்து விடுகின்றன. பள்ளிவாசல் தலைவரும், கொழும்பு முதலாளியும் அவருடைய கணக்கனும் நம்மைத் துன்புறுத்துகிற போது நாம் ஏன் இங்கேயே உழன்று கிடக்கிறோம் என நினைத்துகொள்கிறார்கள்.

நாவலின் கடைசிப்பகுதியில் காசிம் ஊரையே தைரியப்படுத்துகிறான். அப்போது அவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். காசிமிற்கு மட்டுமல்ல, எளிய மக்கள் யாவருக்கும் புதிய றெக்கைகள் முளைக்கத் துவங்குகின்றன. இதுவரை தம்மீது நிகழ்த்தப்பட்ட சகல வன்முறைகளையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல் என்னும் றெக்கைகளே அவை…

மனப்பிறழ்வாளன் போல நாவலுக்குள் வரும் பீர் எனும் சிறுவன் காசிமிடம் கேட்கிறான் சாச்சா (சிறிய தந்தை) தாய் வேர் அறுக்ததுன்னா என்ன சாச்சா ?….. இந்த பிரிட்டிஷ் சர்க்கார், அவர்களுடைய போலீஸ்,, சி.பி.அரசாங்கம் அவர்களுடைய போலீஸ் இதுவெல்லாம் நம் கண்களுக்குத் தெரிபவை. பள்ளி வாசல் தலைவர், கணக்கன்கள் இவர்கள் வெறும் சல்லிவேர்கள்தான். ஊரையும் மக்களையும் நிர்க்கதியாக்குகிற அ.பி.ஊனா என்கிற கொழும்பு முதலாளிதான் ஆணிவேர். அவன் தான் தாய்வேர், அவனைப் போன்ற பெரும் முதலாளிகள்தான் அழித்து ஒழிக்க வேண்டிய தாய்வேர் என்கிறான் காசிம்.

புரிந்ததோ புரியவில்லையோ சாச்சா கவலைப்படாம போங்க சாச்சா, நான் தாய் வேர் அறுப்பேன்..” என்கிறான் பீர்.

காவல்துறை கைது செய்து அழைத்துப் போகும் போது முகம்மது காசிம் மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்று நூலை அனைத்தடி நாவலில் இருந்து வெளியேறுகிறான். நாவலின் துவக்கம் முதல் பல்வேறு இடங்களில் முன்னங்கால்களை சேர்த்துக் கட்டப்பட்ட கழுதை தாங்கித் தாங்கி வந்து கொண்டேயிருக்கிறது. துயருகிற மக்கள் அதை தங்களைப் போலானது போல நினைத்துப் பாவம் எனக் கொள்கிறனர். வெம்பரப்பாக விரிந்து கிடக்கும் கடல்புரத்தைத் தவிர எதுவும் இல்லை என்றான பிறகே மீரான் பிள்ளை கழுதையின் கால்கட்டை அறுத்து எறிகிறார். விடுதலை கழுதைக்கு மட்டுமல்ல. எளியமக்ளுக்கும்தான்…

இழப்பதற்கு எதுவுமற்றவர்களின் கோபமும் வைராக்கியம் எவ்வளவு பெரிய அதிகாரத்தையும் எதிர்த்து நிற்கும் அதையே தோப்பில் மொத்த நாவலையும் குறியீடாக்கி ஒற்றை வரிக்குள் சொருகித் தந்திருக்கிறார்.…

உரையாடல் தொடரட்டும்…

பின் குறிப்பு..

சினிமாக் கலைஞர்கள் எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து சிலவற்றை பயன்படுத்தும் போது எழுத்தாளர்களுக்கு நன்றி தெரிவிக்கலாம் தவறில்லை. இந்தக் கழுதைக் குறியீடு எனக்குப் போலவே, உங்களுக்கும் சமீபத்திய ஒரு திரைப்படத்தினை ஞாபகமூட்டலாம். தோப்பிலின் துறைமுகம் தொன்னூறில் எழுதப்பட்ட நாவல் என்பதை நான் உங்களுக்கு மறுபடியும் கட்டாயம் சொல்ல வேண்டும்….

Latest

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த முப்பது ஆண்டுகளில், நம்மை சந்திக்க வைத்துள்ள நிலை ஓரளவு நாம் அறிந்து வைத்துள்ளோம். பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, பொருட்கள் வீட்டுக்கு,...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here