சிதைவுகளின் சொற்கள்..
வரலாறு விசித்திரங்களும் மர்மங்களும் நிறைந்தது. வரலாற்றை வாசிப்பதில் இருக்கும் ஆர்வம் வாசகர்களிடம் இன்றைக்கும் குறையவில்லை. அதனால்தான் எழுத்தாளர்கள் நூறு வருடங்களுக்கும் மேலாக வரலாற்று புனைவாக்கத்தை எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். அரசுகள் கட்டி எழுப்பப்பட்ட கதை. அதிகாரத்தை ருசிக்க நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் கதை. அதிகாரத்தில் நீடித்திருக்க அறமிழந்து போன அரச குடும்பங்களின் வக்கிரக்கதைகள் என எழுதித் தீர்க்க முடியாதவையாக இன்றுவரையிலும் இருந்து வருகின்றன. கோட்டை, கொத்தளங்களின் வஞ்சகக்கதைகள். இப்படியான கதைகளின் மீது ஈர்ப்புடன் பெருந்திரளான மக்கள் இருப்பதற்கு பின்னால் ஒரு உளவியல் கூறு படிந்திருக்கிறது. அது பெரும் கதையாடல்கள் விளைவிக்கும் மயக்கமான மனநிலையின் வெளிப்பாடு.
ஏடறிந்த வரலாறுகள் யாவும் வர்க்கங்களின் வரலாறே, ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களின் வரலாறே என மார்க்ஸிய மூலவர்கள் உரைத்து நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அதிகாரம் கைமாறி கைமாறி வந்த கதைகளையே நாம் வரலாறு என இதுநாள்வரை வாசித்துக் கொண்டிருக்கிறோம் எனும் புரிதல் வருவதற்கே நீண்ட காலம் ஆகிவிட்டது. சபால்ட்டன் ஸ்டடிஸ் எனும் புதிய சொற்சேர்க்கையும், ரனஜித்குகா போன்றோர் வரலாற்றை வாசிப்பதற்கான புதிய முறைமைகளை உருவாக்கி இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிறகும் வரலாறு குறித்த வியாக்கியானங்களில் மாற்றம் ஏற்படத்துவங்கியது. அது இலக்கியப் பிரதிகளுக்குள்ளும் மாற்றங்களை உருவாக்கியது.
பாட்டிகளின் குரல்வளைக்குள் இருந்து தெறித்துச் சிதறிய வார்த்தைகளுக்கு அதிகாரத்தை முறிக்கும் வல்லமை மிகுந்திருப்பதை பின் காலனிய கதையாடல்கள் உலகெங்கும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. இலக்கிய உலகம் இதுவரை சொல்லப்படாத கதைகளை அதனதன் நிறத்தில் காணத் துவங்கியது. புறந்தள்ளப்பட்டவர்கள், வரலாற்றுப்பக்கங்களில் நடமாட இடம் மறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டு கிடந்தவர்கள், எங்கிருந்தோ வந்தவர்ககள் எனச் சொல்லிச் சொல்லி நம்ப வைக்கப்பட்டு விளிம்பிற்கும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் என பலரும் அவரவர் கதைகளை சொல்லத் துவங்கினர்.
ஒருவிதத்தில் இது அதிகாரத்தின் ஒற்றைத்தன்மையை கலைத்துப் போட்ட பன்மைத்துவத்தின் இலக்கிய செயல்பாடு. கருப்புப்பிரதிகள் எனவும், விளிம்பின் கதையாடல்கள் எனவும் இப்போது புரிதலுக்கு உள்ளாகியிருக்கும் சமகாலத்தின் வரலாற்றுக்கதைகள் எங்கும் எளிய மக்களின் சிறுமூச்சு கேட்கத் துவங்கியிருக்கிறது. இந்தக் கதைகள் எங்கும் நிறைந்திருப்பது மனிதகுலத்தின் வாதைகளும், துயரங்களும் ,அவர்களின் சாகசங்களுமே..எழுத்தற்ற காலத்தின் தகவல்கள் மனித மூளையின் மடிப்புகளில்தான் சேகரமாகியிருக்கின்றன. தன்னுடைய ஆழ்மனதின் நினைவுகளை வழிவழியாக கடத்திக் காத்து வைக்கும் பழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். அது இந்த நிலத்தின் விசேச தன்மையும்கூட. தங்களுடைய மூதாதையரின் ஞாபகங்களை எழுத்தாக்கிட நடந்த முயற்சியின் விளைவே எழுத்தாளர் அர்ஷியாவின் ஏழரைப்பங்காளி வகையறா..
ஞாபகங்களைத் தன்னுள் நிறைத்து படுத்திருக்கும் வசீகர சர்ப்பம் மதுரைப் பெருநகரம். மலைப்பாம்பென நீண்டு துயிலும் மதுரையின் நினைவுகளில் எத்தனை கதைகள். விஜயநகரப்பேரரசின் ஆதிக்கத்தையும் வீழ்ச்சியையும் இந்த நகரமெனும் சர்ப்பம்தான் தின்று செரித்திருக்கிறது.
அரசனையே திடுக்குறச் செய்த கள்வர்களின் கதையும் மதுரைக்குள் சேகரமாகிக் கிடக்கிறது. மதுரை டவுன்ஹால் ரோட்டின் வசீகர வெளிச்சத்திற்கு தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த எழுத்தாளர் ஜி.நாகராஜனின் கடைசி மூச்சையும் பத்திரப்படுத்தியிருக்கிறது இந்தப்பெருநகரம். இந்த மதுரையின் ஞாபகங்களில் ஒரு செதிலாயிருக்கிற இஸ்மாயில் புரத்தின் கதையையே எழுத்தாளர் அர்ஷியா எழரைப்பங்காளி வகையறா எனும் நாவலாக்கியிருக்கிறார். மதுரை இஸ்மாயில் புரத்தின் வம்ச சரித்திரம் மிக நீண்டது. அதனை வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் கதையின் வழியாக சொல்கிறார் அர்ஷியா.
இஸ்மாயில்புரம் உருவான கதை குறித்து மதுரைக்குள்ளேயே மூன்றிற்கும் மேலான கதைகள் இருக்கின்றன. வேர்களைத் தேடிய பயணத்தில் பல இஸ்லாமிய குழுக்கள் ஆர்வத்துடன் இயங்குகின்றன. உருது பேசும் முஸ்லிம்கள் “நாம் தான் நபிவழித் தோன்றல்கள். தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமியர்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் இஸ்லாமானவர்கள் “எனச் சொல்வதை நானே கேட்டிருக்கிறேன். இஸ்மாயில் புரத்தினை உருவாக்கிய இஸ்மாயிலைப் பற்றி ஒற்றைக்கதையில்லை. கதைகள் மட்டுமல்ல, வாழ்க்கை முறைமைகளும் கூட பன்மைத்துவமானவைதான்.
“ஹைதர் அலி ஒரு படைய தெக்குநோக்கி அனுப்புனாரு.அப்ப மதுரைய கருப்புராஜான்னு ஒருத்தன் ஆண்டுக்கிட்டு இருந்தான். ஹைதர் அலி படை போர்ல ஜெயிச்சு கருப்பு ராசாவ துரத்திட்டு இஸ்மாயில தாசில்தார் ஆக்கிருச்சு.”.இது ஒரு வெர்சன். மற்றொரு கதை கிட்டத்தட்ட வந்தார்கள் வென்றார்கள் தொடரைப் போலான தன்மையில் இருக்கிறது. வடக்கிருந்து வந்த படையில குதிரை வீரனா இருந்தவராம். மதுரை மன்னர்கள எதிர்த்து நடந்த சண்டையில கோயில் கொள்ளை நடந்தது. அப்ப வடக்கேயிருந்து வந்த படை காயம்பட்டவங்கள விட்டுட்டு போயிருச்சு. அப்படி காயம்பட்டவர்தான் இஸ்மாயில். இங்கேயே கிடந்து இந்த ஊர்க்கார பொண்ணையே கல்யாணம் கட்டிக்கிட்டு இஸ்மாயில் தாசில்தாராவும் ஆகிட்டாரு.
அது மட்டுமில்ல இவரோட பேசி பழகின தமிழ் ஆட்கள் அவரை கோயில் நிர்வாகக் கமிட்டில போட்டாங்க. அப்போது வெள்ளைக்காரனுக்கு இந்து முஸ்லீம்களோட ஒற்றுமை தேவையா இருந்ததால அவுங்க இஸ்மாயில தாசில்தாரா ஆக்கிட்டாங்க. இதுவும் மக்கள் சொல்கிற கதைதான். அடிப்படையில் உருது பேசும் முஸ்லிம்கள் மதுரைக்கு வந்து சேர்ந்ததற்குப் பின் ஹைதர் அலியின் படையெடுப்புச் சுவடுகள் பதிந்திருப்பதையே வரலாற்றுக் குறிப்புகளும் உணர்த்துகின்றன.
இஸ்மாயில் தாசில்தாரின் வம்சவழிக்கொடியின் ஒரு கிளைக்கதையின் வழியாக ஏழரைப் பங்காளி வகையறா எனும் தனித்த குலத்தின் பாடலை பாடியிருக்கிறார் அர்ஷியா. பிள்ளை வரம் வேண்டி இஸ்லாமியர்கள் தர்ஹாக்களையும், அவுலியாக்களையும் தேடிப் போகிறார்கள். நேர்ச்சையில் விளைந்தவனே இந்தக் கதையை நகர்த்திச் செல்லும் சையத் தாவூத்.
ஏர்வாடி,புதுக்கோட்டை, நாகூர், பெரிய பட்டிணம், திஷினாப்பள்ளி, ஆத்தங்கரை பீமாப்பள்ளி என தர்ஹா தர்ஹாவாப் போயி அவுலியாக்கள்ட்ட கையேந்துனாங்க. பெரிசா எதுவும் நடக்கல. பிறகு யாரோ சொன்னதக் கேட்டு முத்துப்பேட்டை தர்ஹாவுக்கு ஒத்தக் கால்லயே பயணம் போனாங்க. வேண்டுனாங்க. அப்ப பொறந்தவந்தான் இந்த சையத் தாவூத்.. இஸ்மாயில் தாசில்தாரின் கொடிவழியில் பிறந்த ரஜாக் சாய்புவின் மகனான கஸிதே பாடல் கலைஞன் சையத் தாவூத்தின் கதையே ஏழரைப்பங்காளி வகையறா எனும் நாவல்.
ஒருவிதத்தில் தமிழில் எழுதப்பட்ட முதல் உருது பேசும் முஸ்லிம்களின் கலாச்சார ஆவணமாகவும் நாவல் அமைந்திருக்கிறது. தாவூத்தின் கல்யாணக் காட்சிகள் ஒரு நபிவழித் திருமணம் எப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கான காட்சியாக நாவலில் வருகிறது. பொண்ணுகிட்ட ஒப்புதல் கேட்கிற வழக்கம் நபிவழித் திருமணத்தில இருந்திருக்கு. அது இன்றுவரையிலும் இஸ்லாமிய திருமணங்களில் நடக்கிறது. பெயரளவுக்குத்தான் அதை இப்போது கடைபிடிக்கிறார்கள் என்ற போதும் , பொண்ணுகிட்ட கபூல் கேக்கறப்போ பொண்ணு கபூல் இல்லைன்னு சொல்லிட்டா, அதுக்கப்புறம் நிக்காஹ் நடக்காது.
முத்தலாக் குறித்தும் பொது சிவில் சட்டம் குறித்தும் கோபாமாக பேசிக் கொண்டிருக்கும் இந்து அடிப்படைவாதிகளுக்கு கபூல் பற்றியெல்லாம் நிச்சயம் தெரியாது. நாவல் முழுக்க பெண்உலகம் குறித்த, மிகவும் குறிப்பாக இஸ்லாம் பெண் உலகம் குறித்த நடைமுறைகள் தகவல்களாக வந்து கொண்டேயிருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஏன் இஸ்மாயில் தாசில்தார் குடும்பத்திற்கு ஏழரைப்பங்காளி வகையறா எனும் பெயர் வந்தது என்பதை இந்த பொது சிவில் சட்ட ஆதரவுக் கோஷ்டிகளிடம் அவசியம் சொல்ல வேண்டும்.
இஸ்மாயில் தாசில்தாருக்கு மொத்தம் எட்டுபிள்ளைகள். ஏழுபேர் ஆம்பளை, ஒரே ஒரு பொண்ணு. தன்னுடைய கடைசி நாளை கணிச்ச இஸ்மாயில் சாய்பு எல்லா குழந்தைகளையும் அழைத்தார். சொத்த சரி பாதியா பிரிச்சிருக்குன்னாரு. எல்லோரும் ஒருவேளை பாதிய தான் வைச்சுக்கிட்டு மீதத்தை குழந்தைகளுக்கு தரப் போறார்ன்னு நினைச்சாங்க, ” எல்லாரும் அவரு வாயில இருந்து அடுத்து என்ன வார்த்தை வருதுன்னு எல்லோரும் அவர பார்த்தாங்க.” எப்பா அந்த ஒரு அரைப்பங்க ஏழாப் பிரிங்கன்னாரு. என்னது ஏழா, பிள்ளைங்க எட்டுங்கிறது மறந்து போச்சான்னு பசங்க நினைச்சாங்க. ஆம்பளைப்பசங்க எல்லோருக்கும் ஏழுபங்குள ஒரு ஒரு பங்கு. அப்ப பெண் குழந்தைக்கு என எல்லோரும் யோசித்த போது அதான் பிரிக்காத முழு அரைப்பங்கு இருக்குல்ல அதுதானப்பா பெண்ணுக்கு“””
ஊரே திகைச்சிருக்கு, இப்பிடி சொத்தில பெண்களுக்கு சரிபாதி பிரித்த பிறகே ஆண்களுக்கு சொத்தில் பங்கு பிரிக்கும் வழக்கம் மதுரை இஸ்மாயில் புரத்திலும், காமராஜர் புரத்திலும் உருது பேசும் முஸ்லிம் குடும்பங்களில் இருந்து வருகிறது. அதனால்தான் அந்தக் குடும்பத்தின் வம்சாவழிப் பெயரான ஏழரைப்பங்காளி வகையறா எனும் பெயர் நீடித்து நிலைத்திருக்கிறது.
ஏழரைப்பங்காளி வகையறாவின் தலைமுறைக் கதைகளுக்குள் நாவல் பயணிக்கவில்லை. மாறாக அவற்றின் வழிக்கொடியான கஸிதே பாடல் கலைஞன் தாவூத்தின் வாழ்க்கை கதைகளின் வழியாக மதுரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் உருது முஸ்லிம்களின் தனித்த பண்பாட்டு வரலாற்றை வாசகனுக்குள் கடத்துகிறது.
நாவல் நிகழும் நிகழ்விடம் உருது பேசும் முஸ்லிம்களின் தனித்த நிலமாக இருந்த போதும் நாவலுக்குள் இயங்கும் மொழியாலும், அது காட்டும் வாழ்வின் நுட்பங்களாலும் நாவல் பொதுத்தன்மையையும் அடைகிறது. மனித மனங்களுக்குள் விரவிக்கிடக்கும் காமம், சூழ்ச்சி, வஞ்சம், காத்திருந்து பழி தீர்த்தல் என்பவற்றை மட்டும் நாவல் காட்சிப்படுத்தவில்லை. இந்த கருப்பிருள் உறைந்து கிடக்கும் மனதிற்குள்தான் அன்பு, கருணை, பற்றற்று இருத்தல், சக மனிதர்களின் மீதான பொய்மையற்ற பாசம் போலான கல்யாண குணங்களும் நிறைந்திருக்கிறது.
இதனை இரண்டு நேர் எதிர் கதாபாத்திரங்களின் வழியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். தாவூது, குத்தூஸ் எனும் இரண்டு மனிதர்கள், அவர்களின் நடவடிக்கைகள் என நாவலை நேர்கோட்டில் வாசித்தால் நல்லவன் அப்பாவியாகவும், ஏமாந்த சோனகிரியாக இருப்பதும் கெட்டவன் தந்திரத்தாலும் சூழ்ச்சியாலும் நம்பியவர்களை காத்திருந்து வீழ்த்துபவனாகவும் இருக்கிறான் எனும் புரிதலுக்கு மட்டும் வர முடியும். இது ஒற்றை வாசிப்பின் உபவிளைவு.
நாவல் எப்போதும் பன்முக வாசிப்பிற்கான திறப்பினை தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் இலக்கிய வகைமை. எப்போதும் தேர்ந்த நாவல்களில் உபகதைகள் வலிமையானவையாக அமைந்துவிடும். தன் அழகில் மயங்கி கிடந்த குல்சும் எனும் இளம்பெண் சித்ராவாக மாறிப் போகிறாள்.
இஸ்மாயில்புரத்தாரே இன்னும் அவளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கணவன் சிறைக்குச் சென்ற பிறகு அரிசி ஆலை முதலாளியிடம் அடைக்கலமாகி, பின் கணவனாலேயே படுகொலை செய்யப்படுகிறாள் இஸ்லாத்திற்கு மாறிய முதுகுளத்தூர் பெண். நாவல் உணர்த்துவது மதமாற்றம் வெகு இயல்பாக நடப்பதும், அதை ஏற்க மறுத்து தடுமாறிக்கிடப்பதும் நம் நிலத்தில் ஒரு தொடர்கதைதான் போல.
ஏழரைப்பங்காளி வகையறா தாவூத்தின் கதையா ? அல்லது பசியைத் துரத்திட நல்லதங்காளைப் போல தன்னுடைய குழந்தைகளை எல்லாம் அழைத்துக்கொண்டு ஊரை விட்டே போகிற ஆபில்பீபியின் கதையா? ஆபில்பீபிக்கு பத்துக்குழந்தைகள். ஆண்களின் இச்சையை எழுதிடக்கிடைத்த வெற்றுக்காகிதமா பெண்உடல் எனும் சிந்தனை வாசகனுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. தாவூத்திற்கும் அவளுக்குமான நிக்காஹ் நடந்த காட்சிகள் எல்லாம் அவளுக்குள் நகர்கிறது. மகாராணியாக வாழலாம். ஏழரைப்பங்காளி வகையறாவின் மருமகள் நீ என பெருமையாக சொல்லகிறார்கள்.
அப்படித் துவங்கிய அவளுடைய வாழ்வு, அப்படியே தொடாரவில்லை. வறுமை பிடிங்கித் திங்க அடுத்த வேளை சாப்பாட்டிற்கே தடுமாறிப் போகிறது மொத்த குடும்பமும். அடுத்த வேலை சாப்பாட்டிற்காக சொந்தக்காரர்களின் வீட்டில் எடுபிடி வேலை செய்கிறவளாக ஆபில்பீபி மாறிப்போகிறாள். எப்போது வருவான் எங்கே போனான் என தாவூத்தை பிள்ளைகளும் ஆபில்பீபியும் நாவல் முழுக்க தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்.
வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் வலிகளையும் துயரங்களையும் உலகெங்கும் இலக்கியப்பிரதிகள் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இன்னும் தீர்ந்தபாடில்லை. தீராத பெருந்துயர் அது. ஏழரைப்பங்காளி வகையறாவிற்குள் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாழ்வின் சகிக்க முடியாத பகுதிகளை கடக்க வாசகமனம் தடுமாறுகிறது. தான் கட்டி ஆண்ட நிலம் நீட்சிகள் எல்லாம் அதன் மதிப்பறியாத மயக்கத்தில் தாவூத்தை விட்டே போய்விடுகிறது. ஊரையும் ஜமாத்தையும் நிர்வகிக்கும் குத்தூஸ் தன்னுடைய உறவினான தாவூத்தை நம்ப வைத்து தலைகுப்பற கவிழ்க்கிறான். அவனை நிர்க்கதிக்குள்ளாக்குகிறான்.
வறுமையின் உச்சம் வீட்டின் பண்ட பாத்திரங்களக்கூட விற்கும் நிலைக்குப் போவதுதான். இங்கு அதுவும் நடக்கிறது. அதிலும் தாவூத்தின் மகனான பள்ளிச்சிறுவன் உசேன் பள்ளிக்கூடத்தில் போடப்படும் மதியச்சாப்பாட்டிற்காக தன்னுடைய ஈயத்தட்டை தேடுகிறான். அதுவும்தான் போய்விட்டது. உசேன் வரும் பள்ளிக்கூடக்காட்சிகள் சோக காவியமாக நாவலுக்குள் கரைந்து கிடக்கிறது. கண்ணீரோடு கடக்கிறோம் இந்தப்பகுதிகளை.
ஆயிரம் தவ்ஹீதுகள் முளைத்து வந்து வைதீக இஸ்லாத்தை பரப்புரை செய்தாலும், இந்த மண்ணிற்கான வாழ்வியல் முறைகளில் இருந்து ஒருபோதும் தமிழக இஸ்லாமியர்களை அகற்றிட முடியாது. ஷிர்க் வைக்காதீர்கள். அடக்கஸ்தலங்களை வழிபடாதீர்கள் எனும் குரல் நிற்காமல் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.
குழந்தை பிறந்ததும் அவுலியாக்களை ஓதச்சொல்வதும், புள்ளையை தர்ஹா வாசலில் கிடத்தி பகஷ் செய்வதும் தமிழ்நிலமெங்கும் இன்றுவரையிலும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. நாவல் முழுக்க தமிழகத்திற்கு மட்டுமேயான தனித்த பண்பாட்டு அடையாளங்கள் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதிலும் குறிப்பாக நாவலுக்குள் காட்சிப்படுத்தப்படும் மதுரை தெற்குவாசல் மாவ்சுவானி தர்ஹா சந்தனக்கூடுத் திருவிழா தனித்துப் பேச வேண்டிய, கவனிக்க வேண்டிய பகுதியாகும்.
(படம்:மதுரை தெற்குவாசல் மாவ்சுவானி தர்ஹா சந்தனக்கூடுத் திருவிழா)
திருவிழாக்களும், கொண்டாட்டங்களும்தான் மக்களை மதத்தின் கூட்டிற்குள் இறுக்கி வைத்திடும் கருவிகள். கொடியேற்றத்திலிருந்து கொண்டாட்டாம் துளிர்விடத்துவங்கிவிடுகிறது. அதிலும் தெற்குவாசல் தர்ஹா தேரோட்டத்தின் ஒருநாளை முழுக்க முழுக்க பெண்களுக்கான நாளாக உருமாற்றியிருக்கிறார்கள். தெருவின் வழித்தடம் முழுவதும் அடைக்கப்படும். ஆண்களுக்கு அன்று தெருவில் மட்டுமல்ல வீட்டிற்குள்ளும்கூட அனுமதியில்லை . அன்று அந்த தெரு முழுக்க பெண்களுடைய ராச்சியம்தான். அவர்கள் பர்தா நீக்குகிறார்கள். முகம் மறைத்துக் கிடந்த துணிகளை நீக்குகிறார்கள். தன் இஷ்டம் போல் இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் நீ இஸ்லாம் பொண்ணு அடக்க ஒடுக்கமா இருக்கனும் என புத்தி சொல்லிக் கொண்டேயிருக்கும் அப்பாவோ அண்ணன்களோ இல்லை.
அம்மா உடன் இருக்கிறாள், ஆனால் அவளுக்கு அன்று மட்டும் சாத்தியமாகும் தனிச்சுதந்திரத்தின் மீதான பெரும் விருப்பம் இருக்கவே செய்கிறது. இதற்கு வயதெல்லாம் ஒருதடையில்லை. அம்மாக்களும் , அவர்களுடைய சேத்திக்காரிகாளோடு சேர்ந்து கொண்டு சிரிப்பும் களிப்புமாக அந்த நாளை நகர்த்துகிறார்கள். இளம் பெண்களின் மாய உலகமாக விரிகிற இரவின் கதையே சந்தனக்கூடு திருவிழாக்கள் எனும் புதிய பண்பாட்டு வாசிப்பினை ஏழரைப்பங்காளி வகையறா வாசகனுக்குள் ஏற்படுத்தும். காதலர் தினக் கொணடாட்டங்களை எதிர்த்து கலகம் செய்யும் காவிகளும், சந்தனக்கூடு திருவிழாக்களை நிறுத்த வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் மதஅடிப்படைவாதிகளும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள் நிறைய இருக்கிறது .இந்த மத அடிப்படைவாத கலாச்சார காவலர்களின் மனமும் சிந்தனையும் ஒன்றுதான். அவர்களுக்கு பெயர்தான் வேறு வேறாக இருக்கிறது.
நாவலின் பலமே புறத்திற்குச் சமமாக அகத்திற்குள்ளும் பயணிக்கும் அதன் தனித்தன்மைதான். நாவலுக்குள் வரும் பாஜான் மிகவும் பலவீனமானவன். அது அவனுடைய இயல்பல்ல. அவனுடைய அக்காளின் கணவனால் அப்படி ஆக்கப்பட்டவன். சொத்து பத்தோடு இருந்தவன்தான் பாஜான். எல்லாவற்றையும் குத்தூஸ் சொந்த மச்சினனாக இருந்த போதும் எடுத்துக் கொள்கிறான். பாஜானை ஏவல்காரானாக வைத்தும் கொள்கிறான். நாவலுக்குள் பாஜான் வரும் காட்சிகள் எங்கும் குத்தூஸ் துப்புகிற எச்சியைப் பிடிப்பதற்காக எச்சிப்பணிக்கத்தோடு காத்துக்கிடக்கிறான். குத்தூஸின் கருப்புக்கால்கள் எப்போது மிதித்து தள்ளுமோ எனும் பயத்துடனே அவனுடைய கால்களைப் பிடித்துக் கொண்டேயிருக்கிறான்.
எப்போதும் மனித மனம் தனக்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும். அப்படி அமைகிற போது அது கச்சிதமாக காரியமாற்றும். ஒரு குளிர் இரவில் சிறுநீர் கழிக்க உட்கார்ந்து இருக்கும் குத்தூஸ் மீது அவன் துப்பி வைத்திருந்த எச்சிலையும் துண்டு பீடிக்குப்பைகளையும் கொட்டுகிறான். நாவலை வாசிக்கும் வாசகன் பாஜான் இத்தோடு நிறுத்தியிருக்கக்கூடாது. முகம் தெரியாத அந்த இருட்டில் குத்தூஸை உருட்டுக்கட்டை கொண்டு நாலு சாத்து சாத்தியிருக்கலாம் என்றே தோன்றும்.
இதே போலான மற்றொரு கதாபாத்திரம் குல்சும். தன் அழகில் தானே மயங்கிக்கிடக்கும் வசீகர பேரழகி அவள். சந்தனக்கூடுத் திருவிழாவின் மறுநாள் ஒரு இளைஞன் அவளிடம் காதலைச் சொல்கிற போது மறுப்பேதும் சொல்லாமல் ஏற்கிறாள். சகலவற்றையும் விலக்கி அவனோடு வெளியேறுகிறாள். இஸ்மாயில்புரமே தேடுகிறது. இது மதக்கலவரமாகிடும் போலான பதட்டம் தெருக்களைச் சூழ்கிறது. தாவூத்தும் தன்னுடைய தம்பி மகளான குல்சுமை தேடி ஊர் ஊராக அலைகிறான்.
அவள் திருப்பதிக்குப் போய் தாலிகட்டி சித்ராவாகிப் போன கதையை அவனிடம் சொல்கிறாள். ஹைதராபாத்தில் அவன் முன் விரிந்த சித்திராவான குல்சுமின் குடும்பக் காட்சிகள் நீண்ட நாட்கள் தாவூத்தின் நெஞ்சைவிட்டு அகலவேயில்லை. தாவூத் சித்திராவின் கதையை ஊரில் யாரிடமும் சொல்லவில்லை. அவளுடைய தந்தையான மஸ்தானிடம் கூட கூறவில்லை. இப்படித்தான் இருப்பான் கஸிதே பாடல்கலைஞனான தாவூத். மனித மனங்களுக்குள் நிறைந்திருக்கும் நேசம் தன்னை வெளிப்படுத்திடும் சந்தர்ப்பத்திற்காக எப்போதுமே காத்திருக்கும். அதற்கு மதங்களையும் இறுகிய பண்பாட்டு கூறுகளையும் எதிர்கொள்ளும் பேராற்றல் உண்டு.
மதுரை இஸ்மாயில்புரம் விதவிதமான மாற்றங்களை அடைந்த போதிலும் அங்கு கொட்டிக்கிடக்கும் உருது மொழிச்சொற்கள் ஹைதர் அலியை ஞாபகமூட்டுகின்றன. இஸ்மாயில் தாசில்தாரின் வழித்தோன்றல்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்களாக இருந்ததையும் நினைவூட்டுகின்றன. தொன்னூறுகளுக்குப் பிறகு உருது முஸ்லீம்கள் மட்டுமல்ல, தமிழ்பேசும் முஸ்லிம்களும் கூட அந்த குழுவில் இல்லை. மதம் ஏற்படுத்திய இந்த மன ஒதுக்கத்தின் கதையை அர்ஷியா இருந்திருந்தால் நிச்சயம் எழுதியிருப்பார். மதுரைக்கார முஸல்மான்களே யாராவது எழுதுங்களேன் மதங்கள் வரைந்திட்ட இந்த குளறுபடிகளின் கதையை. எந்தப்புள்ளியில் நிகழ்ந்தது இந்த விலகல்..….