pirai-4 : piraip pozhuthin kathaikal - m.manimaaran பிறை 4: பிறைப் பொழுதின் கதைகள் - ம.மணிமாறன்
pirai-4 : piraip pozhuthin kathaikal - m.manimaaran பிறை 4: பிறைப் பொழுதின் கதைகள் - ம.மணிமாறன்

பிறை 4: பிறைப் பொழுதின் கதைகள் – ம.மணிமாறன்

தொட்டிக்கடலில் சுழன்றலையும் வண்ண மீன்கள்….

மனிதர்கள் காத்திருக்கிறார்கள்.
மகனின் வருகைக்காக காத்திருக்கும் வாப்பாக்கள்.
அண்ணன் வருவான். அவன் கொண்டு வரப்போகும்
அரபித் துட்டில் நிச்சயம் நிக்காஹ் கைகூடும்
என நம்பி கனவுகளில் உழலும் சகோதரிகள்.
இந்த ரம்ஜான் நோன்பிற்காவது
எனக்கு புதுச்சேலை எடுத்துத் தருவான்
என் பிள்ளை என காத்திருக்கும் உம்மாக்கள்.
சவுதியின் மணற்காற்றின் சூட்டில்
வாழ்வை நகர்த்தும்
இந்திய இஸ்லாமிய
இளைஞர்களின் குடும்பங்கள்
எதிர்நோக்கும் காட்சி சித்திரமே இது.. ..

வானத்தில் அலுமினியப் பறவைகள் பறக்கும் போது மனதெல்லாம் சந்தோசம் பொங்க மிதக்கிறார்கள் வண்ணக்கனவுகளில். இஸ்லாம் சமூகத்தில் சவுதிக்குப் பிள்ளைகளை அனுப்புவது அவர்களுடைய விருப்பத் தேர்வல்ல. பொருளியல் தேவைகள் குடும்பத்தின் கழுத்தை நெறிக்கும் போது குடும்பத்தில் ஒருவனை தியாகியாக்குகிறார்கள். இதுதான் யதார்த்தம். நிஜம். ஆனால் இங்கே சவுதி குறித்தும், இங்கிருந்து போய் வருகிற முஸ்லிம்கள் குறித்தும் மிகைப்படுத்தி சொல்லப்படுகிற கதைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏதோ மதக்கலவரத்தை திட்டமிட பயிற்சிக்குப் போகிறார்கள் என்பதைப் போல சொல்லப்படுகிறது சங்கிகளால். சமீப நாட்களில், அதிலும் குறிப்பாக ஐ.டி. துறையின் வருகைக்குப் பிறகே பெருமளவிலான இந்தியர்கள் வெளிநாடு செல்லத்துவங்கினர்.

கடல் கடந்து போவது சாஸ்திர விரோதம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் குட்டி மைலாப்பூரை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நம் காலத்தின் நிஜம். வெளிநாடுவாழ் இந்தியர் எனும் குடிவகைமை உருவாகி நிலைப்பட்டிருப்பதும்கூட சமீபத்தில்தான். இதற்கு முன்பெல்லாம் குக்கிராமத்தில் இருந்து வெளிநாடு செல்கிறவர்களாக இஸ்லாம் சமூகத்தவர் மட்டுமே இருந்தனர். அதிலும் அவர்கள் சென்று திரும்புவது அரபு தேசத்திற்கு மட்டும்தான். இன்றுவரையிலும்கூட முஸ்லிம்கள் சென்று திரும்பிடும் தேசமாக சவுதியே இருக்கிறது. கூலித் தொழிலாளியாகத்தான் அவர்கள் சவுதிக்கு சென்று திரும்புகிறார்கள். சவுதியின் வெப்பக்காற்றில் உழன்று திரும்பிடும் அவர்கள் மீது கட்டப்பட்டிருக்கும் பொய்கள், குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவைகள்.

“துலுக்கனுக பெட்ரோல் துட்டுல முத்துக் குளிக்கிறானுக. அரபுக்காசுல அவனுக மினுக்கிறதாப் பாரு. பளிங்குக்கல் வீடுகளக் கட்டுறதும், வீட்டுக்குப் பத்துப் பிள்ளைகளைப் பெத்துத் தள்ளுறுதுமா கிடக்காங்க” ..இந்த போலி வசனங்களில் தொன்னூறுகளுக்குப் பிறகு வேறு ஒரு நுண் அரசியல் வசனமும் சேர்ந்து கொண்டது. “”ராமரா, பாபராங்கிற பஞ்சாயத்து இன்னும் முடிஞ்ச பாடில்ல. இத சாக்கா வைச்சுக்கிட்டு ஊருக்குள்ள முளைக்கிற சண்டைகளுக்கும், கோர்ட்டுக்கும் கேசுக்கும் பணம் தாராளமா செலவு பண்றது யாரு?.எல்லாம் அரபிக்காசு””.. இந்திய இஸ்லாமியர்களிடம் புழங்கும் பழமொழியே இதற்கான பதில். வெளியே மினுக்கடி. உள்ள புழுக்கடி…எதிர்க்குரல்கள் உருவாக்கிய பதட்டம் பொதுச் சமூகத்திடம் இஸ்லாமியர்கள் குறித்த ஒரு பகைச் சித்திரத்தை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு முஸ்லிமும் தான் வாழ்கிற ஒவ்வொருநொடியிலும் நான் இந்தியன்தான் என தன்னுடைய தேசப்பற்றை நிருபித்துக் கொண்டே வாழ வேண்டியிருக்கிறது.

இந்த உளச்சிக்கல் ஏற்படுத்தும் மன அவஸ்தைகள் தனித்து எழுதப்பட வேண்டியவை. ஒரு நூலை வாசிக்கும் போது புத்தகம் நம்முன் விரித்துக் காட்டிய சம்பவங்களுக்குச் சமமாக புதிய அல்லது அது வரையிலும் நாம் காணாதிருந்த புதிய திறப்புகளும்கூட உருவாகும். தேர்ந்த நாவல் வாசிப்பின் போது இது நிகழவே செய்யும். எழுத்தாளர் மீரான் மைதீனின் அஜ்னபி நாவலை வாசித்து முடித்த பிறகான மனநிலையின் சொற்களே இவை யாவும். நாவல்களின் வழியாக மைதீன் நிகழ்த்தும் உரையாடல்கள் நம்முடைய ஆழ்மனதில் தேங்கிக்கிடந்த முன் தீர்மானங்களை கேள்வி கேட்கிறது. அரபு தேசத்தில் நம் சகோதரர்கள் படுகிற ஆற்றவே இயலாத துயரங்களின் கதையே அஜ்னபி.

அஜ்னபி

நாவலுக்குள் காட்சிகளாக நம்முன் கடப்பது சவுதியில் அஜ்னபிகள் மட்டும் சேர்ந்து ஒரு கம்யூனைப் போல வாழ்கிற கூட்டு வாழ்கை. அதிலும் குறிப்பாக இந்தியா முழுவதிலும் இருந்து , குறிப்பாக தென்தமிழகத்தில் இருந்தும் கேரளாவில் இருந்தும் குடும்ப வறுமையைப் போக்கிட அரபுதேசத்தில் குவிந்து கிடக்கிறார்கள் பெரும் பகுதி இஸ்லாமியர்கள். இந்திய இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, பாகிஸ்தானியர்களும், பங்களாதேஷிகளும் இன்னும் ஆப்பிரிக்கர்களும் இஸ்லாமியர்கள் எனும் அடையாளத்தால் ஒன்றாக இணைந்து வாழ்கிறார்கள்.
வாழ்வையும் அதன் கொடூர கணங்களையும் துரத்துகிறார்கள். அங்கே இருப்பவர்களின் நில அடையாளம் மெல்ல மெல்ல கரைகிறது. சவுதியில் இரண்டு பிரிவுகள்தான். அவன் இந்தியனாக இருந்தாலும், ஆப்பிரிக்கனாக இருந்தாலும், பாகிஸ்தானியாக இருந்தாலும் அவர்கள் அஜ்னபிகள்தான். அரபிகள், அஜ்னபிகள் எனும் இருவரின் நிலம்தான் சவுதி..

அஜ்னபிகள் தாங்கள் கொண்டாடி தீர்ப்பதற்காக ஒவ்வொரு வியாழக்கிழமையையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். (சொந்தமாக தயாரித்த) மதுவில் மூழ்கியும், சூதாட்டத்தில் குறிப்பாக சீட்டாட்டத்தில் திளைத்தும் கிடக்கிறார்கள்.
எல்லாமும் ஹராம் என்று அறியாதவர்களில்லை அவர்கள். ஆனாலும் தனித்திருப்பதன் துக்கத்தை கடத்திடும் வித்தைக் கருவிகள் ஆகிவிடுகின்றன இவையாவும்.

வீட்டைத்துறந்து வந்திருப்பவர்களின் காமத்தை கடத்திடும் ஒரே பண்டமாக நீலப்பட கேசட்டுகளே இருக்கின்றன. ஏன் வியாழக்கிழமை இரவு கொண்டாடி கூத்தாடி கடத்தப்படுகிறது. அந்த நிலத்தில் வெள்ளிக்கிழமைதான் வார விடுமுறை நாள். அந்த இரவிற்குள் நிகழ்வது மனித மனங்களுக்கு நிகழ்த்தப்படும் உளவியல் சிகிச்சை. அவர்களுடைய உரையாடல்களில் சமகால உலக அரசியல் துவங்கி எல்லாம்தான் பேசப்படுகிறது.
” அரபு நாடு இல்லன்னா..நம்மாளு..
நிறையப்பேரு..
ஊர்ல தெண்டித்தான் நடக்கனும்…
இந்தியாவுல ..எவண்டே வேலை தருவான்…
உனக்க வாப்பா ..மில்லு தொறந்து வச்சிருக்காரா…”
இப்படி எல்லாவற்றையும் பேசிக்கடக்கும் பொழுதுகளாக வியாழக்கிழமை இரவுகள் இருந்து வருகின்றன. மூடிக்கிடக்கும் அறைகளுக்குள்ளும் மணற்காற்று சூழ்ந்து கவிகிறது.

காலத்தைக் கணிப்பதற்கான கருவியாக மணற்காற்றின் தன்மையையே கணக்கில் எடுக்கிறார்கள். மணற்காற்று வீசிக்கடந்த பிறகான பதினைந்து நாட்களுக்குப் பிறகு குளிரோ, மழையோ வீசும் என்பது அவர்களின் கணிப்பு. நாவல் எழுதுகிற எழுத்தாளர்கள் நிகழும் காலத்தை காட்டித்தருவதற்கு பெரும்பாலும் பாப்புலர் சினிமாப் பாடல்களை வைப்பார்கள். அது ஒரு நாவல் நிகழும் காலம் குறித்த புரிதலை வாசகனிடம் உருவாக்கும் முறை. மீரான் மைதீன் அஜ்னபிக்குள் காலத்தைக் காட்டிட வியாழக்கிழமை இரவுக் கொண்டாட்ட உரையாடல்களை பயன்படுத்துகிறார். அரபிகள் மலையாளிகளை மலபாரிகள் என்றே அழைப்பார்கள்.

மற்ற இந்தியர்கள் அது பீகாரியாக இருந்தாலும், தமிழராக இருந்தாலும் அரபிகளைப் பொறுத்தவரை அனைவரும் இந்தியர்கள்தான். ஒரே நாட்டில் இருந்து வந்திருக்கும் பீகாரியும் தமிழனும் ஏன் இந்தியில் பேசுகிறார்கள். அவரவர் தாய்மொழியில் ஏன் பேசுவதில்லை என்பது இன்றுவரையிலும் அரபிகளுக்கு புரியாத புதிர்தான். இந்தியாவைப் பற்றிய புதிர்களும், ஆச்சர்யங்களும் தீராதவை.. அவர்களை அசைத்துக் கொண்டிருக்கும் மற்றொரு ஆச்சர்யம் சந்தனக்கடத்தல் வீரப்பன். சமீபத்தில் அரபு பத்திரிக்கைகளின் மூலமாக அவன் பாலைவன தேசத்தில் அறிமுகமாகியிருக்கிறான். தேவகவுடா என்பவர் இந்தியாவின் பிரதமராயிருக்கிறார். இதுவும்கூட பத்திரிக்கை செய்திதான். அரபிகள் காணும் பத்திரிக்கை செய்தியின் வழியாக நாவல் நகரும் காலப்பொழுதை வாசகன் அறியத்தருகிறார் மைதீன்..

நாவலை சுமந்து கொண்டு முழுக்க அலைபவன் பைசல். முகம்மது பைசல் குமரிக்கடற்கரைக் கிராமத்தில் இருந்து சவுதிக்கு வந்து சேர்ந்தவன். வந்து சேரும்போது எல்லோரையும் போல கனவுகளைச் சுமந்து கொண்டு வந்தவன்தான். கனவு நிலமென இஸ்லாமல்லாத இந்தியர்களைப் போலாவேதான் இவனும் சவுதியை நினைத்திருந்தான். ஆனால் இந்த நிலம் அவனுக்கு பெரும் நம்பிக்கைக்குரிய நண்பர்களை மட்டுமே தந்தது. வாழ்வை நகர்த்திக் கழித்திட எந்த பிடிமானமும் கடைசி வரையிலும் கிடைக்கவேயில்லை. நாவல் ஒரு விதத்தில் எதிர் திசையில் நகர்கிறது. இப்பொழுது வந்தான். இப்படி,, இப்படி வாழ்ந்தான். இப்படி சிரமப்பட்டான். இப்போது சொந்த ஊருக்கு கிளம்பப் போகிறான் என நேர்கோட்டில் நகரவில்லை. மாறாக வேறுகோட்டில் நகர்கிறது. இங்கிருந்து தப்பிப் போவது எப்படி என யோசிக்கிறான். ஏன் இங்கிருந்து போக வேண்டும் என பைசல் யோசிக்கிறான் என்பதன் வழியாக மொத்த நாவலையும் கட்டித்தருகிறார் மைதீன். அவன் இங்கு தனக்கு நடந்த எந்த துயரத்தையும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அவன் மறக்க நினைத்த யாவற்றையும் காட்சிகளாக நமக்குள் கடத்துகிறான்.எல்லாம் மறக்க வேண்டும்.

துவைஜியை..
அரூஷாவை..
தாயிபின் சூப்புக்கடையை
பாக்கிஸ்தானியை..
அங்கு தன் கண் எதிரே தப்பிப் போன பிலிப்பைனியை..
மம்மனிபாவின் வியாழக்கிழமை கொண்டாட்ட இரவை..
அந்த குளிர் அறையை…
ஷியா அரபியை …

எல்லாவற்றையும் துடைத்துக் கழுவி மனதை சுத்தப்படுத்த வேண்டும்..இங்கிருந்து எப்படியாவது கிளம்பி இந்திய நிலத்தில் விழுந்துவிட வேண்டும்..இதுதான் அவனின் நினைவு.. அவனுடைய நினைவுகளின் வழியாக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது அஜ்னபி நாவல். அடையாளமற்று வசிப்வர்கள் போலிஸில் பிடிபடும் போதோ அல்லது திட்டமிட்டு போலிஸில் தானாக மாட்டிக்கொண்டோ தங்களுடைய சொந்த நாட்டிற்கு போக முடியும். இங்கிருந்து மும்பை வரையிலும் செல்லத்தான் ஏற்பாடு செய்வார்கள். மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு எப்படிப்போவது. அரபு போலிஸிடம் மாட்டிக் கொள்கிறவர்கள் மறக்காமல் தங்களுடைய ஜட்டிக்குள் கொஞ்சம் ரியாலை பதுக்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று அவனுக்கு சொல்கிறார்கள் அனுபவசாலிகள்..
துவைஜீயிடமிருந்து தப்பி , சூப்புக் கடையிலிருந்து வெளியேறி திட்டமிட்டபடி போலிஸில் மாட்டுகிறான். போலீஸ் வேனில் தன் கண் முன்பாக தன்னைப் போலான பல அஜ்னபிகள் தூக்கி வீசப்படுகிறார்கள்.

தொழுகைக்கான அழைப்புச்சத்தம் கேட்கிற போது மட்டும் போலிஸ் வாகனம் நிற்கிறது. இந்த நிலம் வணக்கத்தைப் போற்றும் நிலம். வணக்கத்திற்குரியவன் ஏக இறைவன் மட்டுமே என்பது அவர்களின் நம்பிக்கை. நம்பிக்கை மட்டும்தானே மதங்களைக் கட்டி வைக்கும் மாயக்கயிறு. . பைசல் தனக்குள் நினைத்துக் கொள்கிறான். போலிஸ் இனி நம்மை பத்திரமாக மும்பை அனுப்பி வைத்து விடுவார்கள் என நம்புகிறான். ஆனால் நடந்தது வேறு. போலீஸ் அதிகாரிக்கு பைசலின் தோற்றம், மிகவும் குறிப்பாக தரையைத் தொடும் அளவில் வளர்ந்து கிடக்கும் தாடி அவனை பக்திமானாக தோற்றம் கொள்ளச் செய்கிறது..

அவனை வேனில் இருந்து இறக்கி நீங்கள் போகலாம் எனச்சொல்கிறான். மத அடையாளம் கண்டு இந்திய நிலத்தில் படுகொலைகள் நிகழ்த்தப்படும் காட்சிகள் நமக்குள் நகர்கிறது. ஒரே அடையாளம்தான். தாடியும், தொப்பியும் இங்கே பயங்கரவாதிகளுக்கான குறியீட்டு அடையாளமாக உருமாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அரபு தேசத்தில் அந்த அடையாளங்கள் புனிதத் தன்மையுடன் பார்க்கப்படுகிறது. போலிஸ் வேனில் கண்ணியமாக இறக்கி விடப்பட்ட பைசல் முகம் மறைத்த தாடியை மழித்து அதற்குள் மறைந்து கிடந்த தன் அழகிய முகத்தைக் காணும்போது கண்ணீர் வருகிறது. ஒரே தாடிதான், அதற்கு ஏன் இருவேறு நிலை. மதம் குறித்தும், அதன் அதிகாரம், அரசியல், அதன் தனித்த அடைடையாளங்கள் குறித்தும் இருக்கும் இந்து அடிப்படைவாதிகளின் புரிதலும், வியாக்கியானங்களும் நம் கண் முன்னே கடக்கிறது. இவை யாவும் நாவலுக்குள் நகரும் காட்சிகள் அல்ல. மாறாக நாவல் நமக்குள் திறக்க நினைத்த காட்சிகள். இப்படித்தான் எழுத்தாளன் எழுதிடாத காட்சிகளையும் நமக்குள் நகர்த்துகிறது அஜ்னபி. பைசல் திரும்பி பார்த்தபடியே தாடி சூழ்ந்திருந்த முகத்தை தடவிக்கொண்டு தன்னுடைய தங்கும் அறைக்குச் செல்கிறான்..

பல இடங்களில் ஹராம், ஹலால் குறித்த விவாதங்களைத் துவக்கி வைக்கிறது. நாவலின் முக்கியமான பகுதிகள் இவை. மதத்தின் பெருமிதங்களை விடுத்து அதன் நிறைகுறைகளைப் பேசுகிறவனே கலைஞன். மீரானின் கலைமனமும் மொழியும் கைகூடி இயங்கும் இடங்களில் எல்லாம் தனித்து தெரிகிறது அஜ்னபிகளின் உலகம்.

நாவலை தத்துவத்தின் கலைவடிவம் என்றே உலகெங்கும் வியாக்கியானம் செய்கிறார்கள். அஜ்னபிக்குள்ளும் தீவிர தர்க்கங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

அவன் அழகாகத் தெரிவதை இஸ்லாம் தடுக்கிறதா..
பர்வேஸ் முஸரப் தாடி வைத்திருந்தாரா..
சாதாம் உசேன் தாடி வைத்திருந்தாரா..
ஹோஸ்னி முபாரக் தாடி வைத்திருந்தாரா.”
ஏன் இவர்களை பட்டியலிடுகிறீர்.
இவர்களை எங்களின் அடையாளமாக நீங்கள் பார்க்கிறீர்கள்.
ஆனால் நிஜத்தில் முகம்மது நபி மட்டும்தான் எங்கள் அடையாளம்..

இப்படி பல இடங்களில் நாவலுக்குள் ஷியாக்களப் பற்றியும் அஹமதியாக்களைப் பற்றியும் வஹாபிகள் பற்றியதுமான உரையாடல்கள் மட்டுமல்லாது சூபியிசம் குறித்த தர்க்கங்களும் தொடர்ச்சியாக நடக்கிறது. . அரபு தேசத்திற்கே கால்பந்தாட்டத்தின் மீதான ஈர்ப்பு உண்டு. அந்த ஈர்ப்பு எந்த அளவிற்கு செல்லும் என்றால், ரோட்டில் சாதாரண பெட் பாட்டில் கிடந்தால் போதும். அது பந்தாக உருமாறிவிடும். ஒருவர், இருவர் அல்ல ஊரே அங்கு விளையாட்டில் மூழ்கிவிடும். விளையாட்டு மூர்க்கமாகும் போது அது கலவரத்தில்தான் முடியும். அது எங்கு வரை செல்கிறது தெரியுமா?. கலவரத்தில் காட்டு அரபிகள் என்று அழைக்கப்படுகிற கருப்பு அரபிகளுக்கும் வெள்ளை அரபிகளுக்கும் இடையே மூர்க்கமாக கல்லெறி யுத்தம் நடக்கும். ரத்தம் சொட்டச் சொட்ட நடக்கும். மொத்த நாடே கருப்பர் வெள்ளையர் என பிரிந்து கொண்டு மோதி தீர்ப்பார்கள்.

அப்போது அஜ்னபிகள் எவரும் வெளியே வருவதில்லை. யுத்தத்தின் போக்கில் தப்பித்தவறி ஒரு அஜ்னபி சிக்கிக்கொண்டால் அவ்வளவுதான். நிறத்தினால் பேதமுற்று மோதிக் கொண்டிருந்த கருப்பு அரபிகளும், வெள்ளை அரபிகளும் கைகோர்த்துக்கொண்டு அஜ்னபிகளை தாக்கத் துவங்கிவிடுவார்கள். போலிஸோ கோர்ட்டோ,அரசாங்கத்தின் எந்த உதிரிப்பாகமும் இதை கேள்வி கேட்க முடியாது. அஜ்னபிகளான இந்தியர்கள் இப்படி நடத்தப்படும் விதம் குறித்த புரிதலும் அற்ற இந்தியர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அரபு தேசத்தில் செல்வம் கொழித்துக்கிடக்கிறது. அதை அள்ளியெடுத்துக் கொண்டு வந்து குவிக்கிறார்கள் என நம்பிக் கொண்டலைகிறார்கள்…

நாவலை மிகுந்த நம்பிக்கைகக்குரியதான மொழியில் எழுதியிருக்கிறார் மீரான் மைதீன்.  ஷியா அரபிகளுக்கும் சவுதி மதகுருமார்களுக்கும் இடையே நிகழும் போது பார்வையாளர்களாக இருக்கும் அஜ்னபிகள் தங்களுக்குள் நிகழ்த்தும் உரையாடல்கள் இந்த நாவலின் மிகவும் முக்கியமான பகுதிகள். சோற்றுப்பதமென ஒன்றை மட்டும் சொல்கிறேன்.


(படம்: எழுத்தாளர் மீரான் மைதீன்)

நம்முடைய நபி தற்காப்பு யுத்தங்கள் செய்தார்.காலத்தால் அது அவசியமானதாக இருந்தது. அது யுத்த சமூகம். இன்று யுத்தம் மாறியிருக்கிறது. மாறி இருக்கும் யுத்தம் பற்றிய அறிவு நமக்கில்லை. வளர்ந்த நாடுகளின் ஆயுதம் என்பது வணிகயுத்தம், விஞ்ஞான யுத்தம், அரசியல் யுத்தம் எனப் பல தன்மைகளோடு வளர்ந்து விட்ட நிலையில் நாம் அவற்றை உள்வாங்கி கடந்து போக முடியாத நிலையில் இருக்கிறோம்.. நாவல் முழுக்க வரும் இக்பால் பேசிக் கொண்டேயிருக்கிறார். கதைகளை வளர்த்துக் கொண்டேயும் நகர்கிறார். அவர் ரஜினிகாந்த்திற்காக எழுதப் போவதாக சொல்லும் திரைக்கதை பகடியின் உச்சம்.

காட்டு விலங்குகள் வழியாக நாவலுக்குள் இக்பால் சொல்லும் டோக்கன் கதையை வெறும் பகடிக்கதையாக கடந்து போக முடியாது. பெண் உடல் குறித்த ஆண் மனதின் சொற்கள் என்றே புரிந்து கொள்கிறோம். தான் பிறக்க நேர்ந்த மதத்தின் மீதும், தன் மீது விழுந்திருக்கும் சாதியெனும் வன்மத்தின் மீதும் விமர்சனங்கள் வைப்பவர்களாக எப்போதும் கலைஞர்கள் இருந்து வருகிறார்கள். மைதீன் அசல் கலைஞன் .அதனால்தான் இஸ்லாம் சமூகம் குறித்த தன்னுடைய விமர்சனப் பார்வையை முன் வைக்க அவருடைய சொற்கள் தயங்கவேயில்லை. எங்கள் இந்தியாவில் கடுமையான சாதி பிரச்சனையுண்டு. எங்களுக்கு அருகில் உள்ள இலங்கையில் இனப்பிரச்சனை இருக்கிறது. பல நாடுகளில் நிறவெறி இருக்கிறது. ஆனால் இஸ்லாமியர்கள் தொடர்பான பிரச்சனைகளில் மட்டுமே ஊடகங்கள் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொல்லை பிரபலப்படுத்தியுள்ளன.

இது எப்படி சுலபமாக சாத்தியமானது என்றால் கலை, இசை, ஊடகம் போன்ற நுன்கலைகளை மதக் காரணங்களை முன்வைத்து இஸ்லாம் சமூகம் வசப்படுத்திக்கொள்ளவில்லை. மதத்தூய்மை பேசுகின்ற இஸ்லாமியர்களால் எங்கள் நாட்டில் இறை நேசர்களின் தர்ஹா போன்ற பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்படுகின்றன. உலகம் முழுவதையும் நாம் அரபு நாட்டு பண்பாட்டு அடையாளங்களோடு இணைத்துக்கொள்ள முடியாது.ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு வகைப்பட்டது. இதுதான் அஜ்னபி வரைந்திருக்கும் சித்திரம்… அரபு தேசத்தில் இஸ்லாமியர்கள் படுகிற துயரங்களை மட்டுமல்லாது, ஏன் அங்கிருந்து கிளம்பி வரமுடியாமல் அங்கேயே விழுந்து கிடக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் மீரான் மைதீன்….

(எழுத்தாளர் மீரான் மைதீன் எழதியிருக்கும் அஜ்னபி நாவலுக்கு எழுதப்பட்ட வாச்சியம்)..

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *