Piril Ink Shortstory By Maru Udaliyangiyal Bala பிரில் இங்க் சிறுகதை - மரு உடலியங்கியல் பாலா

பிரில் இங்க் சிறுகதை – மரு உடலியங்கியல் பாலா




“என்னடப்பா கருப்பா! ஏன் சோகமா உக்காந்திருக்க?”.. என கேட்டவாறு ஆஜானுபாகுவாக , நெற்றியில் சந்தனப்பொட்டு, வாயில் பன்னீர்புகையிலை, உதட்டில் புன்னகை சகிதம் நின்றிருந்த, “வி ஜி ஆர் “சாரைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்று கை எடுத்துக் கும்பிட்டு.. “அது ஒண்ணும் இல்லிங்க ஐயா” என துக்கத்துடன் மழுப்ப, “உன் மகன் குப்பனுக்கு எஸ்எஸ்எல்சி பரீட்சை பீஸ் கட்டாததால, வருத்தமோ?..கவலப்படாதடா ..நான் நேத்தே கட்டிட்டேண்டா”..என கூறி சிரிக்க, அவனோ கண்ணில் நீர் தளும்பிய வண்ணம் அவரை நோக்கி . “ஐயா உங்க செருப்ப குடுங்க, பளபளன்னு பாலிஷ் போட்டு தரேன்.!”.. என்று அவர் கடனை ஏதோ ஒரு வழியில் அடைக்க முற்பட, அவரோ சிரித்தவாறு, சென்றுவிட்டார்.

திருவல்லிக்கேணி…பெரியதெரு, பிள்ளையார் கோயில் அருகில் இருந்த அரசு உதவி பெற்ற அந்த பள்ளிக்கூடம்.. 1970 களில் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.

வி ஜி ஆர் சார்..அப்பள்ளியின் தலைசிறந்த தமிழாசிரியர்.. ஓரிரு மாதங்களில் ஓய்வு பெற இருப்பவர். முற்போக்கு சிந்தனை கொண்ட பரோபகாரி. குழந்தை பாக்கியம் இல்லாத அவர் மாணவர்களைத் தன் சொந்த பிள்ளைகள் போல் நடத்துபவர். தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் மாணவர்களின் நலன் காக்க அர்ப்பணித்தவர்.

கருப்பன் செருப்பு தைக்கும் தொழிலாளி. அந்தப் பிழைப்பில் தன் ஒரே மகன், தாயில்லாப் பிள்ளை குப்பனை, அந்த பள்ளியில் பெரும்பாடு பட்டு சேர்த்து படிக்க வைப்பவன். அவன் பள்ளிக்கு வெகு அருகிலேயே ரோட்டில் கடைவிரித்து பிழைப்பு நடத்திவந்தான்.

குப்பன் அந்த பள்ளியில் சேர மூலகாரணமாக துணை நின்றவர், அப்பள்ளி தமிழாசிரியர் “விஜிஆர் ..சார்” என மாணவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட வி ஜி . ராமச்சந்திர முதலியார் ஆவார்.

குப்பன் படிப்பில் படு சமர்த்தன்…கலைமகள் கடாட்சம் பபரிபூரணமாகப் பெற்ற அவன், பள்ளி முடிந்து மாலை வேளைகளில் அப்பாவுக்கு செருப்பு தைக்க (அவர் எதிர்ப்பையும் மீறி) உதவுவான். அவனை அவனது தந்தையின் தொழிலைவைத்துத்தான் அவனை சில பல ஆசிரியர்களும் , சக மாணவர்களும், அழைப்பர். அவன் அவமானமாக , எப்போதுமே கருதியதுமில்லை.

அவன் வகுப்பில், படிக்கும், “ரவி” எனும் சகமாணவன், பெரும் பணக்கார வீட்டு பையன். அந்த பள்ளியிலேயே, சொகுசு காரில் வந்து செல்லும் ஒரே மாணவன் அவன்தான். அவனுக்கு பணக்கார திமிர் வெகு அதிகம், அதுவுமன்றி, அவன் தந்தை கிருஷ்ணமூர்த்தி , பெரும் தொழில் அதிபர்..

அரசியல் செல்வாக்கு மிக்கவரான அவர்…அந்த பள்ளி, நிர்வாக அங்கத்தினருள் ஒருவருமான, முக்கிய புள்ளி என்பதால்… ரவியிடம் மூத்த ஆசிரியர்களே சற்று அடக்கி வாசிப்பர். அவன் பளபளக்கும் அலுமினிய புத்தக பெட்டி, அதற்கொரு உயர் ரக பூட்டு, தினம் ஒரு ஷு, வாசனை சென்ட் , தங்க மோதிரம், ரிஸ்ட் வாட்ச் சகிதம் பந்தா காட்டுவான். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல், “பிரில்” இங்க் பாட்டில் தினமும் கொண்டு வந்து தன் டெஸ்க் மேல் வைத்து, அனைவருக்கும் அழகு காட்டுவது அவன் பழக்கம்.

அக்கால கட்டத்தில், “இங்க்” பேனா மட்டுமே புழக்கத்தில் இருந்தது, யாரேனும் பால் பாயிண்ட் பேனா கொண்டு எழுதுவது ஆசிர்களுக்கு தெரிந்தால், அவர்களுக்கு அடியுதை கொடுப்பது மட்டுமல்லாது, அந்த பேனாவும், உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.

ஆகவே… எல்லா பையன்களும், ஓட்டை, உடைசலாகி, ஜி டி நாயுடு பேனாவை தவிர மற்ற எலலா பேனாக்களும் விலை உயர்ந்த சமாச்சாரங்களாகவே அந்நாளில் திகழ்ந்தன. தொடர்ந்து லீக் அடிக்கும் பேனாக்களை கையில் ஏந்தி, கை முழுதும் இங்க் கரைகளுடன் காட்சியளிப்பர். சிலசமயம் இங்க் தீர்ந்து போய்விட்டால்..

எதிர் கடை ,செட்டியாரிடம் 3 பைசா (பெரிய கட்டை பேனாவெனில் 5பைசா) கொடுத்து இங்க் ரீபில் செய்ய ஆசிரியரிடம் மன்றாடுவர், அதன் பயனாய் ஒரு சில ஆசிரியர்களது கோபத்துக்கு ஆளாகி, பெஞ்ச் மேல் ஏற்றப்பட்டு உயர்ந்த மனிதனாக்கபட்டு,அந்த பீரியட் முடிய , சக மாணவர்களை..ஈகில்ஸ் ஐ வியூவில் வேடிக்கை பார்ப்பர். ஒருசில நல்லாசிரியர்கள் அனுமதி அளிப்பதும் உண்டு., அவ்வாறு அனுமதி வாங்கிய, அதிர்ஷடசாலி பையன்கள் ஹாய்யாக வெளியே சுற்றி திரிந்து, நெருங்கிய நண்பர்களுக்கு கடலை மிட்டாய், கமர்கட், வேர்க்கடலை ஆகிய தின்பண்டங்கள் வாங்கி முடித்து, பிறகு சாவகாசமாக, இங்க் நிரப்பி, தன் தீர்த்த யாத்திரையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, வகுப்பு முடியும் தருவாயில் உள்ளே நுழைந்து, அனுமதி தந்த ஆசிரியர்களின் சாபத்துக்கு ஆளாவதும் உண்டு..

கையில் காசில்லாத வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பையன்கள், பக்கத்து சீட் நண்பனிடம கெஞ்சி கூத்தாடி, பெஞ்சின் வழவழப்பான பகுதியில், அவர்களை இங்க் தெளிக்க செய்து “இங்க் தானம்” பெறுவதும் உண்டு. காக்கி வெள்ளை சீருடையின்… வெள்ளை சட்டையில் இங்க் புட்டாக்கள், வரைபடங்கள் இல்லாத மாணவர்களை, அக்காலத்தில் காண்பது மிக மிக அரிது. ..

ஏப்ரல் 1 வந்துவிட்டால் போதும், ஏப்ரல் ஃபூல் கொண்டாடுகிறோம் பேர்வழி,என்ற பெயரால் ஒருவர் சட்டையில் ஒருவர் இன்க் அடித்து, வெள்ளை சட்டை நீலமாக நிறம் மாறும் அரியநிகழ்வு வருடாவருடம் தவறாமல் அரங்கேறும் …இதற்காகவே அன்றைய தினம்..பழைய கிழிந்த அழுக்கு சட்டை அணிந்த பையன்கள் நிறய பேர் அங்கும் இங்கும் காணப்படுவர். சில ஏமாந்த சோணகிரி ஆசிரியர்கள் மேல் இங்க் அடித்து சந்தோஷிக்கும் சில வால் பையன்கள் ….அடுத்த நாள் சக நண்பர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, முதுகில் டின் கட்டப்பட்ட நிலையில் வீடு செல்லும் நிகழ்வும் நடைபெறும்.

சிகப்பு இங்க் பச்சை இங்க் .. ஆசிரியர்களுக்கே உரித்தானது… அந்த கலரில் இங்க் நிரப்பிய பேனாக்கள் கண்டுபிடிக்கபட்டால், அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, உச்சபட்ச தண்டனை வழங்கப்படும். சரி! இங்க்பற்றிய சரித்திர சமாச்சாரங்களை இனி புறம் தள்ளி, மீண்டும் கதைக்கு திரும்புவோம்.

நம் பணக்கார ரவியின் “பிரில்” இங்க் பாட்டில், அவனுக்கு ஒரு தனி அந்தஸ்தையும், கவுரவத்தையும் பெற்று தந்தது என்றால் அது மிகையாகாது. அவனிடம் ஓசியில் பிரில் இங்க் எனும் ஒஸ்தி இங்க்கை … இளிப்புடன்..நிரப்பிக் கொள்ளாத ஆசிரியர்களே இல்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.!

அவன் நெருங்கிய கூட்டாளிகள் தவிர ஏனையோர்க்கு எந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும், எம்முறையில் கெஞ்சிக் கூத்தாடினாலும்… அவன், இங்க் தானம் செய்ததாக வரலாறே கிடையாது. அவ்வளவு திமிர் பிடித்த பிடிவாதக்காரன் அவன்.

அன்று …எஸ்எஸ்எல்சி பொது தேர்வுக்கு முந்தைய ரிவிஷன் டெஸ்ட் நடந்து கொண்டிருந்தது… அதில் நல்ல மதிப்பெண் பெறாதவர்களை, பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனும் விதி அந்த பள்ளியில், பின்பற்றப்பட்டு வந்தது. ஆகவே, அந்த பரீட்சைகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது.

நம் அன்பு தமிழ் ஆசிரியர் விஜிஆர் சார் தான் அன்று தேர்வு கண்காணிப்பாளராக இருந்தார். நம் குப்பன் சிரத்தையுடன் கவனமாக பரீட்சை எழுதி கொண்டிருக்க, …அவன் கெட்ட நேரம், அதிகமாக எழுதியதாலோ, என்னமோ, அவன் பேனாவில் இங்க் தீர்த்துவிட, அப்படியே கண்கலங்கி ஆடிப்போய், வி ஜி ஆர் இடம் முறையிட, அவர் சக மாணவர்களிடம், அவனுக்கு ஒரு பேனா கொடுத்து உதவுமாறு விண்ணப்பிக்க, யாரிடமும் மாற்று பேனா இல்லாததால் அனைவரும் கை விரித்தனர். கடைசியில் அவர் ரவியிடம் சென்று குப்பனுக்கு “பிரில்” இங்க் தானம் தர கேட்டுகொண்டார். ஆனால் அவனோ, “தர முடியாது” என திட்டவட்டமாக மறுத்துவிட.. அவர் முடிந்தவரை எவ்வளவோ நல்லதனமாக, அவனிடம் பேசிப்பார்த்தார்,..ஆனால் அவனோ கேட்பதாக இல்லை. ..

ஒரு கட்டத்தில்…என்றுமே, கோபம் கொள்ளாத சாந்த சொரூபியான அவர், பொறுமை இழந்து ..அன்று ஏனோ உணர்ச்சி வசப்பட்டு அவனை கண்டபடி திட்டி தீர்த்து, பிரில் இங்க் பாட்டிலை பலவந்தமாக எடுத்து சென்று , குப்பனுக்கு கொடுத்து உதவினார். ரவி மிகுந்த கோபம் கொண்டு அழுது கொண்டே வீட்டுக்கு சென்று அவன் பணக்கார அப்பாவிடம் வத்திவைத்துவிட்டான்….

அடுத்த நாள்..அவன் தந்தை தன் முழு செல்வாக்கையும் பயன்படுத்தி, பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்து… அவரை “தற்காலிக பதவி நீக்கம்” செய்ததோடு நிற்காமல்.. அவரை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி அனுப்புகின்றனர்.

அப்பழுக்கற்ற தன் ஆருயிர் ஆசிரிய சேவை அவமதிக்கப்பட்டதால், அவர் கூனி குறுகி, பனித்த விழிகளுடன், வெளியேற… அந்த பள்ளியின் மொத்த மாணவ பட்டாளமும் ஒன்று திரண்டு அவரை போக விடாமல் வழிமறித்து அழுது புலம்பினர் .

அதோடு நிற்காமல், அனைத்து மாணவர்களும், ஒன்று கூடி தொடர்போராட்டத்தில் ஈடுபட..அரசாங்கம் தலையிட்டு பள்ளி தலைமையை கண்டிக்க, மிரண்டுபோன நிர்வாகம், அவர் சஸ்பென்ஷன் உத்தரவை உடனே திரும்பபெறுகிறது. ஆனால், வி ஜி ஆர்.. சாரோ, பள்ளி எவ்வளவு வேண்டியும், திரும்ப பணியில் சேர மறுத்துவிட்டு மிகுந்த மனவேதனையுடன் தன் சொந்த ஊருக்கே சென்று விடுகிறார்.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு பின்…சென்னை மாவட்ட ஆட்சியராக, தன் அசாத்திய அறிவாற்றலாலும், கடும் உழைப்பாலும் உயர்ந்த குப்பன், தான் பொறுப்பேற்ற அடுத்த நொடியே.. தன் பள்ளிக்கு விஜயம் செய்து.. அன்றைய பள்ளி தலைமை ஆசிரியரிடம்…வி ஜி ஆர் பற்றிய விவரங்கள் சேகரித்து, வி ஜி ஆர் அவர்களின் சொந்த ஊரான, திண்டினத்தில் உள்ள, “நைனார்பாளயம் “எனும் குக்கிராமத்துக்கு, கலக்டர் என்ற, பந்தாவை உதரித்தள்ளி, ஆசானிடம் ஆசிபெறும் நோக்கில் ஏளிமையாய், தனிமையில் ரகசியமாக செல்கிறான். அந்த ஊருக்கு பஸ் வசதி இல்லாததால், ஒரு மைல் தூரம் நடந்தே சென்று, அவர் வீட்டை அடைகிறான்..

அவன் இதயதுடிப்பு அதிகரிக்க … “சார் சார்” என்றபடி மெல்ல கதவை தட்ட …எந்த சலனமும் இல்லை. மேலும் தன் குரல் உயர்த்தி, பலமாய் தட்ட , இருமல் சத்தம் ஈனஸ்வரத்தில் ஒலிக்க “யாருப்பா?” என முனகியடியே ஓர் மூதாட்டி மெல்ல கதவைத்திறக்கிறாள்.

மெலிந்த தேகமும், நரைத்த கூந்தலும், வறுமையால் வாடிய முகத்துடனும் “யாரு தம்பி நீங்க?”என அவள் கேட்க.. “வி ஜி ஆர் சார பாக்கணும் அம்மா.. நான் அவருடைய பழைய மாணவன்!”. என கூறியதும்.. அவள் கண்களில் இருந்து பெருகிய நீரை துடைத்த வண்ணம் “என் மவராசர் போய் அஞ்சு வருசம் ஆச்சுது ராஜா? என்ன கண் கலங்காம கடைசிவரை காப்பாத்துன அந்த புண்ணியவான்! ஏனோ என்ன தனியா தவிக்க விட்டுட்டு.. திடீர்னு போய்ட்டாரு ராஜா”என அழுது புலம்ப, அந்த சிறிய கூடத்தின் சுவற்றில், மாட்டப்பட்ட புகைப்படத்தில் , என்றோ போடப்பட்டு காய்ந்து போன மாலையுடன், சந்தன பொட்டு சகிதம், வி ஜி ஆர் சார்..என்னை பார்த்து அதே பழையவாஞ்சையுடன் சிரித்தார்.

என் கண்கள் குளமாகி நான் விசும்பி நிற்க, “உள்ள வா ராஜா!” என கிராமத்துக்கே உரிய அன்புடன் அழைத்தாள் அந்த தாய். நான் சிறிது நேரம் அவர் படத்தின் முன் நின்று விம்மி விம்மி அழ… அவளும் என்னுடன் சேர்ந்து அழுதாள். நான் அவள் கைகளை அறுதலுடன் பற்றி”அம்மா நான், இப்போ பெரிய உத்யோகத்தில், வசதியாக இருக்கிறேன். எல்லாம் சார் போட்ட பிச்சைதான்.தாங்கள் என்னுடன் வந்து விடுங்கள். என் தாயினும் மேலாய் உங்களை போற்றி பாதுகாக்கிறேன் அம்மா!” என்று அவன் கூற அவளோ “ஐயோ! அதெல்லாம் வேணா ராஜா.. என் பிறந்த மண்ணுல தான் என் உயிர் பிரியனும்!” எனக்கூறி மறுத்துவிட.. அவன் ஒரு நூறு ரூபாய் கட்டை அவள் கையில் திணிக்க, அதை வாங்க மறுத்து “காட்டுக்கு போற வயசுல கட்டு பணம் வச்சுகிட்டு என்ன பண்ண போறேன்?” என்று கூறி பிடிவாதமாய் மறுத்து விட… கனத்த இதயத்துடன் வெளியே வந்த அவன், தன்னை அறியாமலே குலுங்கி குலுங்கி அழுதவாறு,நடக்க துவங்கினேன்.

அந்த தெருவின் முனை திரும்புகையில், “எங்கடா போற குப்பா? என்ன விட்டுட்டு!” என கணீர் குரலில் யாரோ என் தோளை தொட்டு உலுக்க, குப்பன் சட்டென திரும்பி பார்த்து, அச்சு அசல் வி ஜி ஆர் சார் போல அதே அஜானுபாகுவான தோற்றம், அதே சந்தனப்பொட்டுடன், சிரித்த முகத்துடன் நின்றிருந்த.. அந்தப் பெரியவரைப் பார்த்து ஸ்தம்பித்து நின்று ” சார்!” என கூக்குரலிட, அவர் பயந்துபோய் “என்ன மன்னிச்சிடுப்பா தம்பி..என் அக்கா மகன் குப்பன் என நினைத்து உன்னை கூப்பிட்டுவிட்டேன்!” என்று புன்முறுவல் பூத்தபடி அகன்றார்.

ஆனால் இன்றளவும் குப்பனின் உள் மனமோ, அவர் சாட்ஷாத் வி ஜி ஆர் ..சார்தான் என திடமாக நம்பி சந்தோஷித்து ஆறுதல் அடைகிறது…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. A. Udhayachandiran

    இங்க் பேனாக்கள் புகழ் பெற்றிருந்த அந்தக் காலத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் நல்ல வர்ணனை கொண்ட இனிய கதை. வாசகர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு தருணத்தை இங்க் பேனா பயன்படுத்திய நாட்களை இக்கதை அவசியம் நினைவூட்டும்

  2. Amazing story. I relived my days at Hindu High School, near Peria Pllayar Koil, on Big Street.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *