கிராம ரணங்கள் – பிச்சுமணி

கிராம ரணங்கள் – பிச்சுமணி



கிராம ரணங்கள்

எழில் கொஞ்சும்
அழகிய கிராமம்.

வாய்க்காலில் மீன்பிடித்தேன்..
குளத்தில் நீச்சலடித்தேன்
ஆற்று மணலில் கருப்பட்டி செய்தேன்.

தெருவில் சில்லாங் குச்சியடித்தேன்.
கோலி உருட்டினேன்
பம்பரம் விட்டேன்..
திருவிழாவில் ராட்டனம் ஆடினேன்..

காரசேவு தின்னேன்
கல்லமிட்டாய் கடித்தேன்..
அத்தைப் பெண்ணைச் சுற்றித்திரிந்தேன்
மாமன் மகனைக் காதலித்தேன்.
ஆட்டுக்குட்டிக்குத் தாடி வளர்த்தேன்
கிளிக்குச் சட்ட தெச்சேன்.
மயிலிறகுக்கு பிரசவம் பார்த்தேன்.

நொண்டியாடினேன்
பல்லாங்குழியில் காய் சேர்த்தேன்.
தட்டாங்கல்லை எட்டிப்பிடித்தேன்.
பாம்பு அடித்தேன்..
எலிப்பிடித்தேன்
பூனைக்குப் பாலிட்டேன்..

இப்படியெல்லாம்
முதுகு சொறியும் உங்க கூர்மையற்ற பேனாவை ஒழித்து வைத்துவிடுங்கள்.

கிராமமென்பது..
சாதி வடுக்களை
தூக்கிச் சுமக்கும்
சுடுகாடுகளே!

வறுமைக் கோட்டையும்
வருணாசிரமக் கேட்டையும்
அழியாமல் காவல் காக்கும்
பலி பீடங்கள்.

தெற்கு-கிழக்கு
மேற்கு -வடக்கு..
இவை திசைகள் இல்லை..
வசைமொழியின்
சாதிக் குறியீடுகள்.

கீழத் தெரு மேலத் தெரு
வடக்குத் தெரு தெற்குத் தெரு
இவை தெருக்களின் பெயர்கள் அல்ல
மனிதத்தைக் கீறிப்பிளந்த
வரைப்படங்கள்.

தெரு நாய்க்கு கூட
வீதி விலாசமுண்டு

கல்யாண மண்டபங்களிலும்
விலாச நாய்தான் காவல் காக்கும்.. குடும்பவிழா கொண்டாடும்.

வாடகை வீடும்
மநுதர்மம் பேசும்.

ஊருக்கென்று தனிச் சொத்தில்லை.
தனி அடையாளமுமில்லை.

ஏன் எனில் ஊர்
பலவகைப்படும்..

நீங்கள்
கட்டை விரலை
இழந்து விட்டு..
துரோணாச்சாரியின்
பெருமை பேசுகிறீர்கள்.

பிச்சுமணி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *