பிச்சுமணி கவிதைஇருவிழி இமைகள்
தூங்குவதற்கு மட்டும்
மூடுவதில்லை.

தூர்ந்து போன ஆசைகளை
தூண்டில் போட்டு தேடிப் பார்க்க
மனக்குளத்தில் மூழ்கி மிதக்கிறது.

தினநிகழ்வுகளின்
சரி தப்புகளை
புதையலாக்கி
பூட்டி வைக்கிறது

உதடுகளையும்
நாக்கையும்
உபயோகிக்காமல்
புதிய வார்த்தைகளை உருவாக்கி
உச்சரித்து பார்க்கிறது

காயங்களின் வலியை
பெரும் மூச்சில் வெளியேற்றி
உமிழ்நீரை உள்ளிழுத்து
ஆறாத வடுகளுக்கு
ஒத்தடமிட்டுக் கொள்கிறது

லட்சிய தாளங்களை இசைத்து
புதிய விடியலை வரவேற்க
கனவு பூக்களை தூவுகிறது.

இமை மூடும்
ஓசையில்லா நிலையை
அமைதியென்றும்
மௌனம் என்றும் சொல்லி விடாதீர்கள்.

கடந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்-என
மூன்று காலத்திலும்
இயங்கும் ஒரு நிலை

மகிழ்ச்சி
மனதளர்ச்சி
எதிர்பார்ப்பு ஏமாற்றம்
காதல் வெறுப்பு
இழப்பு எதிர்கொள்ளுதல்
முடிவு தொடக்கமென எல்லா
உணர்வையும் உணர்த்தும்
கலை

இருவிழி இமைகளை
மூடிக்கொள்கிறேன்
தூங்குவதற்கு அல்ல.

— பிச்சுமணி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.