piyano kattaikalin meethu nadakkum paravai book reviewed by s.tamilraj நூல் அறிமுகம்:பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை - செ. தமிழ் ராஜ்
piyano kattaikalin meethu nadakkum paravai book reviewed by s.tamilraj நூல் அறிமுகம்:பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை - செ. தமிழ் ராஜ்

நூல் அறிமுகம்: பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை – செ. தமிழ் ராஜ்

கவிஞர் தன் புத்தகத்தை அஞ்சலில் அனுப்பியிருந்தார். ஏற்கனவே பல்வேறு இதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் அவர் கவிதையை வாசித்திருந்த அனுபவம் இருந்ததால் மிகுந்த சுவாரஸ்யத்தடன் வாசிக்க ஆரம்பித்தேன். கவிஞர் நம்மை ஏமாற்றவில்லை நல்ல மொழிநடை இலக்கியச் செறிவு யாவர்க்கும் புரியும்படியான மெல்லிய அடர்த்தி அதற்குள் கவித்துவம் என தனித்து தெரிகிறார். வாசிப்பவர்களில் பெரும்பாலானோர் கவிதை வழியாகவே எழுத்துலகில் கால்பதிக்கின்றனர். நிற்பதும் தொடர்வதும் அவரவர் எழுத்தின்திறத்தாலே தொடர முடியும்.

சமீபத்தில் பிரபலமான கவிஞர் ஒருவரின் புத்தகத்தை வாசித்தேன். ஒருவரிகூட புரிபடவில்லை மீண்டும் மீண்டும் வாசித்தால் புரியும் என்றார்கள். தலைவலி வந்ததுதான் மிச்சம். ஒரு மொழியை கையாள்பவர் அதை வாசிப்பவர்க்கு கடத்த ஏன் இத்தனை வேகத்தடை போடுகிறார் என்று புரியவேயில்லை. 35 வருட தொடர் வாசிப்பில் இருக்கும் எமக்கே அயர்ச்சியாய் இருந்தது. மொழியை அடர்த்தியாக்கி மிரட்டுபவர்களும் செய்திப்பத்திரிக்கையின் உரைநடையை மடித்து மடித்து நீர்த்துப்போன கவிதையாக்கம் செய்பவர்களும் உண்டு. இரண்டுக்கும் நடுவில் நல்ல கவிதையோடு கவிஞர் ப்ரணா வந்திருக்கின்றார். வாருங்கள் வாசிப்போம்.

காலத்தைப் பற்றி எத்தனை கவிதையெழுதினாலும் இன்னும் புதிதாகவே புலர்கிறது இதோ கவிஞரின் கவிதை

“பேரமைதி நிறைந்த அறையில்
காலத்தின் காலடியோசை
கடிகாரத்தின்
நொடி முள்”

“போலச் செய்தல்” எனும் கவிதையில் மனிதர்களை பிரதியெடுக்கும் பொய்மையை அழகாக தோலுரிக்கின்றார். கவிதையின் இறுதி வரிகளை இப்படி முடிக்கின்றார்.

“இன்னொன்றைப் போலவே
இருப்பதற்கும்
இல்லாமலேயே இருப்பதற்கும்
பெரிய வேறுபாடேதும் இல்லை”

தேர்தல் அறிக்கை எனும் கவிதையில் அரசியல்வாதிகளின் வெற்று ஏமாற்றுவாக்குறுதிகளை அழகாக்கி முடிக்கிறார். எனக்கு 15 லட்சம் போடுவதாக சொன்ன மோடி நினைவிலாடி பரிகசிக்கிறார்.

“எங்களை காட்டிலும்
இவ்வளவு சிறப்பாக
யார் செய்து
விடப்போகிறார்கள்
உங்களுக்கான
சவப்பெட்டியை”

கடவுளிடமும் உரையாடி நீண்ட கவிதையொன்றை எழுதியிருக்கிறார்
சமகாலத்தில் தேவையான தொரு கேள்விதான்.

“பெயரற்ற
ஆதி கடவுள்
யாவர்க்கும்
பொதுவாய் இருந்தான்
பெயர் சூட்டி
கடவுளை மதமாற்றம்
செய்து வைத்தான்
மனிதன்”

சிவப்பு எனும் கவிதையில் முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டலை பகடி செய்கிறார் தொழிலாளிகளின் அவலநிலை இது.

“முதலாளியிடம்
போனஸ் என்று கேட்டால்
மட்டும்
மறக்காமல் சொல்லுவார்
இந்த வருடமும் நஷ்டம்”

கோவணத்துண்டு அளவு நிலமிருந்தாலும் பாகப்பிரிவினை என்பது உறவுகளை சுக்குநூறாய் பிரித்தெறிந்துவிடும். அப்படியொரு நிகழ்வை வலியை காட்சிப்படுத்தியிருக்கிறார்.

“வாசல் முன்
விற்பதற்காக ஒன்றுகூடிய
உறவினர்களை பார்த்து
சொத்தை விக்கிறதுல எல்லோருக்கும்
சம்மதம் தானேப்பா
ஊர்ப்பெரியவர் உரக்கக் கேட்க
இல்லை என
ஈனஸ்வரத்தில் முணுமுணுத்தன
வீட்டின் சுவர்கள்”

யாசகர்களின் பாடுகளையும் கவிதையாக்கியிருக்கிறார் ரசனையெனும் தலைப்பில் காலர் டியூனுக்கும் ஒரு கவிதை இருக்கிறது காலத்தின் இசை எனும் தலைப்பில்

“மனது
நிலைகொண்டுள்ள
காலத்தைப் பிரதிபலிக்கும்
காலத்தின் இசையும் கூட”

பக்கங்களை நிரப்புவதற்காகளை ஹைகூ கவிதைகளை கடைசியில் தூவியிருப்பதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி தொகுப்பில் பெரும்பான்மையான கவிதைகள் மிகச்சிறப்பாகவே வந்திருக்கின்றன. தலைப்புக் கவிதையின் வார்த்தையில் சொல்வதென்றால் பியானோவின் கட்டைகள் மீது தடுமாறி நடக்கத்தொடங்கிய பறவை தன்னை அறியாமல் பரிசளித்திருக்கிறது பல நல்ல கவிதைகளை. கவிஞருக்கு வாழ்த்துக்கள் மனிதங்களை தொட்டு எழுதும் அவரது எழுத்துப்பணி சிறக்கட்டும்.

ctamilraj@gmail.com

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *