Plastic Boomi Short Story by Parashuram Senthil Synopsis 85 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 85: பரஷுராம் செந்திலின் பிளாஸ்டிக் பூமி சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 85: பரஷுராம் செந்திலின் பிளாஸ்டிக் பூமி சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




மனித மனநிலையில்  மாற்றம் என்பது வாழ்க்கைப் பயணத்தில் எதிர்கொள்ளும் சம்பவங்களாலும் நிகழ்கிறது 

பிளாஸ்டிக் பூமி
                                                 – பரஷுராம் செந்தில்

சிக்னல் முன்பாக பச்சை விழக் காத்திருந்தபோது பக்கத்தில் நின்றிருந்த கருநீல பென்ஸ் காரின் கண்ணாடியில் எனது முகம் பார்த்தேன்.  புழுதியில் கசங்கி எனது வேறொரு உருவம் போல காட்சியளித்தேன்.  கண்களின் பாதுகாப்பிற்கு மாட்டியிருந்த சாதாரண கூலிங் கிளாள் கண்ணாடி முன் சரி செய்து கொண்டபோதுதான் அந்தக் காரின் கண்ணாடி வழுக்கி உள்ளிருந்தவன் என்னை நோக்கினான்.

“ஹாய் வஸந்த்” என்றான்.

அவனைப் பார்த்ததும் எங்கோ பார்த்த மாதிரி இருந்ததே தவிர உடனடியாக நினைவுக்கு வரவில்லை.  நான் சிறு தயக்கத்தோடு பார்க்க “டேய் வஸந்த், நான்தான் கேஸவ்” என்றான்.

நான் நெளிந்து “அட கேஸவ்” என பிரகாசம் காட்ட பச்சை விளக்கு ஒளிர்ந்தது.     

யமஹாவைத் திருகி ஓரம் செலுத்தி நிறுத்தினேன்.

கேஸவ் இறங்கி வந்தான்.  “ வஸந்த் ஹவ் டுயுடூ” என்ற கைகுலுக்கி இழுத்து அணைத்துக் கொண்டான்.

சிறு நடை நடந்து அந்த பார்லரின் உள் நுழைந்தோம்.  அவன் உடையும் நடையும் அமர்ந்த தோரணையும் அந்த இடத்தின் அரசனைப் போல் இருந்தான்.  பார்த்த எனக்கு லேசான பொறாமை வந்தது.

“எப்படி இருக்க கேஸவ்? எங்க இருக்க இப்ப? உன்னைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் எனக்கு” என்றேன்.

“எனக்கும்தான் ரொம்ப சந்தோஷம்.  பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு ஒரு ஸ்காலர்ஷிப்ல அமெரிக்கா போனேன்.  லேசான புத்திசாலித்தனத்தால் அங்கேயே ஒட்டிக்கிட்டேன்.  இப்ப கிரீன் கார்ட் இருக்கு”.  நான் லேசாக செருமிக் கொண்டேன்.

“நீ என்ன பண்றே வஸந்த்.  சென்னையிலே ப்ராக்டிஸா? எத்தனை கார் வைச்சிருக்கே?”

“யமஹாதான்” என்றேன்.

அவன் திடுக்கிட்டுப் பார்த்தான்.  “டூ வீலர்தானா?  சும்மா ஜாலி ரைட் போறேன்னு நினைச்சேன்.  கல்யாணம் ஆயிடுச்சா இல்லலையா?”

இன்னும் செட்டில் ஆகலே  என்பதையும் தனியார் மருத்துவ மனையில் மாதம் ஐந்தாயிரம் சம்பளம் வாங்குவதையும் கூறினேன்.

“டேய் வஸந்த், என்ன உளர்றே?”

“ஆமாம்.  நிஜம்,  பைவ் தவ்ஸன்ட் ருப்பீஸ்.  பத்து மணி நேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கிறது.  மீதம் கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் மேற்படிப்பிற்காகத் தயார் செய்கிறேன்.  ஐம்பதினாயிரம் ரூபாய் கடனாகிவிட்டது”.  

“ஒரு டாக்டருக்கு சம்பளம் ஐந்தாயிரம் ரூபாய் தானா?  என் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?  மூன்று லட்ச ரூபாய் அமெரிக்காவில்.  ஒரு காரில் போக போரடிக்கிறது என்று நான்கு கார் வாங்கி வைத்திருக்கிறேன்.  என் மனைவி இரண்டு கார் வைத்திருக்கிறாள்.  திருமணமாகி மூன்று  வருடமாகிவிட்டது.”

கேசவனைக் கூர்ந்து கவனிதேன்.

அவன் தொடர்ந்து “போஸ்ட் க்ராஜிவேஷன் கிடைக்கவில்லையா?” என்றான்.

“இன்னும் இல்லை.”

“உன் ஐஸ்கிரீம் அப்படியே இருக்கிறது, சாப்பிடு” என்றான்.

நான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இறுதியாண்டு கேம்பஸ் இன்டர்வியுவில் அதிர்ஷ்டம் அடிக்க, இந்தியாவில் இருந்து தப்பி அமெரிக்கா போய்விட்டேன்”.

நான் அமைதியாக இருக்க அவன் மறுபடியும் வருத்தமான குரலில் “என்னடா மோசமா இருக்கு.  நல்ல வேளை நான் டாக்டராயிருந்தா ஐந்தாயிரம் கொடுக்கறதைப் பார்த்துட்டுச் செத்திருப்பேன் .  நீ எப்படி சமாளிக்கறே?” என்றான்.

“கொஞ்சம் கஷ்டம்தான்” எனக்கு சற்று குரல் கம்மி விட்டது.

“நீ எப்ப பணம் சம்பாதிச்சு, எப்ப கல்யாணம் பண்ணிக்கிறது.  பாரு இப்பவே தலையில் பாதி வெள்ளை முடி.”

நான் எதுவும் சொல்லவில்லை.

“கேஸவ் இங்க எல்லா டாக்டரும் இப்படித்தான் தகிடத்தோம் போடறாங்களா?  நான் உன்னைவிட மோசமான படிச்சும் நல்லா இருக்கேன்” என்றான்.

நான் பேச்சை மாற்ற விரும்பி “என்ன திடீர்னு இங்க வந்திருக்க..” என்றேன்.

கிளம்பினோம்.

“என்னோட கம்பெனிக்காக கொஞ்சம் கம்ப்யூட்டர் படிச்சவங்களை பிடிச்சுட்டு போறதுக்காக வந்தேன்.  நாலு நாள் ப்ரோகிராம்.  நாளை மறுநாள் கிளம்பறேன்”.  கேசவ் மெல்ல திரும்பி என்னை கனிவோடு பார்த்தான்.  அவனோடு இப்போது சேர்ந்து நிற்க, நான் மிகச் சாதாரணமானவன் போல் தோற்றமளித்தேன்.

காரின் கதவைத் திறந்து அவன் அமர நான் சற்றி வந்து அந்தப் பக்கம் திறந்து அமர்ந்தேன்.  உள்ளே அமர்ந்ததும் குளிர்காற்று பரவி இதமாகத் தழுவியது.  பக்கத்தில் கிடந்த ஹிந்துப் பேப்பரைப் பிரித்து எதையோ தேடி மடித்து என்னிடம் கொடுத்தான்.

“என்னோட கம்பெனி.”

ஈஎல்என் என்கிற அந்த கம்பெனியின் விளம்பரம் அந்த பக்கம் முழுக்க வந்திருக்கிறது.  கவருகிற வரிகளில் கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு அழைப்பு வைத்திருந்தார்கள்.

கேஸவ் “கம்ப்யூட்டர் தெரிஞ்சாப் போதும்” என்றான்.  “வஸந்த் நீ ஏன் என்னோட வந்துவிடக்கூடாது?” என்றான்

“விளையாடறியா?”

“இல்லை.  விளையாட்டில்ல. ஐம் சீரியஸ்.  ஏன் இப்படி கஷ்டப்படற? கொஞ்சம் கம்ப்யூட்டர் கத்துக்கோ.  ஆறு மாசம் படிச்சாப் போதும்.  உன்னால சுலபமா முடியும்.  என்னோடு வந்துவிடு.  என்னோட கம்பெனில வேலை.  ஒரு வருஷம்தான்.  நீ என்னை சாப்பிட்ருவ.  எனக்கு நம்பிக்கை இருக்கு.  எக்கச் சக்கமாக சம்பாதிக்கலாம்.   ஏன் நல்லா படிச்சு டாக்டராகி இந்த ஊர்ல கேவலப்படணும்.  உன்னைப் பார்த்து கவலையா இருக்கு.  யோசி வஸந்த நாளைக்கு மறுநாள்தான் நான் போறேன்.  விஸா ப்ராப்ளம் இல்லை” என்று சொல்லி என் தொலைபேசி எண் வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

நீண்ட நேர யோசனைக்குப் பின் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன்.  ஊருக்குப் போய் அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட முடிவு செய்தேன்.  மிக அவசரமாக துணிகளை அயர்ன் செய்து மாட்டிக் கொண்டு, வெளியில் கிளம்பி மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு, அறைக்கு வந்து தோள்பேகை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.  சேது எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும்.

ஏறக்குறைய பத்து மணிநேரப் பயணத்திற்குப் பிறகு விடியற்காலை ராம்நாட்டில் இறங்கி தாமரைக்குளம் பஸ் பிடித்தேன்.  சொற்ப பயணம்.  அங்கிருந்து இறங்கி நான்கு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.  சைக்கிள்காரர் யரும் தென்படவில்லை.  விறுவிறுவென்ற நடந்துவிடலாம் என முடிவு செய்து நடந்தேன்.

யாருமற்ற அந்த பிரதேசத்தில் நடந்துகொண்டிருந்த போதுதான் அவர்கள் எதிரில் வந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன்.  ஒரு ஆண். இரண்டு பெண்.  ஒருத்தி கிழவியாக இருந்தாள்.  மற்றொருத்தி முடியாது நடந்து வருவது தூரத்தில் இருந்தே தெரிந்தது.  கொஞ்சம் உற்றுகவனித்தேன்.    அட கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் கர்ப்பவதியை இப்படி நடக்க வைக்கிறார்களே?

அவர்கள் கலவரமாக என்னைப் பார்த்தார்கள்.

“என்னய்யா இது?”

“சாமி இது பொஞ்சாதி, நிற மாசம் வலி கண்டுருச்சு  ஊருக்குள்ள சைக்கிள் கூட தரமாட்டேங்கறாங்க.  நாங்க குருவியாச்சே.  வழி தெர்ல.  ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போறேங்க.”

நான் அவளைக் கூர்ந்து கவனித்தேன்.  பிரசவ வலியின் கொடுமை எனக்குத் தெரியும்.  மூச்சு வாங்க சிரமப்பட்டாள்.  “வாய்யா இங்க, இந்தம்மாவ இப்படி மரநிழல்ல படுக்க வை.”

“அவசரஞ் சாமி” என்றாள் கிழவி.

அவள் மிகச் சிரமப்பட்டு படுத்தாள்.  நான் ஒரு பக்கம் கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டேன்.  சொல்ல முடியாத வாசனை அவள் உடலிலிருந்து வந்தது.  கடைசி நேர வலியில் இருப்பதை என்னால் நன்கு உணர முடிந்தது.  வேட்டியை எடுத்து ஆளுக்கு ஒரு பக்கம் நின்னு புடிக்கச் சொன்னேன்.

கடவுளே என்ன இது?  எந்த உதவியுமற்ற இந்த இடத்தில் இவர்களை எப்படிக் காப்பாற்ற?

அவள் வலியில் துடித்தாள்.  “பொறுத்துக்குங்க.  நான் டாக்டர்தான் பார்த்துக்கறேன்” என்றேன்.  “புதுசா பிளேடு வச்சிருக்கியா?”

அவன் அவசர அவசரமாக கையில் வைத்திருந்த லெதர் பைகளைத் துழாவி என்னிடம் எடுத்து நீட்டினான்.  வாங்கிக் கொண்டே “அது என்ன சரஞ்சரமா?” என்றேன்.  

“மிருக கொடலு, கொக்கு சுட்டா கட்டி எடுத்துப் போவ சாமி.”

“எடுய்யா” என்றேன் உற்சாகமாகி.

“கொஞ்சம் வலிக்கும், பொறுத்துக்க வேற வழியில்லை” என்று சொல்லி எபிஸாடமி கொடுத்தேன். கத்தினாள் அவ்வளவுதான்.  “முக்கு முக்கு” என்று நான் குரல் கொடுக்க மிக அழகாக ஒத்துழைத்தாள்.

பளிச்சென்ற புதுமலர் போல் குழந்தை பிறந்தது.  படபடப்பாகவும் ஆனந்தமாகவும் இருந்தது எனக்கு.  புதிய பிளேடை பிரித்து தொப்புள் கொடு அறுத்தேன்.  அவனிடமிருந்து பெற்ற மிருகக் கொடி எடுத்து பிளஸன்டாவை நீக்கிப் பின் தைத்தேன்.  ரத்தப் போக்கு குறைந்திருந்தது.  இந்த அரை மணி நேரத்தை மறக்க முடியாது என்று தோன்றியது.

அந்தக் கிழவியும் கணவனும் சட்டென்று என் காலில் விழுந்து விட்டார்கள்.  

“எழுந்திருங்க” என்றேன் .

“சாமி உங்க பேரு.”

“வஸந்த், டாக்டர் வஸந்த்” என்றேன் பெருமிதமாக.

அவன் படுத்துக்கிடந்தவளை நோக்கி “மைனா புள்ள பேரு வஸந்து, அய்யா பேரை வச்சுட்டேன்” என்றான்.

பத்துப் பதினைந்து நிமிட இடைவெளியில் ஒரு மாட்டு வண்டி வந்தது.  நிறுத்திப் பேசி அவர்களை பத்திரமாக  ஏற்றி அனுப்பினேன்.  குழந்தையின் அழுகுரல் நினைவினூடே வீடு வந்து சேர்ந்தேன்.

என்னைப் பார்த்ததும் அம்மாவுக்கு சந்தோஷமாக இருந்தது.  “எப்படி இருக்கப்பா?” என்றபடி இளநீர் சீவி ஊற்றிக் கொண்டு வந்தாள்.  வழியில் நடத்தைச் சொன்னேன்.  “கடவுளே” என்று சந்தோஷப்பட்டாள்.

இரவு சாப்பிட்டு முடித்தபோது தொலைபேசி வந்தது.  கேஸவ் மறுமுனையில்இருந்தான்.

“அம்மாகிட்ட சொல்லிட்டியா?” என்றான்.

“இல்ல கேஸவ் நான் வரல.  நல்லா யோசிச்சிட்டேன்” என்றேன் தீர்மானமாக.

“வஸந்த் பணம் சம்பாதிக்கணுமில்லையா?”

“ரொம்ப நன்றி உனக்கு, நான் வரலே” என்றேன் உறுதியாக.

“ஓகே” என்று வைத்து விட்டான்.

“என்னப்பா திடீர்னு சொல்லாம வந்துட்டே?”

“திடீர்னு உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சு வேற ஒண்ணுமில்லை”.

அம்மா மிக சந்தோஷப்பட்டாள்.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது
.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *