அறிவியலை அறிவியலே வெல்லும் என்றார் பிளாட்டோ
ஆயிஷா. இரா. நடராசன்
அறிவியலின் மகத்தான வெற்றி என்பது அதன் கண்டுபிடிப்புகளில் இல்லை…. அன்றாட வாழ்வின் நம்பிக்கைவாத விவாதங்களை முடிவற்று எடுத்துச் செல்வதில்தான் அதன் வெற்றி இருக்கிறது.
– ஸ்டீபன் ஹாக்கின்ஸ்
அறிவியலை அறிவியலே வெல்லும் என்றார் பிளாட்டோ இது நடந்து பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன. இப்படி யோசித்துப் பாருங்கள். பகலும் இரவுமற்ற இருள் காலைப்பொழுது….. சிந்தனைக்கும் கருத்தாக்கத்திற்கும் இடையே… அறிதலுக்கும் புரிதலுக்கும் நடுவில், மனதிலிருந்து எழுந்து நோக்கி பயணித்த தத்துவார்த்த அணிவகுப்பின் ஊடாக பிளாட்டோ முன்வந்து நின்றார் கடவுள். பாவம்.
‘நான் கடவுள்…. உமது கடவுள். உன் உள்ளே நல்லது அனைத்தையும் சிந்திக்க வைப்பவன்…. அனைத்தையும் ஆராயும் உமது தார்மீக தத்துவம் என்னை புறந்தள்ளியது ஏன்?’
பேரறிஞன் பிளாட்டோ தனது குறிப்புகளில் இருந்து பார்வையை எடுக்கவே இல்லை. ‘ஓ’ என்றான் முதலில். நீண்ட மவுனத்திற்கு பின் விடைக்காக காத்திருந்த வருகையாளரிடம் ‘உமது கேள்விக்கு நான் பதில் அளிக்கும் முன் இந்தக் கேள்விக்கு உம்மிடம் பதில் இருக்கிறதா?’ என்றான்.
அவன்.. பிளாட்டோ எந்த எதிர்வினைக்கும் காத்திருக்காமல் தனது கேள்வியை முன்வைத்தான். ‘நல்லது என்கிறீரே…. அது நல்லது என்பதால் நீர் முன்மொழிகிறீரா…. அல்லது நீர் முன்மொழிவதால் அது நல்லது ஆகிறதா?’
கடவுள் ஒரு நொடி யோசிக்கிறார்.. ‘நான் முன்மொழிகிறேன்… அதனால் அது நல்லதாகிறது’
பிளாட்டோவின் முக ஜாடையை கடவுளால் கிரகிக்க முடியவில்லை. ‘விடை தவறு’ என்றான். ‘நீர் முன்மொழிவதால் நல்லது என்பது நல்லது ஆகிறது என்றால் குழந்தைகளை சித்திரவதை செய்யலாம் என்று நீர் சொல்லிவிட்டதாக யாராவது புளுகினாலும் நல்லதாகி விடாதா…. முட்டாள்தனம்’ என்றான் பிளாட்டோ.
கடவுள் சமாளித்தார். ‘சும்மா உம்மை பரிசீலித்தேன். அந்த மாற்று.. அது நல்லது என்பதாலே தான் நான் முன்மொழிகிறேன் என்பது தானே உண்மை?.’
‘இது… அதைவிட அபத்தம்… ஏற்கனவே நல்லது என்கிற ஒன்று உள்ளது… அதை முன்மொழிவதுதான் உம் வேலை என்றால்… அதை செய்ய நீர் எங்களுக்கு தேவை இல்லை… நான் நல்லது எது என்பதை ஆய்வுசெய்ய உம்மை பரிசீலிக்கவே தேவையில்லை’
‘ஆனால்…’ கடவுளின் குரல் மங்கியது. ‘இந்தத் துறையில் நான் சில நல்ல பாட புத்தகங்கள் வழங்கி உள்ளது உண்மைதானே…?’ என்றார். ‘உமது தார்மீக தத்துவ விளக்கத்தின் அடிக்குறிப்பிலாவது என்னை சேர்க்கக்கூடாதா…. ’என்றார் இறுதியாக ‘அறிவு இயல் என்னை அங்கீகரித்தது போலிருக்குமே’
‘அதுவும் நல்லதா… என்று ஆராயவேண்டும் அறிவு என்னும் இயலுக்குள் நீர் பொருந்தி வர வாய்ப்பில்லை’ திட்டவட்டமாக உரையாடலை முடித்து விட்டான் பிளாட்டோ… (பிளாட்டோவின் இயூத்ரைஃபோ Euthyphro என்ற நூலில் இருந்து)
அன்று போனவர் தான் கடவுள். கடவுள் இறந்துவிட்டார் என்று பிறகு ஸ்பினோசா திட்டவட்டமாக அறிவித்தான். இருக்கிறார் அல்லது இல்லை எனும் விவாதமாகவே தங்கிப் போனார் அவர். கடவுளை தேடி அலைந்த ஒரு கூட்டம் அது மனிதனின் உள் இருப்பதாக பிறகு இயற்கையோடு கலந்திருப்பதாக அப்படி இப்படி என்று அறிவிப்புகளை வெளியிட்ட பல நூற்றாண்டுகளை கடந்தும்… எந்தக் கடவுள் நிஜம்… என ஓடிய ரத்த ஆறுகளை கடந்தும் அப்படி ஒருவர் இருக்கிறாரோ…. இல்லையோ இது பற்றி எந்த பரிசீலனையும் தேவையற்றதாக பிளாட்டோவின் அறிவியல் மட்டும் தர்க்கத்தை புறந்தள்ளி பல புரட்சிகளை சாதித்தது. எழுத்தாணியை பேனாவாக்கி பிறகு கணினி மொழியாக்கி அதையும் கடந்து புவியை முற்றிலும் அறிவியல் மயமாக்கி தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த அந்தஸ்தை அறிவியல்தான் எடுத்துக் கொண்டது.
இயற்பியல் முதல் அணுவியல் வரை வேதியியல் முதல் மருந்தியல் வரை வானியல் முதல் விண்வெளி இயல் வரை உயிரியல் முதல் மரபியல் வரை எங்கும் எதிலும் அறிவியல்..அறிவியல்…. சரி நான் விஷயத்திற்கு வருகிறேன்.
நான் ஏன் அறிவியலை நம்பி ஏற்க வேண்டும்? அறிவியலே வெல்லும் என்று பிளாட்டோ சொன்னது இருக்கட்டும் நான் ஏன் ஏற்கவேண்டும்?. ஏனெனில் அறிவியல் தன்னைத்தானே முதலில் நம்புவது இல்லை. இதை குறிப்பிடுவது உங்களுக்கு சிரிப்பு வரவழைக்கலாம். நான்தான் எல்லாம் என்னை நம்பு… நம்புகிறவனுக்கு சொர்க்கம் காத்திருக்கிறது என்று அறிவியல் அறிவிப்பதே இல்லை. பிளாட்டோ காலம் தொட்டே அப்படித்தான். தற்போதைக்கு கடவுளை விட்டுவிடுவோம்.
சமீபத்தில் இணையத்தில் வத்ரோபோ பல்கலைக்கழக தர்க்கவியல் பேராசிரியர் ஜான் ரைட் எழுதிய ஒரு கட்டுரை வாசித்தேன். தர்க்க விவாதங்களின் இறுதிப்படி நிலை அறிவியல் சார்ந்தது என்று அவர் எழுதுகிறார் அறிவியல் முழுமை அடைந்து முடிந்து போன வடிவம் அல்ல என்பதை புரிந்து கொள்பவர்கள் மட்டுமே அறிவியலை நம்பலாம் என்று அறிவிக்கிறார். மெய்மைகளை அப்படியே ஏற்காமல் அது மெய்மை தான் என்று ஆய்வு செய்து நிறுவுவதால் அறிவியல் அதிக நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. பிரிட்டானிய அறிஞர் அறிவியல் சித்தாந்தி காரல் பாபர் பற்றி சொல்ல வேண்டும். பல கணித மேதைகள் நோபல் அறிஞர்களை தூண்டிவிட்ட வித்தகர். நான் விரும்பும் அறிவியல் தத்துவ ஆய்வாளர்.
அவர் அறிவியல் அணுகுமுறை பற்றி (நமக்கு புரியும் விதமாக) விவாதித்து இருப்பதை அப்படியே தருகிறேன் அறிவியல் தனக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஒரு விஷயத்தை உண்மைதானா என்று பரிசோதிப்பது இல்லை. மாறாக அது பொய்யா என்று பரிசோதிக்கிறது இதை காரல் பாபர் பொய்யாக்கும் கருத்துரை (Falsification Principle) என்று அழைக்கிறார் ஒரு கோட்பாட்டை விஞ்ஞானிகளால் பல ஆண்டுகளாகியும் அது பொய் என்று நிரூபிக்க முடியவில்லை எனில் அது உறுதிப்படுதல் எனும் தகுதியை அடைவதாக காரல் பாபர் அறிவிக்கிறார் உறுதிப்படுத்தப்பட்ட அந்த விஷயமும் இறுதி படுத்தப்பட்டது அல்ல இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் அறிவியல் திரும்பத் திரும்ப அதை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்துகிறது மேலும் அதை குறித்து அறிவை மேம்படுத்துகிறது எதையும் சந்தேகி என்று அது எப்போதும் உண்மைகளைஅணுகுகிறது.
எனவே வரலாற்றில் ஒரு காலத்தில் அறிவியல் உண்மை என்று நம்பப்பட்ட பலவற்றிற்கு அறிவியலே முற்றுப்புள்ளி வைத்து விட்டது உதாரணமாக பாதரசம் மன நோயை தீர்க்கும் மருந்து என்பது தற்காலத்திற்கு பொருந்தாது அதைப்போல உங்களது மண்டை ஓட்டின் மேடு பள்ளத்தை வைத்து உங்கள் குணாதிசயத்தை சொல்லிவிடலாம் என்பதும் பொய்த்தது அறிவியல் ஒன்றை மிகச் சரி என்று சொல்லுவதற்கு மிக அதிக காலம் எடுத்துக் கொள்கிறது எடிசன் இன்று இருந்திருந்தால் தனது பல கண்டுபிடிப்புகளை பார்த்து அவரே நகைத்திருப்பார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு ஐன்ஸ்டீன் ஈர்ப்பு அலைகள் என்று ஒன்று உள்ளது என அறிவித்தபோது சிரித்தவர்கள் நூறாண்டுகள் கழித்து 2015இல் ஈர்ப்பலைகள் இருப்பதை விஞ்ஞானிகள் நிரூபித்த போது உயிரோடு கூட இருக்கவில்லை. ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு அலைகள் கோட்பாட்டு பொய்யாக்கும் கருத்துரைகள் உட்பட பல படிநிலைகள் கடந்து இன்று உறுதிப்படுத்துதல் படிநிலையை அடைந்துள்ளது. இனிதான் ஈர்ப்பலைகளின் (Gravitational Waves) பயன்பாடு பற்றிய இறுதிப்படுத்துதல் படிநிலை வரவேண்டும் இதே தான் ‘வானொலி அலைகள்’ விஷயத்திலும் நடந்தது வெறும் அனுமானம்தான். 1867-ல் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் தொடங்கி ஹென்ரிச் ஹெர்ட்ஸ் வரை கணித வரையறைகளாகவும் கோட்பாட்டு அனுமானங்களாகவும் இருந்த ‘ஹெர்ட்ஸ்சியன் அலைகள்’ (அதன் பழைய பெயர்)
1912 இல் உறுதிப்படுத்தப்பட்ட ‘வானொலி அலைகள்‘( Radio waves ) ஆகின்றன. இன்று நமது வைஃபை (Wi-Fi) என்பது வானொலி அலைகளின் இறுதிபடுத்தப்பட்ட பயன்பாட்டு படிநிலை ஆகும். அறிவியலை அறிவியலே வெல்லும் என்று பிளாட்டோ அறிவித்தது இதைத்தான்.
பிளாட்டோ வாதிகளின் மேலும் ஒரு அடிப்படையை அறிவியல் வரலாற்றாளர் நவோமி ஒரெஸ்கஸ் ( Naomi Oreskes) விவரிக்கிறார். அவர் காரல் பாபரின் பொய்யாக்கும் கருத்துரையை ஏற்கிறார். ஆனால் அறிவியலின் நம்பகத்தன்மைக்கு அது மட்டுமே காரணம் அல்ல என்கிறார். அறிவியலின் செயல்பாடுகளில் இருக்கும் உலகளாவிய தன்மையை அவர் காரணமாக சொல்கிறார் தனி மனிதரோ ஒரு போதகரோ அல்ல அறிவியலின் வெற்றி பெரும்பான்மை விஞ்ஞானிகளின் ஒருமித்த ஏற்பின் அடிப்படைக் கொண்டது அறிவியல் இன்று துறைகளாக பிரிந்து இருக்கிறது.
நவோமி ஒரெஸ்கஸ் காட்டும் கீழ்க்கண்ட எடுத்துக்காட்டு பிளாட்டோவாதிகளின் சிந்தனை உலகை உரித்து வெளியே காட்டும் கொண்டுவரும் முயற்சி. ஒரு விஞ்ஞானி குறிப்பிட்ட ஒரு யோசனையை ஆய்வுக்கும் புள்ளி விவரங்களுக்கும் உட்படுத்தி ஒரு ஆய்வுக் கட்டுரையாக அதை தொகுத்து தனது சக (அதே துறை) சகாக்களுக்கு வாசிக்க.. பரிசீலிக்க தருகிறார். அவர்கள் அந்த ஆய்வு கட்டுரையின் சாரத்தை மறுக்க பல வகையில் சோதித்து அதற்கு விமர்சனப்பூர்வமான ஒரு எதிர்வினை ஆய்வு கட்டுரையை படைக்கிறார்கள் அதற்கு சகாக்களின் எதிர்வினை ஆய்வு அறிக்கை என்று பெயர் அந்த ஆய்வு அறிக்கையின் மூலம் நடந்த விவாதத்தின் அடிப்படையில் தனது இறுதி ஆய்வுக்கட்டுரையை தயாரித்து அந்த விஞ்ஞானி உலகிற்கு வழங்கும் ஒரு நடைமுறை அறிவியலின் நம்பகத்தன்மையை மேலும் கூட்டுகிறது. சமீபத்தில் கோவிட்-19 தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அனைத்தும் கூட்டுமுயற்சியே.
ஒரு கோட்பாட்டு இந்த எதிர்வினை ஆய்வறிக்கை படிநிலைகளை கடப்பது உடனே நடப்பதும், அல்லது பல ஆண்டுகள் கடந்து நடப்பதும் இரண்டுமே சாத்தியம்தான். 1896 இல் கரியமில வாயுவின் அதிகரிப்பால் புவி சூடேற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது. அப்போது அந்த ஆய்வு கட்டுரை கிடப்பில் போடப்பட்டது. ஜோசப் ஃபவுரியர் முன்வைத்த பசுமை குடில் விளைவும் 20-ம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை கண்டுகொள்ளப்படவில்லை 1950-களுக்கு பிறகு புவியில் மனித செயல்பாடுகளால் குறிப்பாக புதை படிவ எரிமங்களால் புவி வெப்ப ஏற்றம் நடப்பதாக ஒரு கோட்பாடு முன்மொழியப்பட்டது. ஆனால் அப்போதும் பெரும்பாலான விஞ்ஞானிகள் அதை ஏற்கவில்லை. ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் புவியில் தட்பவெப்பமாறுதல் எனும் பயங்கர பின்விளைவு ஒரு அறிவியல் பூர்வமான தனித்துறையாகவே வளரும் அளவிற்கு பல கண்டுபிடிப்புகளால் நோபல் பரிசு உட்பட பெற்று அங்கீகரிக்கப்பட்டது. இன்று 99% பிளாட்டோ வாதிகளின் கதாநாயகனாக ஃபவுரியர் ஏற்கப்பட்டிருக்கிறார். இப்படித்தான் அறிவியல் நம்பகத் தன்மையை பெறுகிறது என்கிறார் நவோமி.
காரல்சாகன் குறிப்பிட்டதைப்போல் (காஸ்மாஸ் நூல்) ‘பேரழிவு தினம் என்று ஒன்று இருக்குமேயானால் புவியின் ஏனைய உயிரிகளுக்கும் மனிதனுக்குமான ஒரு வேற்றுமையாக, தான் அழிய போகிறோம் என்பதை மனிதன் மட்டுமே முன் உணரமுடியும். அத்தகைய தனித்தன்மை மனிதனுக்கு ஏற்பட காரணமான ஒன்றிற்கு தான் அறிவியல் என்று பெயர்’. ஆனால் பிளாட்டோவாதிகளின் கதை இத்தோடு முடியவில்லை.
21 ம் நூற்றாண்டில் இந்திரபிரஸ்தத்தில் அறுதி பெரும்பாண்மையுடன் ஆட்சியை பிடித்த கடவுள் அந்த தேசத்தின் ராக்கெட் ஏவுகணைவாதிகளாக இருக்கும் பிளாட்டோவாதிகள் முன் ஒருநாள் தோன்றுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. கடவுள் அறிவியலுக்கு தேவை இல்லை என்று பிளாட்டோ பிரகடனப்படுத்திய 2000 வருடங்கள் கழித்து வரலாற்றில் அந்த நிகழ்வு மீண்டும் நடந்தது….. (ஆனால் அறிவியல் தனக்கு தேவை இல்லை என்று அந்த கடவுள் எப்போதும் சொன்னதில்லை…)
‘என் கோவிலில் என் பிறப்பு அனுமானிக்கப்பட்ட ஒரு நவமி தினத்தில் என் உருவசிலைமீது சூரிய ஒளிபடும் வண்ணம் கருவி ஒன்றை வடிவமைத்து தரும் பிளாட்டோ வாதிக்கு – பரிசு’ என்கிறார் கடவுள்.
இம்முறை தங்களது ஆய்வுக்கான நிதி ஆதாரங்களின் அதிகாரத்தை தன் கையில் வைத்திருக்கும் கடவுளிடம் எதுவும் விவாதிக்காமல் மவுனம் காத்த பிளாட்டோவாதிகளிடம் ‘ போட்டி தொடங்கட்டும்… அறிவியலை அறிவியலே வெல்லும்’ என்று கூறிவிட்டு தற்காலிகமாக விடைபெற்றார் கடவுள்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.