உங்களிடம் அவரின் குற்றத்திற்கான ஆதாரம் இல்லாத போது, எப்படி அவரை நீங்கள் சிறையில் வைக்க முடியும்?

ஆகஸ்ட் 28,2020 அன்றோடு மதிப்புமிக்க வக்கீலும் மனித உரிமை ஆர்வலருமான சுதா பரத்வாஜ் அவர்கள் சிறையில் இரண்டு வருடங்களைக் கழித்திருப்பார். 

எல்கர் பரிஷாத் வழக்கில் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்போடு தொடர்பில் இருந்ததாக சுதா பரத்வாஜ் அவர்கள் கைது செய்யப்பட்டார். 

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் உடனே வக்கீல் உடை தரித்து ஐஐடி டெல்லியின் முன்னாள் மாணவரும் தன் வாழ்நாள் முழுவதும் சத்தீஸ்கர் மாநில ஆதிவாசிகளின் உரிமைகளுக்காகவே அர்ப்பணித்தவருமான சுதா பரத்வாஜ் கைதுக்கு எதிராக நீதிமன்றம் சென்றிருப்பார் என சுதா பரத்வாஜ் அவர்கள் கைதான சமயத்தில் வரலாற்றியலாளரும் காந்தி அவர்களின் சுயசரிதையை வடித்தவருமான ராமச்சந்திரா குஹா சொன்னார்.

பிப்ரவரி மாதம் அவரது வழக்கு மகாராஷ்டிரா காவல்துறையிடமிருந்து தேசிய புலனாய்வு அமைப்பிடம் மாற்றப்பட்டது முதல் சுதா பரத்வாஜ் மத்திய மும்பையில் பைகுல்லா பெண்கள் சிறையிலிருந்து வருகிறார். 58 வயதான தீவிர நீரழிவு மற்றும் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவரான சுதா பரத்வாஜ் அவர்களின் பிணைக்கான கோரிக்கை கடந்த மாதம் மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டது. 

ஏழை மக்களுக்காக உழைக்கும் ஒருவர் எப்படி குற்றவாளியாகச் சித்தரிக்கப்படுகிறார் என நான்கு மாதங்களுக்குப் பின் ஜூன் 4 அன்று தனது தாயாரான சுதா பரத்வாஜிடம் பேசிய மாயிஷா rediff.com நிருபரான பிரச்சன்னாவிடம் கேட்கிறார். இனி மாயிஷாவுடன் பிரசன்னா நடத்திய உரையாடல்

உங்கள் தாயார் கைதாகி இரண்டு வருஷங்கள் ஆகின்றன. அம்மாவுடன் இல்லாத இந்த இரு வருடங்கள் எப்படி இருந்தன?

உண்மையில் தனியே யாருமற்று இருப்பது வாழ்வது என்பது மிக சிரமம். ஒவ்வொரு குழந்தைக்கும் அவருடைய தாய் கண்டிப்பாய் வேண்டும், தானே! அக்குழந்தை 16, 23 இல்லை 5 வயதானாலும் சரி, ஒவ்வொருக்கும் அவருடைய தாய் அவசியம் தேவை.

ஆனாலும், சோகம் என்னவென்றால் நான் பள்ளி படிக்கும் காலத்திலும் என் தாயுடன் போதுமான நேரம் செலவழித்திராத குழந்தையாக இருந்தேன். அவர் அவருடைய பணிகளில் பிசியாக இருந்தார். என் தாயாரை புரிந்து கொள்ள எனக்கு தோதான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் எப்படி தாயாக இருந்திருப்பார் என என்னால் பார்க்க முடியவில்லை. 

எப்போதும் அநீதியாய்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாப்பதில், பெற்றுத்தருவதில் நீதிமன்றங்களில் மிக பிசியாக இருந்தார். அதோடு சங்க நடவடிக்கைகளிலும் மிகத் தீவிரமாக இருந்தார் என் தாய். 

பின்பு நாங்கள் ஒன்றாக நேரத்தைச் செலவழிக்கத் தொடங்கிய சமயத்தில் அவர் கைதாகிறார்.  நாங்கள் என்னுடைய கல்லூரிக்காக சத்தீஸ்கரிலிருந்து டெல்லிக்குக் குடிபுகுந்த சமயம் அது. 

நான் என் தாயுடன் பேச முடிந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. திடீரென ஜூன் 9 அன்று என் தாயாரிடம் இருந்து போன் அழைப்பு வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

Please release my mother, Sudha Bharadwaj' - Rediff.com India News

ஆக, ஜெயில் அதிகாரிகள் அவரை உங்களுடன் தொலைப்பேசியில் பேச அனுமதித்தனர் அல்லவா?!

அது எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் அழைத்தார்; நான் அது உண்மையிலேயே நல்லது என நினைக்கிறேன். இந்த அழைப்பு இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்தது. ஆனால், நான்கு மாதங்களுக்குப் பின் தாயின் குரலைக் கேட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பிப்ரவரி 2020இல் அவர் பூனேவின் யெரவாடா சிறையில் இருக்கும்போதுதான் கடைசியாகப் பேசியது. 

இந்த தொலைப்பேசி அழைப்பில் அவர் என்ன சொன்னார்?

நான் எப்படி இருக்கிறேன் என்ன செய்கிறேன் என கேட்டார். நான் அவருடைய உடல்நிலையை விசாரித்ததில் அவர் அது அவ்வளவு சரியில்லை என்றே சொன்னார்.

அந்த அழைப்பை அவரே துண்டித்தாரா அல்லது துண்டிக்கப்பட்டதா?

இரண்டு நிமிடங்கள் மட்டுமே அந்த அழைப்பு இருந்தது. பின்பு துண்டிக்கப்பட்டது. அவர் ஒரு மொபைலிலிருந்து தான் என்னை அழைத்தார். ஒருவேளை ஏதேனும் ஒரு அதிகாரி உடைய மொபைல் ஆக இருந்திருக்கலாம். 

அவர் கோவிட் நோய்த் தொற்று குறித்து ஏதேனும் சொன்னாரா? ஏனெனில் அந்த பைகுலா சிறையில் ஒரு மருத்துவர் உட்பட சுமார் 80 சிறைவாசிகள் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதான்.

அந்த அழைப்பு மொத்தமே இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் எங்களால் பல விஷயங்கள் பேசவே முடியவில்லை.

இந்த இரு வருடங்களில் எத்தனை முறை அவரை சந்திக்க முடிந்தது உங்களால்?!

நான் இரு மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து வந்தேன். டெல்லியிலிருந்து பூனா சென்று அவரை பார்க்கச் சென்றால் எனக்குக் கிடைப்பது என்னவோ 5 முதல் 8 நிமிடங்கள் மட்டுமே தான். அதிலும் அவரை தொடக்கூட முடியாது, கட்டியணைத்திட முடியாது. ஆகஸ்ட் 2018இல் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு ஒரு 10-12 தடவை பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். 

அந்த சந்திப்புகள் எப்படி இருக்கும்?

நான் ஒரு கண்ணாடி தடுப்பிற்குப் பின் நின்று கொண்டு அவருடன் பேசும்படியாக இருக்கும். நீதிமன்றங்களில் சந்திக்க முடிந்த சில பொழுதுகளில் காவல்துறை அதிகாரிகள் என்னுடன் கடுமையாக நடந்து கொண்டனர். அவர்கள் எப்போதும் என் தாயாரை நான் சந்திப்பதை அவரை கட்டியணைத்திட முயல்வதை ஆதரிக்காதவர்களாகவே இருக்கின்றனர். 

ஏன் உங்களால் பிப்ரவரி 2020க்குப் பின் சந்திக்கவே முடியவில்லை?

நான் பிப்ரவரியில் என்னுடைய பிறந்த நாளன்று சந்தித்தேன். அதற்குப் பிறகு என்னுடைய தாயாரை மும்பை பைகுலா சிறைக்கு மாற்றியதும் பின்னர் இந்த கோவிட் தொற்று பரவலானதும் இக்காலத்தில் நடந்தன. தேசிய புலனாய்வு அமைப்பிடம் இவ்வழக்கு மாற்றப்பட்ட பின் யெரவாடா சிறையிலிருந்து என் தாய் பைகுலா சிறைக்கு மாற்றப்பட்டார். என்னுடைய தாயாருடனான கடிதப் பரிமாற்றங்களுக்குக் கூட எனக்கு அனுமதியில்லை. 

Interview with Maaysha: Please release my mother, Sudha Bharadwaj ...

சிறையில் உங்கள் தாயார் அடைக்கப்பட்டதற்கு பின்னான உங்கள் சந்திப்புகளில், தான் ஆதிவாசிகளுக்காக மற்றும் தொழிலாளர் சங்கங்களில் உழைத்ததற்காக மத்திய அரசோ அல்லது மகாராஷ்டிரா பாஜக அரசோ தன்னை பழிவாங்கச் சிறையில் அடைத்துள்ளதாக உங்கள் தாயார் சொன்னாரா?

என்னுடைய சிறுவயதிலிருந்தே ஏதோ ஒரு நாளில் ஏதோ ஒரு அரசால் அவர் ஏழைகளுக்காகப் போராடுவதற்காக இந்த அனுபவம் கிடைக்கும் என உறுதியாக நம்பி வந்தேன். அவர் அர்ப்பணித்துள்ள நோக்கங்களுக்காக ஒரு நாள் அவர் சிறை செல்ல நேரிடும் என அவரே என்னிடம் சொல்லிய தருணங்களில், ஏன் அப்படி பேசுகிறீர்கள்? என கேட்டுள்ளேன். 

அவர் சொன்னது பயம் கொண்டு அல்ல, மாறாக அவர் தயாராகத்தான் இருந்தார். அவருக்கு இது குறித்து ஒரு முன் தீர்மான உணர்வு எப்போதும் இருந்தது.  

உங்கள் தாயார் மற்றும் ஷோமா சென் ஆகியோரை தற்காலிகமாகவேனும் விடுவிக்க சுமார் 600 இந்தியப் பிரபலங்கள் முக்கியஸ்தர்கள் ஜெயில் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். உங்கள் தாயார் நீரழிவு நோயாளி என்பதற்காகவும் கோவிட் தொற்று ஏற்பட்டால் அவருடைய நிலைமை கருதியும் நீங்களும் ஜெயில் அதிகாரிகளுக்கும் மாநில அரசுக்கும் கடிதம் ஏதேனும் எழுதினீர்களா?

நான் எதிர்வரும் ஆகஸ்ட் 28 அன்று அதாவது என்னுடைய தாயார் சரியாக இரண்டாம் வருடச் சிறைவாசம் ஆன நாளில் அவரில்லாத இந்த இரு வருடங்கள் எவ்வாறு இருந்தது எனக்கு என்பது குறித்த ஒரு கட்டுரை எழுதும் எண்ணம் இருக்கிறது. 

உங்கள் தாயாருடன் பேச நான்கு மாதங்கள் என்னும் இந்த இடைவெளி எதனால்? ஏன் அடிக்கடி அவருடன் பேச முடியவில்லை உங்களால்?

மார்ச் 30 அன்று தேசிய புலனாய்வு அமைப்பு பைகுலா ஜெயில் அதிகாரிகளிடம் என் தாயாருடன் நான் தொலைப்பேசியில் பேச வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு சொன்னது. நீதிமன்றம் நான் அவரை அழைத்திடவோ அவர் என்னை அழைத்திடவோ அனுமதி அளித்திருந்த போதும், சிறையின் தொலைப்பேசி எண்ணை நான் தொடர்பு கொண்ட போது, நான் பெற்ற பதில் என்பது ஜெயில் நிர்வாகத்திடம் இன்னும் நீதிமன்ற உத்தரவு வந்து சேரவில்லை என்பதே. இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் நீதிமன்ற உத்தரவினை ஜெயில் நிர்வாகத்தாரிடம் நினைவூட்டிய பிறகும் ஏதும் நடக்கவில்லை. 

ஷோமா சென் ஆன்ட்டி அவருடைய குடும்பத்தாருடன் பேச முடிந்திட போதும், என் தாயாருக்கு எவருடனும் பேச அனுமதி கிடைக்கவில்லை. ஜூன் 9 அன்று தான் அத்தொலைப்பேசி உரையாடல் சாத்தியமானது. இரண்டே நிமிடங்களில் அந்த தொலைப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு நான் நிறையப் பேச முடியாமல் போனாலும் இந்த அழைப்பு எனக்கு ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தந்தது. ஒரு பெண் அதிகாரி என்னை அழைத்து நான் சுதா பரத்வாஜ் அவர்களுடன் பேச விரும்புகிறேனா எனக் கேட்டார். 

என்னுடைய பெரிய கவலை எல்லாம் சிறையில் அவர் ஒழுங்காக அவரது மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறாரா என்பதும் நாங்கள் அனுப்பும் மணி ஆர்டரின் மூலம் அவரால் சிறையில் அவருக்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொள்ள இயல்கிறதா என்பது தான். 

Police get custody of activists for 10 days

சிறையில் அவர் வாழிட சூழல் எப்படி இருக்கிறது?

(மிகுந்த தயக்கத்துடன்) எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியவில்லை.

நான்கு மாதங்களுக்குப் பின் உங்களுடைய தாயாருடன் பேச முடிந்திட்ட மனநிலை எப்படி இருக்கிறது?

நான் மிகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன். இது எனக்கு ரொம்பவும் போதாத மோசமான காலம். முதல் சில மாதங்கள் என்னுடைய நிலை மிகவும் பரிதாபகரமானது. இன்னமும் வீட்டிலிருந்து அவரை அக்டோபர் 2017 இல் தூக்கிச் சென்ற அந்த வலியும் தனிமையும் அப்படியே இருக்கிறது. 

அவரால் சிறையிலிருந்து வெளியே வர முடியும் என்ற உறுதி எனக்கில்லை.

அப்படியானால் அவர் வாழ்நாள் முடிய அவரால் சிறையிலிருந்து வெளியே வர முடியாது என்ற பயம் உங்களுக்கு இருக்கிறதா?  

இல்லை, இல்லை அப்படியில்லை. நான் பார்த்த வரையில் அரசோ அல்லது நீதிமன்றங்களோ எங்களுக்குச் சாதகமாக இல்லை, அதனால் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை அவ்வளவுதான். 

உங்கள் தாயார் உங்களுடன் இல்லாத இந்த இருவருட தனிமையை எவ்விதம் சமாளித்து வந்தீர்கள்?

நாங்கள் 2018 வரை சத்தீஸ்கரில் வாழ்ந்து வந்தோம், பின்பு இங்கே பரிதாபாத். நான் எப்படி இந்த பொழுதுகளைக் கடக்கிறேன் என்பதை என்னால் விவரிக்க இயலாது. ஏனெனில் என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் மற்றொரு நபர் என் தாயார் தான். அவர் இல்லாத ஒவ்வொரு கணமும், பொழுதும், நாளும் எப்படிக் கழிகிறது என்பதை என்னால் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. நான் என்னுடைய வாழ்வில் ஒவ்வொரு கணப்பொழுதிலும், நாளிலும் அவரை இழந்து தவிக்கிறேன். 

அவருக்கு எவ்வித ஆதாரமும் இல்லாத பொழுதில் அவரை எப்படி சிறையில் வைக்கலாம் என்ற கேள்வி உங்களிடமிருந்து இந்தியப் பிரதமருக்கோ அல்லது மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சருக்கோ உள்ளதா? ஏனெனில் சமீபத்தில் கோவிட் நோய்த் தொற்று காலமானதால் சிறைவாசிகளிடம் கருணை காட்ட வேண்டும் என சொல்லியிருக்கிறார். அதுவும் நீரழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளவரான 58 வயதான உங்கள் தாயார் கோவிட் நோய் தொற்று எளிதில் ஆட்படும் ஆபத்தும் இருக்கிறதே. 

ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடிய ஒருவரை இந்த பெரு நோய்த் தொற்று அபாய காலத்தில் சிறையில் வைப்பது எள்ளளவும் சரியில்லை என அவர்களிடம் சொல்லவே விரும்புகிறேன். எனக்கு தாய் மட்டுமே. ஆதலால், எனக்கு அவர் ரொம்பவும் தேவை. எனக்கு வருமானம் ஈட்ட எந்த வழியும் இல்லை. என் வாழ்க்கையில் எனக்கு யாருமில்லை. அவர் ஒருவர் மட்டுமே. ஆகையால் என்னுடைய தாயாரை விடுதலை செய்யுமாறு நான் அவர்களிடம் வேண்டுகிறேன். 

தன் வாழ்நாள் எல்லாம் ஏதுமற்றவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடிய ஒரு வக்கீல் இந்தக் குற்றங்களை இழைப்பார் என்பதை எப்படி நம்புவது?

அதுவும் ஆதாரம் ஏதுமில்லாத போதும், அவரை சிறையில் வைப்பது நியாயமற்ற ஒன்று. அநீதியானது. இந்த அநீதி யாருக்கும் இழைக்கப்பட்டு விடக் கூடாது. 

ANI on Twitter: "A team of 10 people came today morning, they didn ...

அரசு வேண்டுமென்றே செய்வதாக நீங்கள் நினைக்கிறீர்களா? எவரெல்லாம் ஆதிவாசி பழங்குடியினருக்காக மனித உரிமைகள் பாதிக்கப்பட்டவர்களுக்காக உழைக்கிறார்களோ அம்மக்களை இந்த அரசு கொடுமைப்படுத்த வேண்டும் என விரும்புவதாக நீங்கள் நம்புகிறீர்களா?

ஒருவர் ஏழை மக்களுக்காக உழைத்திட்டால், அவர் என்ன கிரிமினலா? அவர் கிரிமினல் என்பதாக புனையவே அரசு விரும்புவதாகத் தெரிகிறது. என்ன குற்றச்சாட்டுகள் என் தாயார் மீது சுமத்தியுள்ளனர்? UAPA! அதாவது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்.  இது அவரை கைது செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட மிகப் பயங்கர குற்றச்சாட்டு. 

ஏழை மக்களுக்குச் சட்ட உதவிகளைச் செய்துவந்தவர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் எப்படிப் பாயும்? அவர் என்ன கிரிமினலா? என் தாய் மீதான இந்த அநீதியான சட்டத்திற்குப் புறம்பான கைது நடவடிக்கையைக் கண்டு கோபத்தோடு வெறுப்போடும் தான் நான் வாழ்ந்து வருகிறேன்.

நான் இவ்வாறு சொல்வதால் யாருக்கும் பாதிப்பில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் தாயாரோடும், குடும்பத்தாரோடும் சௌகரியமாக வாழ்ந்து வருகிறார்கள். நான் இங்கே, நீதிமன்றம் உத்தரவிட்டும் நான்கு மாதங்கள் வரை என் தாயாருடன் பேச முடியாது தனியாக இருந்து வருகிறேன்.

தமிழில் : ராம்.

https://m.rediff.com/news/interview/please-release-my-mother-sudha-bharadwaj/20200617.htm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *