‘தனிப்பட்ட தணிக்கையாளர்’ இருந்தும் அதில் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் தொடர்ந்து குழப்பத்தையே ஏற்படுத்தும் PM CARES நிதியம்.
பல வாரங்களாக எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகு, இந்த நிதியத்தைத் தணிக்கை செய்ய சுனில் குமார் குப்தா தலைமையிலான SARC & அசோசியேட்ஸ் நிறுவனத்தை நியமித்திருக்கும் தகவலை அமைதியாகத் தனது வலைத்தளத்தில் புதுப்பித்தது PM CARES.
மார்ச் 28 அன்று இந்த நிதியம் துவங்கப்பட்ட நாள் முதல் PM CARES என்று சொல்லப்படுகிற இந்தப் பேரிடர் நிவாரண நிதி அமைப்பு பல விமர்சனங்களையும், கேள்விகளையும் எதிர்கொண்டு வருகிறது.
அதாவது பிரதமரின் தேசிய நிவாரண நிதியம் (PMNRF) என்ற பெயரில் ஏற்கனவே ஒரு பேரிடர் நிவாரண உதவி அமைப்பு இருக்கும்போது அதற்கு இணையான ஒரு நிதி அமைப்பைப் புதிதாக நிறுவ வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதில் தொடங்கி இதன் வெளிப்படைத்தன்மை, கணக்கியல் முறை , தணிக்கையாளர்கள் பற்றிய தெளிவின்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
மார்ச் 29 அன்று, இந்தக் கட்டுரையின் ஆசிரியர் PM CARES அமைப்புடன் தொடர்புடைய அறக்கட்டளைப் பத்திரம், அறங்காவலர்களின் விவரங்கள், அறக்கட்டளையின் வரி விலக்குச் சான்றிதழின் நகல் மற்றும் பிரமாணப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களைக் கோரி பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
“2005 தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 2 (h) இன் கீழ் PM CARES நிதியமானது பொதுத்துறை அதிகாரத்தின் கீழ் வருகிற அமைப்பு அல்ல” என்ற காரணத்தின் அடிப்படையில் 30 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பிரதமர் அலுவலகம் அந்தத் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தை நிராகரித்தது.
அதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூன் 11 அன்று SARC & Associates என்ற நிறுவனம் இந்த நிதியத்திற்கு “சுயாதீனத் தணிக்கையாளர்களாக” நியமிக்கப்பட்டுள்ளதற்கான அறிவிப்பு PM CARES வலைதளத்தில் புதுப்பிக்கப்பட்டது.
அதைவிட முக்கியமாக இந்தத் தணிக்கையாளரின் நியமனம் என்பது ஏப்ரல் 23 அன்றே செய்யப்பட்டதாக வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் தணிக்கையாளர் நியமனம் செய்யப்பட்டு ஏழு வாரங்களுக்குப் பிறகு ஏன் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பது அடுத்து நிலவும் மர்மமாகும்.
தணிக்கைச் சுதந்திரம்
சுனில் குமார் குப்தா தலைமையிலான ‘SARC & Associates’ நிறுவனம்தான் தற்போது இந்த PM CARES க்கு தற்போது நியமிக்கப்பட்ட சுயாதீன தணிக்கையாளர்.
முன்பு அரசுக்குச் சொந்தமான தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும், ஜீ பிசினஸ் தொலைக்காட்சியிலும் அவ்வப்போது தோன்றி தேசத்தைக் கட்டியெழுப்ப முன்னெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட மோடி அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்கில் இந்தியா’, ‘ஸ்டார்ட்-அப் இந்தியா’, ‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’, ‘முத்ரா யோஜனா’, கடன் உத்தரவாத நிதி போன்ற பல்வேறு முயற்சிகள் குறித்தும் “இளைஞர்களுக்கு போதிப்பதாகக்” கூறி வந்தவர்தான் இந்த சுனில் குமார் குப்தா.

மேலும் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ பற்றிய ஒரு புத்தகத்தை எழுதி அதைப் பல மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்களுடன் சேர்ந்து விளம்பரப்படுத்தியவர். மேலும் தனது இணையதளத்தில், தன்னை ஒரு “வணிக நிபுணர், பொருளாதார நிபுணர், ஆசிரியர் மற்றும் கள சேவகர்” என்று வர்ணித்துள்ளார் குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது வலைத்தளத்திற்குள் நுழைந்தவுடன் முகப்பிலேயே பியூஷ் கோயல், அனுராக் தாக்கூர், கிரேன் ரிஜிஜு, டெல்லி பாஜக முன்னாள் தலைவர் மனோஜ் திவாரி, பாஜக ஜபல்பூர் எம்.பி. ராகேஷ் சிங் மற்றும் பல முன்னணி பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து குப்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக் காணலாம். இதன் உச்சபட்சமாகப் பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட இரண்டு புகைப்படங்களும் இருக்கின்றன.
மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான (ONGC), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) மற்றும் அரசுக்குச் சொந்தமான SBI பொதுக் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் சட்டரீதியான மத்தியத் தணிக்கையாளராகவும் இருக்கிறார் குப்தா. அதோடு தற்போதைய இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தணிக்கையாளராகவும் உள்ளார். மேலும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் காப்பரேஷன் வங்கி ஆகிய வங்கிகளின் தணிக்கைகளையும் மேற்கொண்டவர் குப்தா.
இது தவிர, வடக்கு ரயில்வே (NR), டெல்லி மேம்பாட்டு ஆணையம், DGH (பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு), புதிய ஓக்லா தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (NOIDA), கிரேட்டர் நொய்டா தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (GNIDA), யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) போன்ற பல அரசு நிறுவனங்களுக்கும் அவர் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கும், அரசியலுக்கும் நெருக்கமான இணைப்புள்ள நிலையில், டெல்லி நகர மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DDCA) உறுப்பினராகவும் உள்ளார் குப்தா என்பது சுவாரஸ்யமானது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பங்குள்ளதாக அவரது ஆட்சிக் காலத்திலேயே பெரும் சர்சையைக் கிளப்பியது.
டெல்லியைத் தளமாகக் கொண்ட ராஷ்டிரிய ஆண்டியோதய சங்கம் (RAS) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முக்கிய உறுப்பினராக உள்ளார் குப்தா. RAS இன் சமூக வலைத்தள பக்கங்கள் “வறுமை ஒழிப்பு , வேலைவாய்ப்பின்மை மற்றும் அசுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஒரு சமத்துவ இந்தியாவை உருவாக்குவதை இலக்காகக் கொண்டது” என்று அவர்கள் கூறினாலும், அதன் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகளில் பெரும்பாலானவை மத நடவடிக்கைகளை நோக்கியதாகவே தெரிகிறது. மேலும் பா.ஜ.க தலைமையிலான உத்தரகண்ட் அரசும், ஸ்ரீ பத்ரிநாத் கோயில்கள் குழுவும் RAS இன் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் ஆதரவளித்துள்ளன என்று அவர்களின் சமூக வலைத்தள பதிவுகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 7, 2018 அன்று, சிகாகோவில் நடைபெறவிருக்கும் உலக இந்து காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதாக குப்தா தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். ஒரு தணிக்கையாளர் உட்பட ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்களின் நம்பிக்கைகள் சார்ந்து பதிவிட உரிமை உண்டு எனினும் இந்த மாநாட்டின் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மாநாட்டின் முக்கிய உரையை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வழங்கினார் என்பதே.
இப்போது நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், குப்தாவின் இத்தகைய தொடர்புகள் ஏற்கனவே தனது செயல்பாடுகளை இரகசியமாக வைத்திருக்கும் PM-CARES நிதியின் தணிக்கையாளராக இருக்கும் ‘SARC & Associates‘ நிறுவனம் தான் பாதுகாக்க வேண்டிய கருத்துச் சுதந்திரத்தையும், வெளிப்படைத்தன்மையையும் சீர்குலைக்கிறதா? என்பதுதான்.
தணிக்கையாளர் சுதந்திரம் குறித்த விதிகளை நிறுவியது
இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (ICAI) என்பது பாராளுமன்ற சட்டத்தின் கீழ் இந்தியாவில் பட்டயக் கணக்காளர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும்.
தணிக்கையாளர்களின் சுதந்திரம் குறித்த அதன் விதிகளை விவரிக்கும் ஒரு தெளிவான வழிகாட்டுதல் குறிப்பு ICAI வசம் உள்ளது.
தணிக்கையாளர் “சுதந்திரத்தை” வரையறுக்கும் பிரிவில், ICAI வழிகாட்டுதல்கள் பிரிவு (ii) பின்வருமாறு கூறுகிறது:
“நிறுவனம், உத்தரவாதக் குழுவின் உறுப்பினர், ஒருமைப்பாடு, குறிக்கோள் அல்லது தொழில்முறை சந்தேகம் ஆகியவை போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்த்து எந்தவொரு பாதுகாப்பை உள்ளடக்கிய அனைத்துத் தகவல்களையும் மூன்றாம் தரப்பினர் கூட அறிந்துகொள்ளக் கூடிய அளவில் தணிக்கையாளரின் சுதந்திரம் அமைந்திட வேண்டும்.”
இதேபோல், பிரிவு 1.4 பின்வருமாறு கூறுகிறது:
“தணிக்கையாளரின் சுதந்திரம் உண்மையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து நபர்களுக்கும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் .”
என் கருத்துப்படி, ஆளும் கட்சித் தலைவர்களுடனான குப்தாவின் புகைப்படங்களும், PM CARES நிதியத்தின் முன்னாள் நிர்வாக அலுவலரான பிரதமர் மோடியின் கொள்கைகளை பொது ஊடகங்களில் ஆதரித்து வெளிவரும் அவரது நிகழ்ச்சிகளும், ICAI இன் வழிகாட்டுதல்களுக்குட்பட்டு PM CARES நிதியத்திற்குச் சுயாதீனத் தணிக்கை நடத்த SARC & Associates நிறுவனம் போதிய திறனைப் பெற்றிருப்பதாக மக்களிடம் ஏற்பட்டுள்ள ஒரு பொதுக் கருத்தை மேலும் வண்ணமயமாக்கக்கூடும்.
இரண்டு நிதியம் , ஒரே தணிக்கையாளர்
இயற்கை பேரழிவுகள் மற்றும் அவசரக்கால சூழ்நிலைகளைச் சமாளிக்க முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட இந்திய அரசின் PMNRF பற்றி இப்போது பார்ப்போம்.
2009-2010 முதல் 2018-19 வரை PMNRF இன் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் இந்தியப் பிரதமரின் இணையதளத்தில் கிடைக்கின்றன.
2009-10 முதல் 2017-18 வரை PMNRF இன் தணிக்கையாளராக இருந்தவர் வைத்தியநாத அய்யர் & கோ நிறுவனத்தின் இயக்குநர் தாக்கூர்.
2018-19 ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் திடீரென மாற்றப்பட்டு PMNRF இன் புதிய தணிக்கையாளராக யார் நியமிக்கப்பட்டார்கள் என்று யூகிக்க முடிகிறதா? அது சரி – இது சுனில் குமார் குப்தாவின் SACR & Associates தான். அதுதான் இப்போது PM CARES யும் தணிக்கை செய்கிறது.
இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் PMNRF க்கு புதிய தணிக்கையாளர்களை நியமிக்கும்போது போட்டி ஏலச்சீட்டு செயல்முறை எதுவும் தொடங்கப்படவில்லை. இதேபோல், PM CARES இன் தணிக்கையாளர்களின் நியமனத்தின்போதும் எந்த ஒப்பந்த அழைப்பு முறையையும் அல்லது போட்டி ஏலச்சீட்டு செயல்முறையையும் கடைப்பிடிக்கவில்லை என்பதுதான்.
ஆக, இன்றைய நிலவரப்படி PMNRF மற்றும் PMCARES இரண்டுக்கும் “சுயாதீனத் தணிக்கையாளராக” இருப்பது ஒரே நிறுவனம்.
PM CARES அரசு அதிகாரம் பெற்ற பொது அமைப்பு அல்ல
மேலே சுட்டிக்காட்டப்பட்டபடி, PM CARES நிதியத்தின் ஆவணங்களைக் கோரும் RTI விண்ணப்பம் “ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 (h) இன் கீழ் PM CARES நிதியம் அரசு அதிகாரம் பெற்ற பொது அமைப்பு அல்ல” என்ற அடிப்படையில் பிரதமர் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.
பிரிவு 2 (h) அரசு அதிகாரம் பெற்ற பொது அமைப்பு எது என பின்வருமாறு வரையறுக்கிறது:
அரசு அதிகாரம் பெற்ற பொது அமைப்பு என்பது எந்தவொரு அதிகாரமோ, அமைப்போ, சுயராஜ்ஜியத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிறுவனமோ அரசியலமைப்பாலோ அல்லது அரசியலமைப்பின் கீழோ நிறுவப்பட்டிருக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட வேறு எந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்; அல்லது மாநில சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட வேறு எந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்; அல்லது அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு அல்லது உத்தரவின் மூலம், (i) அரசாங்கத்துக்குச் சொந்தமான அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அல்லது கணிசமாக நிதியளிக்கப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்; (ii) அல்லது அரசு வழங்கும் நிதிகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசு சாரா அமைப்பின் கணிசமான நிதியால் நிர்வகிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.”
2011 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அதிகமாகப் பயன்படுத்தும் சமூக ஆர்வலர் அசீம் தக்கியார் வழக்கிலும் இதேபோலத்தான் நிகழ்ந்தது , அதிலும் மனுதாரருக்கு PMNRF கணக்குகள் மற்றும் வழங்கல் குறித்த தகவல்கள் மறுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர் மத்திய தகவல் ஆணையத்திடம் (CIC) முறையிட்டார். அதன்பிறகு மனுதாரருக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு PMNRF க்கு CIC உத்தரவிட்டது.
ஆச்சரியம் என்னவென்றால், CIC யின் இந்த உத்தரவுக்கு எதிராக 2015 இல் நீதிமன்றத்தை அணுகியது பிரதமர் அலுவலகம். பிறகு அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அசீம் தக்கியார் வழக்கில் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள மறுப்புத் தெரிவித்து PMNRF டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் உள்ள நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி எஸ்.ரவீந்திர பட், 2018 மே 23 அன்று வெளியிட்ட தீர்ப்பில் பின்வருமாறு இருக்கிறது:
“பிரதமர் வழிகாட்டுதலில் தனியார் பங்களிப்பாளர்களை வரவேற்று பிரதமர், நிதியமைச்சர் மற்றும் பிற மாநில முக்கியச் செயற்பாட்டாளர்களுடன் கூடிய ஒரு குழுவை உருவாக்கி அவர்களை PMNRF இன் “மேலாளர்கள்” என நியமிப்பதாலேயே அதைத் தனிப்பட்ட நபர்களின் திறன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவாகக் கருத முடியாது. அத்தகைய நடவடிக்கைகள் பிரதமரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அரசாங்கத்தின் செயல்களாகக் கருதப்படுகின்றன. மேலும், வருமான வரிவிலக்கு பெரும் நோக்கத்திற்காக PMNRF என்பது ஒரு அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்டது முதல் அதற்கான நிரந்தர கணக்கு எண் (PAN) பெற்றது மற்றும் நிதியை நிர்வகிக்கத் தணிக்கையாளர்களை நியமித்தது ஆகிய செயல்பாடுகள் “அரசாங்கத்தின் உத்தரவால் செய்யப்பட்டதாகவே” கருதப்படும். எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 (h)(d) இன் படி PMNRF அரசு அதிகாரம் பெற்ற பொது அமைப்பாகவே கருதப்பட வேண்டும்.”
PMCARES நிதியத்தின் வழக்கிலும் மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் பொருந்தும் ஏனென்றால்,
3 மத்திய அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பிரதமரால் அமைக்கப்பட்ட நிதியம்தான் PM CARES. அடுத்து பொதுமக்களின் பங்களிப்புகளையும் PM CARES நிதிக்கு வரவேற்றார் பிரதமர். மேலும் வரி விலக்கு பெரும் நோக்கத்துடனேயே அறக்கட்டளையாக நிறுவப்பட்டுள்ளது.
இருப்பினும் , தகவல் அறியும் சட்டத்தின் கீழ் PMNRF அரசு அதிகாரம் பெற்ற பொது அமைப்பு என்பதை இரண்டாவது நீதிபதி சுனில் கவுர் ஒப்புக் கொள்ளாததால், இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் மூன்றாவது நீதிபதியின் பரிந்துரைக்காக விடப்பட்டது. ஆனால் தற்போது இந்த விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இது தவிர, அரசாங்கத்திற்குச் சொந்தமான பல பொதுத்துறை நிறுவனங்களும், மத்திய அமைச்சகங்களும் PM CARES நிதிக்குப் பல கோடி ரூபாய் பங்களிப்பைப் பகிரங்கமாக அறிவித்துள்ளன. இது PM CARES ஐ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசு சம்பந்தப்பட்ட துறைகளால் கணிசமாக நிதியளிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக ஆக்குகிறது. இதனால் இது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் அரசு அதிகாரம் பெற்ற பொது அமைப்பாக மாறும்.
எனவே PM CARES க்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளைத் தடுக்க பிரதமர் அலுவலகத்தால் பயன்படுத்தப்படும் மேலேயுள்ள வாதங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் நானும், பலரும் மேல்முறையீடு செய்வது இயற்கையானது.
இருப்பினும், பிரதமரால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பிலேயே வெளிப்படைத்தன்மை இல்லாததும் அதன் கணக்குகளைத் தணிக்கைக்கு விடத் தயங்குவதும்தான் மர்மமானதாக இருக்கிறது.
தற்போது அதன் கையிருப்பு ரூ .10,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், PMCARES நிதியம் என்பது மிகப்பெரிய பண இருப்பு கொண்ட ஒரு நிறுவனம் ஆகும். COVID-19 தொற்றுநோய்ப் பரவலுக்கு நடுவில், பிரதமர் அலுவலகம் கூடுதல் முயற்சியை முன்னெடுத்து நிதியைப் பொறுப்புணர்வுடன் செலவிடாமலும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் இருப்பது என்பது விந்தையானது. எனவே கடந்தகால முன்மாதிரிகள் எதுவாக இருந்தாலும், வெளிப்படையான ஒப்பந்த விடுப்பிற்கான அடிப்படையில் ஒரு சுயாதீனத் தணிக்கையாளரை நியமிப்பது, நிதியத்தின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மையும் எந்தவித சந்தேகங்களையும் தீர்க்க உதவும்.
குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க எந்த முகாந்திரமும் இல்லை.
அரைகுறை செய்திகள் மற்றும் டிவிட்டர் ஆதாரங்களைப் பயன்படுத்தி பாஜக தலைவர்களுடனான குப்தாவின் தொடர்புகள் சம்பந்தமான விமர்சனங்களைத் திசை திருப்பவும், எதிர்கொள்ளவும் அவர்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
அந்த வகையில் PMNRF இன் முந்தைய தணிக்கையாளரான வைத்தியநாத் ஐயர் அண்ட் கோ நிறுவனர் தாகூர் தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அவர் காங்கிரஸ் தலைவரான ராமேஸ்வர் தாக்கூர் என்பதே அந்தக் குற்றச்சாட்டு.
2008-09 முதல் PMNRF இன் நிதிநிலை அறிக்கைகளை உற்று நோக்கினால் (தரவு கிடைக்கக்கூடிய ஆரம்ப ஆண்டு) வைத்தியநாத் ஐயர் & கோ நிறுவனத்திற்கான பங்குதாரர் கையொப்பமிட்டவர் எம்.பி. தாக்கூர் என்பவர். ஆனால் அந்த நபர் காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வர் தாக்கூரோ, அவரது எந்த வாரிசுகளோ அல்ல.
இருப்பினும், PMNRF அமைப்பை விளம்பரப்படுத்துபவர்கள் காங்கிரசுடன் உறவு வைத்திருக்கிறார்கள் அல்லது தொடர்பு கொண்டுள்ளனர் என்றால் , UPA அரசாங்கத்தால் அதன் தணிக்கையாளராக வைத்தியநாத் ஐயர் & கோ நிறுவனர் தாகூர் நியமிக்கப்பட்டது குறித்து கருத்து வேற்றுமை இறக்குகிறது என்று தங்களிடம் உள்ள ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முன்வந்தால் அதை நான் வரவேற்கிறேன். உண்மை என்னவென்றால் அது அவர்களால் முடியாது. காரணம், முதன்முறையாக மோடி அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் வைத்யநாத் ஐயர் அண்ட் கோ நிறுவனர் தாகூர்தான் PMNRF இன் தணிக்கையாளர்களாகத் தொடர்ந்து இருந்தார்.
ஒரு தனி நிதியத்திற்கும், அதன் முந்தைய தணிக்கையாளருக்கும் காங்கிரசுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதன் மூலம் அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் தாங்கள் நிறுவிய PMCARES அமைப்பிற்கு எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் தணிக்கையாளரை நியமனம் செய்வதை நியாயப்படுத்த முயற்சிப்பதோடு அவர்கள் யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உண்மையில், இந்த வகையான எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க மறுக்கும் அவர்களது இயல்பு அவர்களது எந்த நோக்கமும் பயனற்றது என்பதையே குறிக்கிறது. குறிப்பாக 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அவர்களின் தேர்தல் நடைமுறை கூட அவர்கள் ஒரு ‘வினோதமான கட்சி’ என்பதையே உணர்த்துகிறது.
Leave a Reply
View Comments