கவிதை: மனித ஜீன்கள் மண்டியிடாது – சந்துரு

நிலையின்மையின்
சூச்சுமம் அறிந்தும்
எதிர்காலத்தின் தேவைகள்
நிகழ்காலத்தின்
பாத்திரங்களிலிருந்து திருடி
ஒளித்து வைக்கப்படுகிறது…!
துக்கம் மகிழ்ச்சி
எதன் மீதும்
ஆதிக்கம் செலுத்த முடியாமல்
உடல் நசுங்கிய புழுவாய்
இருந்த இடத்திலிருந்தே நெளிகிறது
இயலாமைகள்…!
தன்னிடமிருந்து தங்களையே
விலக்கிவைத்து
நடக்கத்தொடங்கிவிட்டார்கள்
மனிதர்கள்…!
உலகம்….
சுவர்களுக்குள் சுருங்கிவிட்டதால்
தனிமையின் முகமூடியணிந்து
மூச்சிறைக்கிறது
காலத்தின் குழந்தை…
பார்வைகள் தீண்டுமளவு
உடலின் தீண்டல்கள்
வலுவிழந்து விட்டது…!
ஜன்னலிலமர்ந்து கரையும் காக்கை…
கடந்து செல்லும் மேகம்…
கதவிடுக்கில் நுழையும் காற்று…
உணவுப்பண்டத்தின் மீது
ஊர்ந்து செல்லும் எறும்புகளென
எல்லா உயிர்களும்
அதனதன் போக்கில்
இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன...
ஜீவராசிகளனைத்தையும்
ஆறாம் அறிவுக்குள் அடக்கிவிட்டதாய்
ஆர்ப்பாட்டம் செய்த மனிதன்தான்
பூமியின் இயக்கங்களிலிருந்து
இடறி விழுந்து
சிறைப்பட்டுக் கிடக்கிறான்…!
ஆனாலும்
அழகான பூமிக்கு
வழிகாட்டும் மாலுமி
மனிதன் மட்டுமே…
கடவுளில்லாத பூமி கூட
எதிர் காலத்தில்
சாத்தியமாகலாம்…
மனிதனற்ற பூமி
சாத்தியமேயில்லை…
மனிதன் உலவாத பூமியை
கற்பனை செய்தால்
அதற்குப் பெயர் பூமியல்ல…
புதர்கள் மண்டி பாதைகளின்றி
விலங்குகள் அசையும் சூனியக் காடு
அவ்வளவே..!
கோடியாண்டுகள் காத்திருந்திருந்து
முதுகெலும்பபை முழுதாய் நிமிர்த்தி
எழுந்து நின்ற மனிதப்பரிணாமம்
நோய்க்கூட்டங்களிடம்
மொத்தமாய் முறிந்துவிழ
மனித ஜீன்கள்
ஒருபோதும் அனுமதிக்காது…
நோய்களின் கிடங்குகளில்
தொலைத்துவிட்ட
சொர்கத்தின் சாவியை மீட்க
கிருமிகளைக்கொண்டே
கிருமியை வெல்லும்
அதிசயமொன்றை
அறிவியல் உலகம்
விரைவில் நிகழ்த்தும்…
சுவாசப் பைக்குள் இறங்கி
யுத்தம் செய்து…
வைரஸ்களை சுத்தம் செய்து
பழைய வசந்தங்களை
பூமியின் மார்பில்
புதிய வாசனைகளுடன்
மனிதன் எழுதுவான்…!
அதுவரை…
அருகில்
பசிக்கும் வயிறுகளை மட்டும்
பத்திரமாய்
பார்த்துக்கொள்ள வேண்டும்…!
சந்துரு…
***************************************