புதுசா அறிமுகமாகிற
சகமனுசனுடனான சந்திப்பில்
அவன் சாதிய தேடுற நீ!
இணையா பயணிக்கும்
மனம் விரும்பும் பெண்ணுடனான
இயல்பான காதல
அணை போட்டுத் தடுக்குற நீ!
நாட்டுக்கு பதக்கம் வாங்கிய
விளையாட்டு வீரனின்
பிறப்ப இணையத்தில் தோண்டுற நீ!
பெத்தமகள அவ இணையோட
வெட்டிக் கொலை பண்ணும்
சாதி மிருகத்திற்கு – மனசுக்குள்
மாலையப் போடுற நீ!
ஜில்லாக் கலெக்டரே ஆனாலும்
தன் சாதி இல்லன்னா- அவர்
திறமையத் தூசியா நெனக்கிற நீ!
ஜீன்சிற்கும் கூலிங்
கிளாஸிற்கும்
மயங்கிடுவாங்கன்னு- பெண்ணை
இழிவாக பேசுற நீ!
எந்த முயற்சியும் இல்லாம
ஓசியில் கிடைச்சிட்ட -சாதிப்
பெருமையில் சுகம் காணுற நீ!
பல சாதி வியர்வையில உருவான
சோற்றைத் தான் திண்ணலாமா?
பல பேரு உழைப்பில உருவான
துணியத்தான் உடுத்தலாமா?
வெறுப்பை விதைக்கிற
மதவாதிப் பேச்சுல
கண்மூடிக் கெடக்குற நீ!
சாதித் திரைய கொஞ்சம்
விலக்கிட்டு பாரு!
உழைச்சா தானே உனக்கும் சோறு
கொஞ்சம் மனுசனா வாழப் பாரு!

