கவிதை: மீயொலியும் மைல்கற்களும்

கவிதை: மீயொலியும் மைல்கற்களும்

மீயொலியும் மைல்கற்களும்

 

இரு கோடுகள் சொன்ன இனிய செய்தியில்,

மிளகொத்த உருவின் துடிப்பில்,

பின்னங்கழுத்தில் ஊடுருவிய ஒலியில்,

முகம் மூடிய கரங்களுக்கிடையில் தெரிந்த மூக்கு எலும்பில்,

 

முறையாய் முழுமையடைந்த உருவமைப்பில்,

நெஞ்சாங்கூட்டின் மய்யம், இடது சாய்ந்த நான்கறை தசைக்குழாயின்

நயன்மிகு செயல்பாட்டில்,

 

எட்டி விட்ட முதல் உதையில்,

நீர் சட்டியில் போட்ட குட்டிக் கரணத்தில்,

எதிர்ப்பில்லா குருதியோட்டத்தில்,

அரை மயக்கத்தில் கேட்ட அழுகுரலில்,

 

நெஞ்சுண்டு நிறைவாய் சுழித்த அதரத்தில்,

நின்ற கழுத்தால் நிமிர்ந்த பார்வையில்

முகம் பார்த்த புன்சிரிப்பில்,

உதடு குவித்து உச்சரித்த மழலையில்

தேரென தவழ்கையில்,

தத்தித் தத்தி நடக்கையில்,

 

வெற்றியுடன் நீ கடக்கும்

ஒவ்வொரு மைல்கல்லிலும்

புதிதாய் பிறக்கின்றாள்

உன் தாயடி..

 

                              – சர்மிளா தேவி

(பி.கு – தமிழில் ஒரு ரேடியாலஜி கவிதை)

 

Show 1 Comment

1 Comment

  1. S V VENUGOPALAN

    அருமையான கவிதை…என்ன சொற்கள்….எத்தனை நயமான விவரிப்பு…எத்தனை கொண்டாட்ட மனசு… நீர் சட்டியில் போட்ட குட்டிக்கரணம் எத்தனை தேர்ந்தெடுத்தாலும் தோன்றாத வருணனை….அற்புதமான கவிதை…. தாயின் உணர்வுகளை சொற்களில் தீட்டியுள்ள ஓவியம்…வாழ்த்துகள் டாக்டர் சர்மிளா தேவி 

    எஸ் வி வேணுகோபாலன் 
    94452 59691

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *