“கடவுளின் விசித்திரம்”
***************************
பேராசை நிறைவேற பிரார்த்தனை,
நன்றாக வாழ்ந்திட நேர்த்திக்கடன்!
ஆனந்தமாய் வாழ அர்ச்சனை,
வேண்டியத அடைய வேண்டுதல்கள்!

கேட்டது கிடைத்தால் காணிக்கை,
ஆவல் கைகூடின் அபிஷேகம்!
தேவைகள் கிட்டின் தீமிதி,
ஆசைகள் நிறைவேற அலகு குத்தல்!

தோற்றால் தூற்றுவோம்
இழந்தால் இகழ்வோம்
அழிந்தால் அழுவோம்
நலிந்தால் நிந்திப்போம்!

ஆனால் ஆண்டவனோ?
எதை கொடுக்க வேண்டும்
எதை தடுக்க வேண்டும்
என்று என்றோ எழுதிவிட்டான்!

ஈதறியா பாழும் மனிதமனம்!
ஏனோ நொந்து நூடூல்சாகி
செத்து சுண்ணாம்பாகி
பட்டு கெட்டு பாழாகுதே!

இத்துன்பம் நீங்கிடவே
இறைவா நீ எனக்கு
மறுபிறவி என்றில்லா
மகத்தான வரம் தருக!

மனமுருகும் மார்கழி!
**************************
மறைந்தது மழை
நிறைந்தது பனி
உறைந்தது கரம்
விரைந்தது காலை!

மார்கழி கன்னியவள்
மாதம் முழுவதும்
மாந்தர்க்கு மனமுவந்து
மகிழ்ச்சி பலதந்தாள்!

பொங்கல் தந்தாள்
பொலிவு தந்தாள்
சுண்டல் தந்தாள்
சுரங்கள் தந்தாள்!

பக்தி தந்தாய்
பஜனை தந்தாய்
இசை தந்தாய்
இனிமை தந்தாய்!

ஒரு “பாவை” அருளிய
திருப்பாவை தந்தாள்!
திருவாசகன் அருளிய
திருவெம்பாவை தந்தாள்!

கோலங்கள் தந்திட்ட,
கோலவிழி மார்கழியே!
நின் குளிர் முயங்கினேன்!
என் மனம் மயங்கினேன்!

சுதந்திர சிறகுகள்.
***********************
கூடு பறவையும்,
கூண்டு பறவையும்!
கூடி பேசினால்
என்ன பேசும்??

கூடு பறவை கூறியது,
“நீ அடிமை! நான் ஆண்டான்!
நீ நாடி புசிப்பாய்,
நான் தேடி புசிப்பேன்!

நான் சிறகை விரிப்பேன்,
நீ சிறகை சுருக்குவாய்!
என் துணை என் விருப்பம்,
உன் துணை எவன் விருப்பம்?

எனக்கு எல்லையே இல்லை
உனக்கு எதுவுமே இல்லை!
என் வாழ்வு சுதந்திரம்,
உன் வாழ்வு இயந்திரம்!”
என கேலிபேசி சிரிக்க!

இரைக்கு ஆசைப்பட்டு
சிறைக்குள் ஏகினேன்!
சின்ன புத்தி மனிதன்
பசியை பயன்படுத்தி
பாழாக்கினான் என்னை!
சிறகிருந்தும் பறக்கவியலாது
குறைபட்டது என் உயிர்!”
என ஏக்கத்துடன் வருந்தியது
ஏமாந்த பறவை!

மரு உடலியங்கியல் பாலா.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *