கவிதை: அன்பு மாணவர்களுக்கு ஆசிரியரின் மடல் – ஆசிரியர் அகவி

பள்ளிக்கூடத்தின்  பட்டாம்பூச்சிகளே
ஆசிரியர் அகவி எழுதுகிறேன்
அன்பு வணக்கம் .
ஒரு சனி ஞாயிறு
விடுமுறைக்காய்
பிரிந்தோம்
எல்லா நாளும்
சனி ஞாயிறாய்
நீண்டு கொண்டிருக்கிறது
இனிய குழந்தைகளே
எப்படி இருக்கிறீர்கள்
சீக்கிரம் பள்ளிக்கூடம்
திறந்து விடும்
சீருடையைக் கிழித்து விடாதீர்கள்
உலக அளவில்
உலுக்கி வரும் கொரோனா
பத்திரமாய் இருங்கள்
பாதுகாத்துக் கொள்ளுங்கள்
சம்பாதிக்க வழியற்ற
தாய் தந்தையின்
வெறுங்கை பார்த்து
வெறுப்புற வேண்டாம்
சேமித்திருந்தால்
சிறைபடல் ஏதென
பெற்றோரிடத்தில்
பேசலாம் அல்லவா?
பற்றாக்குறை வாழ்வு
பெற்றோரோடு போகட்டும்
உங்கள் அறிவை
ஊதிப் பெருக்குங்கள்
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் ...
வறுமை ஒழிந்தால்
வாழ்வெல்லாம்
வசந்தம்
கோபுர மாய் ஆக
படிப்புப் படிக்கெட்டில்
பத்திரமாய் ஏறுங்கள்
நல்ல என்ணம் கொள்ளுங்கள்
நல்ல சொல் சொல்லுங்கள்
நல்ல செயல் செய்யுங்கள்
உம் மனக்குரங்கை
வசப்படுத்தி வாழுங்கள்.
பிஞ்சு மனுசிகளே
பிஞ்சு மனிதர்களே
உயரங்கள் எல்லாம்
உங்கள் காலடியில்
ஒரு நாள் வரும்.
ஆனாலும் குழந்தைகளே
வருங்கால உலகத்தில்
எல்லா நோய்களுக்கும்
நீங்கள்தான்
நிவாரணிகள்
பள்ளிக் கூடம் திறக்கையில்
பழகி மகிழலாம்.
சீருடையணிந்த
சின்ன வடிவ
சிறந்த மனிதர்களே
சீக்கிரம்
சந்திப்போம்
               இப்படிக்கு
               உன் அன்பு
              ஆசிரியர் அகவி