கவிதை: என்னால் மூச்சுவிட முடியவில்லை – ஈரோடு தமிழன்பன்

 

சுதந்திரம் சமத்துவம்
சகோதரத்துவம்
விடுதலைத்தேவி சிலைக்குள்
கட்டிப் பிடித்துக்கொண்டு
கதறின

“என்னால்
மூச்சுவிட முடியவில்லை”
அமெரிக்காவில்
வானம் துடித்தது

“என்னால்
மூச்சு விடமுடியவில்லை”,,
அமெரிக்காவில்
பூமி துடித்தது

காற்றின் கழுத்தின் மேல்
யாரங்கே
கால் வைத்து அழுத்தியது

‘என்னால்
மூச்சு விடமுடியவில்லை’
காற்றின்
மூச்சுக்குழாய் உடைந்து
வார்த்தை சிதைந்தது

கறுப்பினத்தவர் கொலை ; அமெரிக்காவில் ...

கருப்பின மக்களை
அடிமைத்தனத்திலிருந்து
விடுவித்த
ஆப்ரகாம் லிங்கன்
சிலைக்குள்ளிருந்து
மினியாப்போலிசைநோக்கி
ஓடினார்
அவர் செவிகளில்
விழுந்தது
“என்னால்
மூச்சு விடமுடியவில்லை”

எனக்கொரு
கனவு இருக்கிறது
என்று பேசிய
மார்ட்டின்லூதர்கிங்
உடைந்த கனவாய்
வெள்ளைக்காவலன்
ஆணவ முட்டியின்கீழ்
“என்னால்
மூச்சு விடமுடியவில்லை”
என்று
தேயும் கெஞ்சலோடு
சாய்ந்து விட்டவன்
கன்னம் தடவி
கண்கள் தடவி
முகத்தைத் தடவி
மார்புதடவி
மயங்கிச்சாய்ந்தார்.

அற்பக் காரணம்
ஆனால்
கருப்பினத்தவனைக்கொல்லக்
காரணமே
வேண்டாமே கொடிவர்க்கு
எறும்பை ஈயைக் கொல்ல
எவருடைய உத்தரவுதேவை?

அமெரிக்காவில் சிவில் யுத்த அச்சம் ...

கடையில்
அவர் வெண்சுருட்டு வாங்கினார்
காசு கொடுத்துத்தான்
காசைச் சந்தேகித்தவன்
காவல்துறைக்குச்சொன்னான்

கல்லறைத் தூதர்கள்
காரியம் நடத்தினர்.

அமெரிக்காவில் பகல் மூச்சுவிட
முடியவில்லை
இரவு மூச்சு விடமுடிய விலை
பிறக்கும் முன்பே
பிணமாகின்றன நாள்கள்.