கவிதை: இயேசு யுவதியோடு ஒயின் அருந்துகிறார் — வழிப்போக்கன் 

கவிதை: இயேசு யுவதியோடு ஒயின் அருந்துகிறார் — வழிப்போக்கன் இயேசு_யுவதியோடு_ஒயின்_அருந்துகிறார்
*****************************
இயேசு இம்முறை
ஒரு யுவதியுடன் ஒயின் அருந்த
விருப்பத்துடன் முடிவு செய்கிறார்
சீட்டுக்குலுக்கிப் போட்டு கவனமாய்
ஒருத்தியை தேர்ந்தெடுக்கிறார்
அவள் ஏற்கனவே ஒரு முறை
குடித்துவிட்டு தேவாலயத்திற்கு
சற்று தொலைவில்
சண்டையிட்டவளாக இருந்தாள்
இருப்பினும் இயேசு
தனது முடிவிலிருந்து மாறாமல்
அவளுடன் ஒயின் குடிக்க
குறுஞ்செய்தியின் வழியே அழைக்கிறார்.
நேற்றைய போதையின் பிடியில் சிக்கி
தலைவலியில் இருந்தவளுக்கு
கடவுளின் குறுஞ்செய்தி
சந்தோஷத்தையும் ஆறுதலையும்
ஒரு சேரத் தந்தது.
அவள் உடனே நன்றி மறவாமல்
நெஞ்சில் கை வைத்து
தோத்திரம் ஆண்டவரே என்கிறாள்.
நகரத்துக்கு வெளியில் இருக்கும்
ஒரு மது கூடத்தை அவர் தேர்ந்தெடுக்கிறார்
இருள் சூழ்ந்த எலைட் பாரில்
ஒயினையும் அப்பத்தையும்
ஆசிர்வதித்து அவளுக்கு வழங்கிவிட்டு
தானும் ஒரு கோப்பையில் ஊற்றி
ஒயினைப் பருக ஆரம்பிக்கிறார்.
அதிவேகமாய் ஒயினை
எடுத்து குடித்துவிட்டு
மெல்லிய ஒளியில் கருணை ததும்பும்
இயேசுவின் முகத்தை
கண் சிமிட்டாமல்
உற்றுப் பார்க்கிறாள் அந்த யுவதி.
பின் மெல்லிய குரலில்
தனது ஐயத்தை கேட்கிறாள்
எப்படி பீப்பாய் தண்ணீரை நீங்கள்
ஒயினாக மாற்றினீர்கள் என்று.
எதிர்ப்பார்த்த கேள்வி தான்
என்பதால் சட்டென பதில் சொல்கிறார் இயேசு.
அன்பானவர்கள் கொடுக்கும்
தண்ணீர் கூட ஒயினாகத் தான் தெரியும்
நம்பிக்கை தான் மனிதனின்
நாடித் துடிப்பு என்கிறார்.
வேறென்ன வேண்டுமென்று
அன்பொழுக அவளிடம் கேட்கிறார்
அவள் சட்டென்று இரண்டு பெக்
வோட்கா என்கிறாள்.
அந்த கோரிக்கையை
துளியும் எதிர்ப்பார்க்காத இயேசு
குடிப்பதை குறித்து தான் எதுவும்
நிபந்தனை விதிக்கவில்லை
என்பதை நினைவுகூர்ந்து
சற்றே தயக்கத்துடன்
அப்படியே ஆகட்டும் என்கிறார்
அவள் கோப்பையில் நிறைகிறது
ஆதாமின் ஆப்பிளில் செய்த
நொதித்த வோட்கா.
பொறுமையின்றி அவசரமாய்
அதனை எடுத்துப் பருகி
அவரைக் கோபமாய்
நிமிர்ந்துப் பார்க்கிறாள்
கோபத்திலும் போதையிலும்
சிவந்த அவளின் கண்களை
எதிர்கொள்ள முடியாமல்
திணறிய இயேசு
என்னவென்று கேட்கிறார்.
“நீ சாராவை ஊரை விட்டு
அனுப்பியிருக்கக் கூடாதென்று
கோபமாய் குரலுயர்த்திச் சொல்கிறாள்”.
மேலும் அந்த யுவதி…
நீ சாராவை சொஸ்தமாக்கி
அவ்வூரில் இருந்த அயோக்கியர்களை
வெளியேற்றியிருக்க வேண்டுமென்கிறாள்.
உரையாடலை சற்றும் எதிர்பார்க்காத
இயேசு
அவள் குரலில் ஞாயமிருப்பதையெண்ணி
மௌனமாய்த் தலை கவிழ்கிறார்.
ஏன் சிறுமி கற்பழிப்பு?
ஏன் பாலின பாகுபாடு?
ஏன் மத சண்டை?
ஏன் சாதி சண்டை? என
அடுத்தடுத்து அவளின் கேள்விகள்
அவர் மீது அதிவிரைவாய்ப் பாய்கிறது
சிலுவையின் ஆறிய காயங்கள்
மீண்டும் ரணமாகிறது.
பதில்களற்று
பதற்றமடைந்த இயேசு
சிறிது நேரத்திற்கு பிறகு தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டு
அப்போது அங்கிருந்தவர்களுக்கு
சொன்னது என்னவென்றால்
நீங்கள் பெருந்தொற்று நோயாகிய
குஷ்டரோகம் வந்தவனோடு கூட குடியுங்கள்
ஆனால் ஒரு யுவதியோடு மட்டும் குடிக்காதீர்கள்
கண்ணுக்கு புலப்படாத சிலுவைகளை
அவள் வாயில் கேள்விகளாய்
வரிசையாய் வைத்திருக்கிறாள்
என்று சொல்லிவிட்டு
மீண்டுமொருமுறை தன்னை தானே
சிலுவையில் அறைந்துகொள்கிறார்.
அநேகமாய் அவர்
மதுவிலக்கு குறித்தான
புதிய ஏற்பாடோடு
மீண்டும் உயிர்த்தெழலாம்.
–வழிப்போக்கன் 


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *