கவிதை: வேளாண்சட்டம் திரும்ப பெறு – ப.மகாலெட்சுமிவேளாண்சட்டம் திரும்ப பெறு.
எவர் கருத்தும் வேண்டாமென்ற எதேச்சதிகாரப் போக்கில்
யாருக்கோ சிலை எடுத்தீர்கள்
எவருக்கோ கோவில் கட்டுகிறீர்கள்..
விவசாயம் அப்படியல்ல..
உழவுக்கொரு சட்டமோ
விளைச்சலுக்கொரு விதியோ
கொள்முதலுக்கொரு கோட்பாடோ
உணவுப்பொருள் பாதுகாப்பிற்கொரு உத்தரவோ
பிறப்பிக்குமுன்னர்
விவசாயம் சார்ந்த
உழுகுடிகளிடம்
பேசியிருக்க வேண்டாமா?
மண்ணில் உழைப்பதால் அவர்களென்ன
மண்ணுக்குச் சமமா?
குட்டக் குட்டக் குனிந்தவர்கள்தான்
இன்று
வெட்ட வெட்டத் தழைக்கிறார்கள்..
உங்கள் கருங்கல் சுவர்கள் அவர்கள் கால்களைத் தடுக்க முடியாது…
ஏனெனில், அவர்களைச் சுமப்பது  கால்களல்ல…
தேசத்தின் வயிறுகள்!!!
ப.மகாலெட்சுமி.
மணப்பாறை.