கவிதை: முழங்கால்களை எடுங்கள் – ஏ.எல். ஷார்ப்டன் (தமிழாக்கம் – ரமணன்)

அந்த இடத்தில் நின்றபோது
என்னுள்ளே கோபம்
ஏறியது ஏன்?
ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது
எல்லா கருப்பர்களுக்கும்
நடப்பதே.
.
நானூறு  ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
நாங்கள் என்னவாக வேண்டுமென்று
நினைத்தோமோ
அது முடியவில்லை.
ஏனென்றால்
எங்கள் கழுத்தில்
உங்கள் முழங்கால்கள்
அழுத்திக் கொண்டிருந்தன.
தெருக்களில் சுற்றி திரியும்
கூட்டமாய் இல்லாமல்
பெரு நிறுவனங்களையும்
எங்களால் நடத்த முடியும்.
ஆனால்
எங்கள் கழுத்தில்
உங்கள் முழங்கால்கள்
அழுத்திக் கொண்டிருந்தன.
எங்களிடம் படைப்பாக்கம்
இருக்கிறது.
மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ
அதை எங்களாலும்
செய்ய முடியும்.
ஆனால்
உங்கள் முழங்கால்களை
எங்கள் கழுத்திலிருந்து
விலக்க முடியவில்லை.
Get your knee off our necks!': Floyd mourned in Minneapolis ...
ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது
அமெரிக்கா எங்கும்
நடக்கிறது.
கல்வியில்,சுகாதாரத்தில்
எல்லாவற்றிலும்
நடக்கிறது.
ஜார்ஜ் பிளாய்டின்
நினைவாக
நாம் எழுந்து நின்று
சொல்ல வேண்டிய
நேரமிது.
‘ எங்கள் கழுத்திலிருந்து
கால்களை விலக்குங்கள்’.
நாம்கூட நினைத்தோம்
நம்மிடம்தான்
ஏதோ குறை இருக்கிறது என்று.
ஆனால்
இதுதான் பிரச்சினை.
நாம் யாராக இருந்தாலும்
நம்மினத்திலிருந்து
தடைகளை உடைத்துக் கொண்டு
யார் மேலே வந்தாலும்
நம் கழுத்தின் மீது
அவர்கள் கால்களை
அழுத்தினார்கள்.
ஜோர்டன் எல்லா பந்தயங்களையும் வென்றார்.
அவர் விசயத்திலும்
 விவகாரம் செய்தீர்கள்.
ஏனென்றால்
உங்களால் எங்கள்
கழுத்திலிருந்து
கால்களை
எடுக்க முடியவில்லை.
வின்பிரேயின் தொலைக் காட்சி
நிகழ்ச்சியை பார்க்க
வெள்ளைப் பெண்மணிகள்
வீட்டிற்கு விரைந்தார்கள்.
அவர் விசயத்திலும்
அவதூறை இறைத்தீர்கள்.
ஏனென்றால்
எங்கள் கழுத்திலிருந்து
கால்களை எடுக்க
நீங்கள் விரும்பவில்லை.
George Floyd memorial in North Carolina as sheriff's officers ...
தாயினால் தனியாய்
வளர்க்கப்பட்ட
ஒரு மனிதன்
தானே கல்வி கற்று
நாட்டின்
அதிபராய் வந்தாலும்
அவன் பிறப்பு
சான்றிதழ் கேட்பீர்.
ஏனென்றால்
எங்கள் கழுத்திலிருந்து
கால்களை எடுக்க
நீங்கள் விரும்பவில்லை.
உலகம் முழுவதும்
அணி வகுத்து வருகிறோம்.
ஏனென்றால்
நாங்களும்
ஜார்ஜைப் போன்றவர்களே.
எங்களாலும்
மூச்சு விட முடியவில்லை.
எங்கள் நுரையீரலில்
கோளாறு எதுவுமில்லை.
உங்கள் முழங்கால்கள்
எங்கள் கழுத்திலிருப்பதே
காரணம்.
.
உங்களிடம்
சலுகை எதுவும்
யாசிக்கவில்லை.
உங்கள் முழங்கால்களை
கொஞ்சம் விலக்குங்கள்.
நாங்கள் மூச்சு விட்டுக்
கொள்கிறோம்.
என்ன செய்ய விரும்புகிறோமோ
என்னவாக விரும்புகிறோமோ
அதைச் செய்து கொள்கிறோம்.
தோழர் ரமேஷ் அனுப்பிய புனித ஏ.எல். ஷார்ப்டன் – காணொலியின் தமிழாக்கம் – ரமணன்