நூல் அறிமுகம்: POEMS APLENTY (A CHOICE OF VERSE) – இரா. இரமணன்

POEMS APLENTY (A CHOICE OF VERSE) BookReview by Era Ramanan. நூல் அறிமுகம்: POEMS APLENTY (A CHOICE OF VERSE) - இரா. இரமணன்
63கவிஞர்களின் ஆங்கிலக் கவிதை தொகுப்பு. இவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள். மருத்துவர்களும் பொறியாளர்களும் அலுவலகப் பணியாளர்களின் கவிதைகளும் உள்ளன. 23 பெண்களின் பெயர்களைப் பார்க்க முடிகிறது. பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி விருது பெற்றவர்களும் உள்ளனர். கொரோனா பெரும்தொற்று காலத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபட கவிதை நல்ல மருந்து என்ற நோக்கத்துடன் இத்தொகுப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக முன்னுரையில் கூறியுள்ளார்கள். பல்வேறு பொருட்களில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை, அன்பு, அறம், காதல்,பெண்ணியப் பார்வை ,சமுதாயம், கடவுள் ஆகிய தலைப்புகளோடு கொரோனா குறித்த கவிதைகள் கணிசமான எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன. இருண்ட காலத்தில் அதைப் பற்றிய கவிதைகள் இருப்பது இயல்புதானே?

கொரோனாவை எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் கவிஞர்கள் பார்க்கிறார்கள். ‘முகமூடி தரித்த மனிதர்கள் இப்பொழுது முக கவசம் அணிகிறார்கள்’ என்று கவித்துவமாகத் தொடங்கும் ஒரு கவிதை ‘நிதிப் பற்றாக்குறை?மருந்துக் கம்பனிகளின் ஏகபோகம்? வணிகப் போர்?ஆதிக்க வெறி இவைகளைவிடவா கிருமி ஆபத்தானது?’ என்று முடிகிறது.(Mute Battle-R.Shanthi)

கொரோனா காலத்தில் புத்தன் N 95முககவசம் அணிந்து வலம் வருவதாகவும் எங்கும் துன்பம் நிறைந்த காட்சிகளைக் கண்டு மீண்டும் சித்தார்த்தனாக மாறக் காத்திருப்பதாக ஒரு கவிதை சொல்கிறது.(The Buddha Of Pandemic- M.Elangovan)

மனிதனின் உள்ளார்ந்த வீரியத்தை தனது கவிதையில் ‘நாங்கள் வீரர்கள்.ஓஹோ! துணிவு கொண்டவர்களாகி வருறோம். ஒருநாள் இதிலிருந்து மீள்வோம்’என்று முடிக்கிறார் எல்.பி.தமிழ் அமுது.(Struggle For Existence) அவரே இன்னொரு கவிதையில் கொரோனாவால் எதையெல்லாம் இழந்தோம் என்பதை அழகாக சொல்கிறார்.
‘ விஞ்ஞானிகளுக்கு தடம் இல்லை.
மருத்துவர்களுக்கு ஓய்வில்லை.
மாணவர்களுக்கு இலக்கில்லை.
………………………………………………
இளைஞர்களுக்கு வேலை இல்லை.
…ஊரடங்கிற்கு முடிவில்லை.
….கிருமிக்கு கருணை இல்லை.’
என்று முடிக்கிறார்.

முன்களப் பணியாளர்களை ‘நாட்டின் கட்டமைப்பாளர்கள்’ எனப் பாராட்டுகிறார் ஆர்.கவுதம்ராஜ்.(Two Gentlemen)

கொரோனா காலத்தில் தம் அன்புக்குரியவர்களைப் பார்க்க நீண்ட தூரம் நடையாகவும் சைக்கிளிலும் லாரியிலும் பயணம் செய்தவர்களைப் பற்றிய கவிதையில் புலம் பெயர் தொழிலாளிகளை ஏனோ மறந்துவிட்டார் எம்.லக்ஷ்மணன் (Exorcism of Corona)

சில வித்தியாசமான கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்.
‘நிகழ்வுகளுக்கு வெளிச்சம் போடுகிறார்கள்
சிலவற்றை மறைத்து.
……பல குரல்களை ஒலிக்கிறார்கள்
ஆனாலும் அவை மங்கி மறைகின்றன
….அறிவிப்பாளானாகவும் அறிவிக்கப்படுவதாகவும்
தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்படுவதாகவும்’
என்று புதிர் போடுவது போல கே.அபிராமியின் ஒரு கவிதை இருக்கிறது.(Who am I)

இதே வகைமையில்
‘அது சில நேரங்களில் களிப்பூட்டியது
சில நேரங்களில் அது ஏமாற்றம் அளித்தது.
……..அது ஆறுதல் படுத்தியது
அது அமைதிப்படுத்தியது’
என்று வரிசையாக சொல்லி இறுதியில் ‘அது’ என்பது அவன் ,’அது’ என்பது அவள் என்று முடிக்கிறார் வி.ஷகிலா(‘it’ – The Love)

எஸ்.ஜி.விஸ்வநாத்தின் ‘மிஸலேனியஸ் ஸ்பார்க்ஸ்’ ஹைக்கூ கவிதைகளும் ரசிக்கலாம்.
‘பழமொழிகளில் தோல்வியே காணாதது;
தீர்ப்புகளில் தோற்றுவிடுகிறது.
-வாய்மை.

பெண்களின் உணர்வுகள் குறித்த கவிதைகளில்
‘அவள் ஷேக்ஸ்பியரின் தொடக்கக் காட்சியாகவும்
ஓஹென்றியின் எதிர்பாரா திருப்பமாகவும்
…….அவள் புதிரான பெண்ணினம்’ என்று முடியும் ஏ.திவ்ய பாரதி சிவாவின் ‘AParadoxical Female of a Species’ கவிதையும்
‘’அவள் எல்லோரிடமிருந்தும் வேறுபட்டவள்
கருப்பாயிருந்தபோதும் வென்றாள்;
வெள்ளையானபோதும் வெல்வாள்.
என்கிற கவிதையும் .
புத்தகத்தின் முதல் கவிதையாக வைக்கப்பட்டுள்ள அனிதா நாயரின் ‘In Which A Small Gesture Becomes Epic’ முடிப்பு வரிகள்
‘நான் என் கூந்தலை விரிக்கிறேன்
என் அடையாளங்களை அழிக்கிறேன்
நான் முதன்மையாக ஒரு பெண்ணென்று
நீங்கள் உணர்வதற்காக .
நான் முழுக்க முழுக்க ஒரு பெண்;
மற்றவைஎல்லாம் அதன் பின்தான்.’

பாரதியின் பாஞ்சாலியை கண் முன்னே நிறுத்துகிறது.
கடினமான ஆங்கிலச் சொற்கள் கொண்ட பேராசிரியர்களின் கவிதைகளும் அறிவியல் சாதனையை கவிதைக்குள் கொண்டு வந்த ஒய்எஸ்.ராஜன் அவர்களின் கவிதை ,தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பற்றிய ஜி.வெங்கட்ராமன் அவர்களின் கவிதை என இது ஒரு பல்சுவை திரட்டு.

நூல்: POEMS APLENTY (A CHOICE OF VERSE)
வெளியீடு: தஞ்சை லிட்ரரி சொசைட்டியும் இந்தியன் யூனிவர்சிட்டி பிரெஸ்சும் (பாரதி புத்தாகாலயம்)
பக்கம் 190- விலை ரூ 200

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.