கவிஞர் அரங்க மல்லிகாவின் கவிதை |Poet Aranga Mallika's poem

பண்பதிகாரம் !
**********************

ஒரு கன்னத்தில் அரை வாங்கியதும் மறு கன்னத்தை
விரும்பியே காட்டுகிறது
ஜென் மனது

ஒரு புறாவின்
உயிர் காக்க
தொடை தசை அறிந்து கொடுக்கிறது
வலியில் வலிமை கொள்கிற அறம்.

கன்றின் மரணத்தில் கலங்கிய பசுவின் குரலுக்குக்
காரணமான மகனைத்
தேருக்குப்
பலி கொடுக்கிறது
பாசத்தில் ஒரு போதும்
வழுக்கி விடாத நீதி.

கார்காலம் குளிரில் ஒடுங்கி நிற்கும் மயிலுக்கு
ஓர் இதயம்
தன் போர்வையளித்து
வெதுவெதுப்பாக்குகிறது.

பனி விழும்
அடர்வனத்தில்
விடியல் உலா செல்கையில்
துவண்டிருந்த முல்லைக்குத்
தான் வந்த தேர் தந்து
வீடு வரை
நடைப்பயணம்
கொள்கிறது
எல்லா உயிர்களையும்
ஒன்றாகப் பார்க்கும்
உயர்திணை அஃறிணை
பேதமறியா மனது.

எதிர்பார்ப்புகள் இல்லாத
எப்பொழுதும் வாஞ்சையோடு வளைத்துக் கொண்டு
ஆறத் தழுவுகிறது காற்றின் இசை.

அடிக்கரும்பில் இருந்து நுனிக்கரும்பு வரை
குறையாத தித்திப்பு கொள்கிற
மாறா சுவையாகிறது

அவரவருக்கான ஈர்ப்பில்
மனம் குளிர்கையில்
ஆயுள் நீட்டிக்கும்
அபூர்வ நெல்லிக்கனி
ஈந்து
தன்னை மறந்து
தன்னை
இன்னொரு இதயத்தில் தரிசிக்கிற
அதிசயம் நிகழ்த்துகிறது.

குழந்தைக்குப் பாலூட்ட
சோறு ஊட்ட
அநாயசமாக நிலவைத்
தரைக்கு அழைத்து வந்து
விளையாட வைக்கிறது.

எங்கோ இருந்து கொண்டு
மனசைப் படம் பிடிப்பதைப் போல
பளிச்சென
சொல்லவும்
கன்னம் மீதூரி
படிந்து கிடக்கும் கூந்தல் ஒதுக்கி
மென்மையாய் முத்தமிடுகிறது

ஒத்திசைவாகிறதில்
பரவசப் பிரளயம் கொள்கிற
டெலிபதி மனது.

துயர்மிகு தருணங்களில்
வெளிப்படும்
ஊமை அழுகையை
சொல்லாமலே உணர்ந்து
மனக்கரம் நீட்டி
துடைத்து
இதயத்தில்
ஒத்தடமிடுகிறது.

சாலையில் அடிபட்டுக் கிடந்தாரை
மருத்துவ மனை
சேர்த்து
உயிர் காத்து
தான் யார் என்கிற அடையாளத்தை
அடையாளப்படுத்திக் கொள்ளாமலே
கடந்து செல்கிறது ஒரு நிறை மனது.

மைத்ரி பழக்கிடும்
புத்தரின் தியானத்தில்
பிரவகிக்கிறது
பெருங்கருணை.

நீர் வழிப்படூஉம் புணை போல
பண்புடையார்
பின்னே
உயிரிழை உயிர்த்திடுகிறது
பிரபஞ்சம்

கொடுப்பதை எல்லாம்
பெறுதலாய்
உணர்கிறது.

உண்டி கொடுத்து
உலகின் சகலவிதமான ஜீவராசிகளின்
உயிர் காக்கிற
அட்சயப் பாத்திரம்
எப்போதும்
பசித்தே இருக்கிறது.

இன்னும் கூட
ஏராளம் இருக்கின்றன மிச்சம்
இதய இதழ்
உதிர்க்க உதிர்க்கப்
பெருகும்
ஆச்சரியம்..
தொடுவானம் தொடச்
செல்ல செல்ல
நீண்டு கொண்டே போகிறதாய்
நீண்டு விரிந்து செல்கிற அதனின் விசுவரூப தரிசனம் காண்கையில்
அங்கே தரிசனம் தருகிறது
ஓர்மையின் தாளலயத்தில்
ஆனந்த நர்த்தனம் இடைவிடாது கொண்டிருக்கிற
பிரபஞ்ச நேசம்
பண்பதிகாரம்
உயிர்த்தலும் உயிர்ப்பித்தலும்

விரியும் குடையாய் நீள்கிறது!!

 

எழுதியவர் 

கவிஞர் அரங்கமல்லிகா

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “கவிஞர் அரங்க மல்லிகாவின் கவிதை”
  1. தெரிந்த சரடு போல் உள்ளே செல்கிறது கவிதையின் சொற்கள்

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *