1.
நாணற்புற்களுக்கிடையில்
தலைதூக்கிப் புணரும்
சாரைகளுக்கிடையில்
கருநீலச் சாக்கடையில்
முண்டியெழும்பி அலையும்
மின்மினி பொன் நிலவை
ஒத்த வீட்டின்
கதவு திறந்த
சாளரத்தின் அருகில்
இரு உள்ளங்கைகளில்
ஏந்தும் சிறுகுழந்தையென
இதயம் கனக்கும் போதெல்லாம்
தாலியறுத்த நாள்களில்
வானுக்கு தூதனுப்பி
இரவில் மட்டுமே
நிலவை ஏந்தும்
அக்காவுக்கு
பகற்பொழுதில்
கட்டற்ற வெளியில்
அலையும் வெயிலும்கூட
இளைப்பாற்றுகிறது
யாரும் பார்த்திடாத போதும்…
2.
அடிபுதையுண்ட
சகதி மேலெழும்பி
நீர் மிதக்கும்
சிறு குளத்தில்
சீப்பு சீப்புக்களாய்
அடிக்கொரு எட்டில்
மிதப்பு மீன்கள்
நீரறுந்தும் செவ்வானத்தில்
சிறுகச் சிறுகப் பூக்கும்
வான் பூவாய்
வலசை சருகாய்
வில் அம்பாய்
எழுகிறது வீறுகொண்டு…
3.
மேம்பாலத்தில்
யாருமற்று
இரத்தப் பிசுபிசுப்புகளோடு
ஓடவண்டுகள் மொய்க்க
சிதைந்து கிடக்கிறது
பொன் மேனி
இனம்பிரித்து
பதம்பார்க்கும்
கொடுவாக்களுக்கு
மானுடனென்று தெரியுமா
மரமென்று தெரியுமா
குளம் வற்றி
குலம் பெருகிவிட்டது
குடி ஆதிக்க
பிரபஞ்சத்தில்…
4.
சொடுக்கிப் பொழியும்
அடர்பனி இரவில்
வெளிச்சம் பாய்ச்சி
நிலைக்குத்தி
தொங்கி நிற்கும்
மஞ்சள் பலூன்
கிளப்பி விட்டு
தூதனுப்புகிறது
சாமத்து கோழியின்
விடலைப் பருவ
முகவாசலில்…
கொடி அடுப்பில்
நீள் சடைவிரித்துக் காயும்
சுண்ணாம்புக் கோலங்களை
சுவைக்கும் மென்குமிழ்கள்
சூட்டுப் பழமென சுவைக்கிறது
கதவு திறந்த அடுப்பின்
முகவாசலில்…
5.
புழுதி வாடைக்குள்
புடைத்தெழுந்து
பூக்கும் விதைச்சொற்களாய்
அடிநாதம் வற்றிய
மெல்லிய குரல்களின்
கீற்று சஞ்சாரம்
சீவாலி மூங்கியில்
தெறித்தோடுகிறது
குலவை போன்றும்,
ஊர் திரும்பும்
கோடைமழையில்
சடசடவென
பிஞ்சு உதிர்க்கும்
மாங்கிளை போன்றும்.
6.
சாம்பல் வெளிச்சத்தில்
பிறந்து விடியும் புதனில்
குழைமுத்திய நெடுமரத்தில்
குத்தி வெடிக்கும்
கீழ்நெற்றுகளை
வரும்போதெல்லாம்
அலப்பிவிட்டுச்செல்லும்
குழந்தைக்காற்று
அம்மாவின் நினைவு
கிளம்பி முத்துகையில்
வரமறுக்கிறது
இருப்பினும்
வாய் பிளந்து
சுடர் நிமிரும்
செங்கதிர்
தாழப் பாய்ந்து
ஆசுவாசப் படுத்துகிறது
அடங்கமறுக்கும் சுழல் நினைவினை…
7.
சாம்பிராணிபுகை
முட்டி மோதிச்சூழ
வெண்கலமணி கீச்சொலிக்க
தனித்திருக்கும் கருவறையில்
அறியா மொழிகளின்
மௌனச் சொற்கள்
பூ விரல்களில்
நகக்கனுவிலே
சீறிப்பாய்ச்சும்
முட்களாய் ஏறுகிறது
நகரத்து கோவில் வாசலில்…
8.
நீர் வற்றிப்போன
கிணற்றடியில்
தலைதூக்கிப் புணர்ந்து
சுழியெழுப்பும்
இரட்டைப் பாம்பெனவும்
தனித்திருக்கும் பூங்காவில்
ஈர முத்தத்தின்
உதட்டலையின்
பூச் சுழியினை
சுழற்றி விட்டு
சூடு தணிக்கும்
ரெட்டை சோடிகள்
நொடிகளில் சூடேறி
நெடிய இரவில் தணியும்
கனல் முற்றி
குமிழ் பூக்கும்
கொடி அடுப்பினைப் போன்று…
– அய்யனார் ஈடாடி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.