ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்



1. என் பழைய அலமாரியில்
தூசு தட்டி எடுக்கப்பட்டது
என் பால்ய பருவத்தின்
நினைவுகள்
முதலில் கை சென்ற
ரெக்கார்டு நோட்டுகளில்
படங்களை வரைந்து
தந்த என் அக்காவின்
நினைவுத்தடங்களில்
அவ்வளவு பிரியங்களும்
நிரம்பி வழிந்தது
சில நேரங்களில்
தன் கண்ணாடியை
அரை முக்கில் இறக்கிவிட்டு
முறைப்பார் மாமா
சில நேரங்கள் கண்ணாடி
இல்லாமல் சிரிப்பார்
எப்பொழுதும் காலத்தைச் சுமந்து செல்லும்
கடிகாரத்தின் சுவடுகளையும்
அதில் மறைந்துள்ள
அன்பான உறவின் நினைவுகளும்
அக்காவின் கைப்பட்டதால்
என்னவோ
ஒவ்வொரு விலங்கும்
கார்டூன் போல்
அன்பாகப் பேசும் சமயத்தில்
அதில் உள்ள பூனைமட்டும்
இப்பொழுதும்
என்னைப் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறது
மெல்லிய புன்னகையோடும்
ஒரு நீண்ட மௌனத்துடனும்
இன்று என் பிள்ளைகளுக்கு
பயாலஜி ரெக்கார்டு
வரைந்துகொண்டிருக்கிறேன்.


2. கணித சமன்பாடுகளோடு
காயும் வெயில்
பெய்யும் மழை
வீசும் காற்றுக்கிடையில்
தவிக்கும் செடிகளின்
வேர்களுக்கிடையில்
ஏற்படுத்தும்
பௌதீக களைப்பால்
அழுதுகொண்டிருக்கும்
வேர்களின்
துன்பங்களை அறியாமல்
உதடுகளும் இதயங்களும்
சொல் களிம்பைத் தடவி
காற்றில் பறக்கவிட்டு
நீடித்து எழுத முயல்கிறது
சில பொருந்தாத முடிவுகளை.


3. என்னைச்சுற்றியிருக்கும்
இயற்கையின்
அணைப்புக்காக
இதயத்தைப் பிழிந்து
அன்பைத் திரட்டி
சலனமின்றி
மழையாய்ப் பெய்கிறேன்
எப்பொழுதும்
ஒரு பறவையின் வழிபாடு
என்னைப் பரவசம் அடையச்செய்யும்
மழைக்கு
மேகம் ஆடையாய்
இருப்பதை விலக்கி
என்னை நனைத்துவிடும் வெட்கத்தில்
என் நிர்வாண அனலின்
அரூப கணத்தில்
சிறுதுளி மழையொன்று
பிழிந்த என் இதயத்திற்கு
உயிர் தந்துபோகும்
வெட்கத்தில்
ஒளிந்துகொண்டிருப்பேன்
எப்பொழுதும்
ஆரவாரத்தைத் தந்துவிட்டு
சலனத்தோடும்
சலனமற்று தீண்டிச் செல்கிறது இயற்கை.


4. அந்தரத்தில் பறக்கும்
பறவையொன்று
சட்டென
அமர்வதற்கு
ஒரு மரத்தைப் பொட்டலில்
தேடியலைந்து
சற்று தூரம் பறந்து
தரையிறங்கி
கிளையமர்ந்த காட்சிபோல்
கவிதை படிப்பது
கலந்துவிடுகிறது மனதில்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *