கவிதைகள்- தினேஷ் பாரதி| Poems- Dinesh Bharathi

உலக கவிதைகள் தினம்

1. எவ்வளவு தின்றும்
பசி அடங்கவில்லை
புத்தகம்.

2. எல்லா நதிகளும்
இங்கே புனிதமற்றே
ஓடிக் கொண்டிருக்கின்றன
எந்த நதியில்
நான்
புனித நீராட..

3. ஜிபேவின் அழைப்பு

நெடுநாளைக்குப் பிறகு
உன் கணவனின்
நம்பரிலிருந்து
உன் அழைப்பு வருகிறது.
அவசரமாக 200 வேண்டும்
ஜிபேவில் அனுப்ப முடியுமா
என்கிறாய்.
அடுத்த வார்த்தை
நான் உதிர்ப்பதற்குள்
“இந்த நம்பர் தான் ஜிபே
அனுப்பி விட்டு
என் நம்பருக்கு
மெசேஜ் அனுப்பிருங்க”
என்று தொடர்பை
துண்டிக்கிறாய்.
உனக்கென்ன
தெரிந்துவிட போகிறது
என் நிலைமையை பற்றி…
நானே
பிரபா ஒயின்ஸ் ஷாப்
வாசலில் கட்டிங்க்கு
பார்ட்னர் ரெடி பண்ணி
கொண்டிருக்கிறேன்.

 

4. எல்லாருக்குள்ளும்

எல்லா ஆண்களுக்குள்ளும்
ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது
ஒரு பெண்ணின் குரல்.

எல்லா பெண்களுக்குள்ளும் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது
அப்பாக்களிடம்
சொல்லப்படாத காதலொன்று.

எல்லா அண்ணன்களுக்குள்ளும் உறைந்து கொண்டுதான் இருக்கிறது
ஒரு தங்கையின் கண்ணீர்.

எல்லா தம்பிகளுக்குள்ளும் முதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது
வயது முற்றிய
அக்காக்களின் கவலை.

எல்லா அம்மாக்களிடமும் நிரம்பியே இருக்கிறது
மகன், மகள், கணவன்
முதலான குடும்பத்துக்கான
ஒட்டு மொத்தக் கண்ணீரும்…

 

5. வியர்வைத் துளிகளை விட
கண்ணீர்த் துளிகள்
விலைமதிப்பானவை
அதனால்தான்
அழத் தெரியாமல்
ஒவ்வொரு விவசாயியும்
தற்கொலை
செய்து கொள்கிறான்.

6. நீ அணிவித்த
வெள்ளி மோதிரம்
என் பைக்குள்
திணித்து வைத்த
ஒற்றை கூந்தல்
ஹேர்பின்
கைவளையல்
ரப்பர் பாண்ட்
இவை தவிர
என்னிடம்
அசையும் சொத்துக்கள்
என்று எதுவும்இல்லை….

 

எழுதியவர் 

தினேஷ் பாரதி

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 3 thoughts on “தினேஷ் பாரதியின் கவிதைகள்”
 1. அழகான கவிதை…
  அருமையான வரிகள்,
  தேனியில் பிறந்தாலே கவிதைகள் தானாய் வரும் தேநீ யை போலே..

  1. மிக்க மகிழ்ச்சி…அன்பும் நன்றியும்..

 2. நவீன கவிதையின் வடிவமாக ‘ஜிபே!’, கண்ணீர் மொத்த வடிவமாக ஒரு தாய் பற்றிய கவிதை நெஞ்சை உருக்குகிறது.
  வியர்வை துளிகளை விட கண்ணீர் துளிகளுக்கு மதிப்பு அதிகமா? என கேள்வி எழுப்பும் கவிதை.
  புத்தகம், நதியின் புனிதம் என இரண்டு நறுக்கென்ற ஹை-கூ கவிதை அருமை.
  வாழ்த்துக்கள் (வளர்ந்து) வரும் கவிஞனே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *