ஒரு சொல் கேளீர்
1
உங்கள் கரங்கள் ஏந்தியிருக்கும் மலர்க்கொத்துகளில்
உறைந்தும் உலர்ந்தும் கிடக்கும்
அன்பின் வாசத்தில்
பூத்துக் குலுங்கலாம்
பாலைமனங்கள்.
2
உங்களை நோக்கி வரும்
அம்புகளை மாலைகளாக மாற்றுவது
உங்கள் உழைப்பிலும் தன்னம்பிக்கையிலும் மட்டுமல்ல
உங்களது அணுகுமுறையிலும் உள்ளது
3
மலையுச்சியில் இளைப்பாறும் பறவையின் கனவில்
கை கோர்த்துக் கொள்கிறது
மரமும் கூடும்.
4
நீங்கள் நேசிக்கும்
உலகத்தின் போக்கில்
மாற்றங்களை விதைத்திட
மலர்ந்திடும் பூக்களென
மனதை விரியுங்கள்.
ஏந்திடும் கரங்களென
ஏக்கத்தை நிரப்பாதீர்கள்.
5
புழுவின் மனத்தில்
பறக்கும் ஆசை விரிய விரிய
தடைகள் உடைபடலாம்
வான்வெளியும் தென்படலாம்
வனமும் வரவேற்கலாம்
முட்டுவதே உங்கள் வேலையாயிருக்கட்டும்.
6
நீங்கள் அழத் துவங்கும் போது
விழியைத் துடைக்க நீளும்
கரங்களின் அன்பில்
இன்னொரு சுற்று
வாழ்வை நீட்டிக்கலாம்.
7
துவண்டுவிழும் சமயங்களில்
தாங்கிக்கொள்ள
தோள்கள் இல்லாத வாழ்வில்
இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
எவ்வித சலனமும் நேரப் போவதில்லை.
8
கோடையின் பருவத்தை
தவறாது எழுதிச் செல்லும்
இயற்கையின் இதயத்தில்
மணலுக்குள் கால்கடுக்க
காத்திருக்கும் கொக்குகளின்
பிம்பங்கள் பதிவதில்லை.
9
தூரத்தில் கேட்கும்
ரயிலோசைக்கு நடுவே
தனித்து விடப்பட்ட
குயிலின் குரலில்
கிளையைத் தேடும்
ஏக்கப் பெருமூச்சு
10
காத்திருக்கிறது
இறக்காத சுமைகளைத் தேடி
சுமைதாங்கிகளென
முதியோர் இல்லத்துச் சுவர்கள்
11
மிட்டாயை வழங்கிய
கடைக்காரனின் வாழ்நாளில்
நிம்மதியை அருளிவிட்டுப் போகிறது
நடைபாதைச் சிறுமியின் புன்னகை.
12
பசிப்பிணி போக்கும்
மருத்துவராகலாம்
பசுமை வனத்தை
பாலையாக்கலாம்
ஏந்துவோர் கரங்களில்
ஒளி(ர்)கிறது
ஒரு சொட்டுத் தீ
13
சிலை வடிப்பவனும்
சிலையை வணங்குபவனும்
சிலையை
சிலையாகப் பார்க்கும் வரை
சிலையாகப் போவதில்லை
14
உதிரும் சிறகுகளை எண்ணி
ஒருபோதும் வருந்துவதில்லை
விரிகிற வானத்தை
வீடாக்கும் பறவைகள்
இளையவன் சிவா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அனைத்தும் அபாரம் அண்ணா..வாழ்த்துகள்.