காதல் லேகியம்
*******************
காமதேவன் நடத்தும் பாடத்தில்
வெற்றிக்கோட்டை தொடாதோருக்கு
கோவில் கட்டிக் கொண்டிருக்கிறான்
மன்மத லேகியம் தயாரிக்கிறவன்!

இதய ஜென்ம பந்தம்!
*************************
காதல் செய்வது பாவம் என்றவளும்
காதல் என்பது பொய் என்றவனும்
சந்திக்கும்போது உருவாகும்
உள்ளக் கிளர்ச்சிக்கு
பெயர் தான் இதய ஜென்ம உறவு!

தயிர்!
*******
சற்று அதிகமாகவே
அடித்து துவைத்து விட்டார்கள் போலும்!
மீண்டும் கூட முடியாமல்
அழுது கொண்டிருக்கின்றன
வெண்ணெயும் மோரும்!

ஏன்?
******
அகநானூறு புறநானூறுவை
வல மிட கண்களில் வைத்தவள்
செவ்விதழ் ஓரத்தில்
மாதவியின் சிலப்பதிகாரம் ஏந்தாமல்
நாலடியாரை வைத்த
கஞ்சத்தனம் ஏனோ?

கண்ணாமூச்சி ஆசை
****************************
புத்தனாகும் ஆசையை
தூண்டி விட்ட
சித்தார்த்தன் தான்
புத்தரின் ஆசையையும்
ஒளித்து வைத்தவன்!

உவமை உளறல்
**********************
பௌர்ணமியாய்
உன் முகமிருக்க
உன்னில் நழுவிய
நகத் துண்டுகளுக்கு
பிறை நிலவென
உவமான மெதற்கு!

காதல் அளவுகோல்
***************************
ஆக்சிலேட்டரை கூட்டிக் குறைக்க
முன்னும் பின்னுமாய் அசையும்
ஸ்பீடா மீட்டராய் உனது விழிகள்!
ஆச்சரியத்தில் விரியும்
அதன் மேல் கீழ் இமைகளின்
தூரத்தை அளவிடும் அலகு தான்
என் உதட்டு முத்தம்!

பிரசவ வலி
*****************
கார்மேகக் கூட்டத்தை
முதுகில் சுமக்கும் வானம்
வலி தாங்காது
மழைநீரைக் கீழிறக்க
பனிக்குடம் உடைந்த
தாயின் அலறலாய்
கேட்கிறது இடியோசை!

இருக்கலாமோ?
**********************
அமாவாசை சூரியனில்
முருங்கை மர காகத்தின்
உண்ணாவிரதம்
மகனுக்கு உணர்த்தியது
இறந்த காலத்தில்
மருமகளின் பாராமுகத்தை!

மேடு பள்ளம்
******************
ஆற்றில் மிதந்து வரும்
உதிரிப் பூக்களின்
மார்ச் பாஸ்ட்தான்
அலையின் மலையும்
அலையின் மடுவும்!

மர மனிதன்
******************
என் வீட்டுப்
புளிய மரமும்
போதி மரமானது
நான் புத்தனானதால்!

பிறப்பும் இறப்பும்!
**********************
முதல் அழுகையின் பிறர் சந்தோஷம்
கிடைக்காமலேயே போயிருக்கலாம்
கடைசி மவுனத்தின்
உறவினர் அழுகையைக் காணும் போது!

அப்பாவின் நினைவு நாள்!
*******************************
தன் அப்பாவின்
எச்சில் முத்தத்தை
உடனே துடைக்கும்
குமரேசனின் கைகளை
தொட்டுப் பார்த்ததில்
உணர்கிறேன் என் அப்பாவை!

– ச்ஜேஸூ ஞானராஜ், ஜெர்மனி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *