கதிரிளவன் இரவிக்குமாரின் கவிதைகள்
1
தற்கொலை செய்து கொள்ள
தைரியம் இல்லாத கோழை
சாகப்போவதாய்
அடிக்கடி அசட்டுப் பொழிந்து
நகைப்பை ஊட்டுகிறான்.
நேரமாச்சு கிளம்புகிறேன் என்று
நானும் ஒரு வாரமாய் உன்னிடம்
சொல்லிக் கொண்டு இருக்கிறேன்
உன் வீட்டு ஈசான மூலையில் நின்று
இந்தப் பல்லி இடுகிற எக்காளம்
எனது இயலாமைக்கு நீண்ட தலைகுனிவைத் தருகிறது பேரன்பே…
2
ஏற்கனவே அர்ச்சனை தட்டுக்கு இருபது
முன்னும் பின்னும் பெருங்கூட்டமான வரிசையில்
உடைப்பவனுக்கு தனியாக
கட்டியழ வேண்டுமாம் இருபது
தேங்காயின் விலையே இருபதுதான்
அந்த ஏழைக்கிழவியிடம் அடித்துப் பேசிய பேரத்தில்
பதினைந்தாய் குறைத்ததில்
பெருஞ்சாதனை புரிந்ததாகவும்
பிழைக்கத் தெரிந்தவனாகவும்
எனக்குள் நானே பகட்டிக் கொண்டு
மீசை மயிரை முறுக்கிக் கொண்டேன்…
அது ஆண்மையின் அடையாளமாமே?
இந்த மீசையில்லா அர்ச்சகன் திருடியது
தேங்காய் விலையினும் இருமடங்கு..
ஏமாற்றப்பட்டதை உணரத் தொடங்குகையில்
எனது தேங்காயை உடைத்துக் கொடுத்தான்…
குடுமியை பிய்த்துத் தாருங்கள் என்றேன்
3
எனக்காக என்றே சமைத்து
படைக்கப்பட்ட அறுசுவைப் படையலது.
உண்டு களிக்க வேண்டிய பேராவலில்
கையலம்பி வருகின்ற இடைவெளியில்
யார் யாரோ மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடிவயிற்றுப் பெரும்பசியை இறுக்கிப்பிடித்து
அவர்கள் உண்பதை
கண்கொட்ட ரசித்துக் கொண்டிருந்ததில்
கோரிக்கையின்றி சூட்டப்பட்டிருந்தது
‘ஆண்டவன்’ எனும் அடைமொழி…
4
இரட்டைக் குழந்தை பிறக்குமென்று எக்களித்த அந்தக் கூட்டத்தில்
அனைவராலும்
ஒதுக்கி வீசப்பட்ட
ஒட்டிய அந்த
இரட்டை வாழைப்பழத்தை
யாருமற்ற பொழுதில்
கோழியென குப்பை கிளறி
எடுத்துச் சுவைக்கிறாள் அப்பெண்…
ஒன்றாவது பிறந்திடாதா என்ற
ஏகாந்த எதிர்பார்ப்பில் மென்றுகொண்டிருக்கும்
அந்தப் பாமர அபலையிடம்
எப்படிச் சொல்வேன்
அவளது இறுதி நம்பிக்கையும்
மூட நம்பிக்கை என்று…
எழுதியவர் :
கதிரிளவன் இரவிக்குமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
நறுக்கென்று உள்ளது அந்த நான்காவது கவிதை
அந்த நான்காவது கவிதையில் ‘அந்த’ என்ற சொல் மூன்று இடத்தில். கவிதைக்கு சொற் சுருக்கம் அவசியம். அந்த, ‘அந்த’என்ற சொல் இல்லாவிட்டாலும் அந்த நான்காவது கவிதை நன்றாகவே இருக்கும். கவிதையில் சொற் சுருக்கம் படிப்பிற்கும் பதிவிற்கும் பதிப்பிற்கும் நல்லதே.