1. வேஷம்
இன்றைக்கு வாய்த்தது
நல்ல வேடிக்கை காட்டும் முகம்.
பெரிய கோமாளியாகக் கடவது
என்று தினசரியில்
என் பெயருக்கு ராசிபலன்
பொய்யில்லை யாரைப் பார்த்தாலும் சிரித்து வைக்கத் தோன்றுகிறது
பசிக் கொடுமை
கூர்மையான பகடிகளைக் கூட
மனச் சேதம் அடைந்தவன் போல்
கடந்து போகச் சொல்கிறது
கோமாளிகளைத் தெரு நாய்களும்
விட்டு வைப்பதில்லை போலும்
ஒரு பூனை கூட
உன் பேச்சைக் கேட்காது
இன்று இரவு சீக்கிரம் வந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது
இந்த வேசத்தைக் கலைத்து விட்டு
சொந்த முகம் காணலாம்
மனதார இரண்டு சொட்டு
கண்ணீர் விடலாம்
எப்படியும் நாளை ஒரு
புத்தம் புதிய வேஷத்திற்குத்
தயாராக வேண்டும்
எப்போதும் கெட்டதிலும்
ஒரு நன்மை உண்டு.
கோமாளியாக சபிக்கப்பட்டாலும்
அரசியல் கோமாளியாக சபிக்கப்படவில்லை
என்பது தான் அது
2. தேடல்
இருள்வீதிக்கு மயக்கும்
தோற்றப் பொலிவு
இதில் நடமாடும் மனிதர்களும்
நிழல்களைப் போலவே
உருக்கொண்டு திரிகிறார்கள்
அவர்களின் மனது
அவர்களுடன் வருவதாகத்
தெரியவில்லை
அதன் நிழலுடன் தான் அவர்கள்
நடந்து வருவது போலத் தெரிகிறது
பாவம் அப்படி என்ன தான் தேடுகிறார்களோ
இந்த ஒளிக் கலவையின் ஊடுபாவுக்குள்?
யாரையாவது தோளில் தட்டிக் கேட்டால்
என்ன பதில் சொல்வார்களோ தெரியவில்லை
இறந்த நாளை
இந்த நாளை
நாளை என்னும் நாளை
தொலைந்த உறவை
எதிரியை
தொலைத்த கடவுளை
அல்லது தன்னையே
அல்லது தன் நிழலையே
இப்படி ஏதாவது ஒரு காரணம்
இதில் ஒருவரைக் கேட்டபோது
சொன்னார்
” தொலைந்த இந்த நாளில்
நிழலை
அவர் தேடி வந்திருப்பதாக”
அசல் எங்கேயிருக்கிறது
என்று கேட்டேன்
அசலை விற்றுத்தான்
இந்த வேலையைப்
பெற்றுக் கொண்டதாக
சொல்லிச் சென்றார் அவர்
3.வாழ்க்கை (கவிதை )
நல்ல உ றக்கத்தில் சங்கிலி
என் கனவினில் வந்து
இரண்டு ரொட்டித் துண்டுகளும்
கொஞ்சம் தண்ணீரும் கொடு என்றது
மறுபேச்சின்றி
குளிர் சாதனப்பெட்டியிலிருந்து
இரண்டு ரொட்டித் துண்டுகளும்
கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும்
எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தேன்
அங்கே எனக்காகவே காத்திருந்தது போல் வந்து தாவி
என் கைகளிலிருந்து பறித்துத் தின்ன ஆரம்பித்து விட்டது
இரண்டு ரொட்டித் துண்டுகளும்
கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் தான்
வாழ்க்கையா என்றேன்
என்ன செய்வது நாங்கள்
காலத்தை ரொட்டித் துண்டுகளாய்த்
தின்ன முடிவதில்லையே என்றது
கவிதை எழுதியவர்
தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.