தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems)
கவிதை 1
புல்லிக் கிடந்தது
புடை பெயர்ந்தது
அவ்வளவில் அள்ளிக் கொண்டது
உன் நினைப்பு சகி !
நினைவு ஒன்று தானே
மரித்தாலும் உயிர்த்தெழுவது
சங்குப் பூனைக்கு வீசும்
ஒரு சிறிய ரொட்டித் துண்டைப் போல
நீ வீசி விட்டுப் போன நேசம்
இப்போது உடைக்க முடியாத
பாறாங்கல்லாய் இருக்கிறது
நினைவுகளைச் சுமக்க முடியாத மனிதர்களுக்கு
இரண்டு நெஞ்சங்கள் வழங்கப்படவில்லையே
இன்னும்
புது மழைக்குப் பின்
சகலத்தையும் அடித்துச் செல்லும்
பேராறு போலத்தான்
இந்த நேசமும்
கடலில் கொண்டு போய் சேர்ப்பதற்குள்
எத்தனை அருவிகளில்
தலைகீழாய் குதிக்கச் சொல்கிறது
மனிதர்களை
மனதின் நினைவுகளை
மனதே அழிக்க வேண்டுமென்ற
விதியின் படி தோற்றுப் போய்
ஆலிலைச் சருகு போல்
அலைந்து கொண்டிருக்கும்
கோடியில் ஒரு மனது தான்
இந்தக் கவிதையை
உன்னிடம் சேர்ப்பது
கவிதை 2
நேற்றின் நீட்சியாய் நாளையின் தொடர்ச்சியாய்
தகிக்கும் இன்று
எனக்கு
உன் நினைவுகள்
சுவாசத்தை பிசையும் ஒரு பொழுதும்
மூச்சை நெரிக்கும் மறு பொழுதும்
துயர்கூட்ட
இடம் வலம் களிறுகளாய் புரளும்
ராட்சத முகில்களின் அடியில்
சிக்கித்திணறும் அந்த இளம் நிலவுக்கு
எவ்விதத்திலும் உதவமுடியாதவனாக
வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இவ்விரவோடு
கருங்குமிழ்களை உற்பத்தி செய்யும்
தோற்றுவாய் அருகே
முகம் வைத்து காத்திருந்தும்
ஏனோ நானொரு குமிழுக்குள்
அடைபட இயலாமல் போக
என் கைகளில் மோதி
உடைந்து சிதறுகிறது
கருந்திரவம் காற்று வெளிகளில்
துயரத்திற்கு ஒப்பு கொடுக்கப்பட்ட தனிமையை
ஒரு மலைப்பாம்பு விழுங்கிக்கொண்டிருக்கையில்
உருட்டி விழித்துக்கொண்டிருக்கும்
அதன் கண்கள் சொல்லும் சேதி
என்றுமே சேராதோ இனி சேருமிடம்
தன்னைத்தானே சீறிப்பார்க்கும்
மீட்சிமையற்ற சர்ப்பத்திற்கும்
உதிரும் பொழுது ஒன்றிற்கே
விடைபெற காத்திருக்கும்
நடுங்கும் நட்சத்திரத்திற்கும்
பின் இரவின் கருமையை
நகத்தால் கீறிப்பார்க்கும் உனக்கும்
சேர்த்தே விசும்பிக்கொண்டிருக்கிறது
வெட்ட வெளியிலொரு
அடையாளமற்ற
அக்காகுருவி
கவிதை 3
சன்னலைத் திறந்ததும்
நுழைந்து விடுகிறது
ஒரு கரிச்சான்
சிட்டுக்குருவி
ஒரு செம்போத்து
இவைகளைத் தழுவிய காற்று
நமது கழுத்தைக்
கட்டிக் கொண்டு
சுழலத் தான் பூனை போல்
நம்மை உரசிக் கொண்டே இருப்பது
இந்த விண்ணில் சிறகடிக்கும் அத்தனை பறவைகளும்
நம் சொந்தம் தான்
சிறிது தானியங்களை மனதால்
தூவினால் போதும்
அல்லது சிறகுகள்
நேசத்தில் நெகிழ
ஒரு அன்பான கையசைப்பு கூட
போதுமானது
வா என் சகி
நான் உன் வண்ணத்துப்பூச்சி
ஒரு வண்ணத்துப் பூச்சி
நூறு கவிதைகளுக்குச் சமம்
நூறு கவிதைகளும்
ஒரு வெண்புறாவுக்குச் சமம்
உனது பெயரையும் எனது பெயரையும்
மாறி மாறி உச்சரிக்கும்
ஒரு கருவுற்ற இதயத்தின்
முதல் துடிப்போ
இந்த ஆகாயத்திற்குச் சமம்
கவிதை 4
நிழல்களின் விளையாட்டு
நிழல்களின் வழியே
பாதை கண்டு பயணிப்பவன்
நான்
நிழல்களில் தான் பேதங்களில்லை
இனம் மதம் நிறம் பால் என
பாகுபாடுகள் இல்லை
சில நேரம் குதித்துக் குதித்து வரும்
நிழல்களைப் பார்க்கும் போது
மனதைப் பார்ப்பது போலவே இருக்கும்
நடனமிடும் சுடரின் நிழல்
நடராஜரின் அம்சம்
திரியின் நிழல்
பேசும் மௌனத்தின் நாவுகள்
பறக்கும் புறாவின் நிழலை பார்க்கையில்
தரையை முத்தமிடத் தோன்றும்
சிறகு விரித்த காக்கையின் நிழல்
இருளின் பேரண்டம் போல்
உருக் கொள்ளும்
மழையின் நிழலை
ஒரு முறையேனும் தரிசிக்க முடியாதவர்களாகிப் போகிறோம் நாம்
ஏரியில் குதிக்கும் மழைத்துளியின் நிழல் தான்
ஒரு நீர்ப் பூவாய் முகிழ்த்து மேலெழுவது
கர்ப்பக் கிரகத்தில்
மூலவரின் அசலை விடவும்
நிழல் தான் சுவரில்
துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும்
விளக்கின் வெளிச்சத்தில்
அருள் பாலிக்கவில்லையென்றாலும்
பாவனை செய்யாது
நிழல்களையே பார்த்துப் பழகிய கண்களுக்கு
உலகமே ஒரு நிழலாட்டம் போலத்தான்
தோன்றும்
எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்
என்று கேட்ட மெளனியின் நிழல் தான்
இந்த கவிதையில் விழுந்திருப்பது
நினைவுகளின் நிழலை
தேடி அலைந்தவன் நான்
எனது நிழலைப் பார்த்த
நாளிலிருந்து தான்
கொஞ்சம்
அடக்கி வாசித்துக்
கொண்டிருக்கிறேன்
கவிதை எழுதியவர்
தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.