மகேஷ் நந்தா கவிதைகள்

‘குறி நசுக்கப்பட்ட கிழவன்’

The Old Reader

மரணத்தின் சாயல் படிந்த
கிழவன் ஒருவன் மெல்ல ஊர்ந்தே
நடைபயிற்சிக்கு வருகிறான்

எதிர்ப்படும் போதெல்லாம் ஏதேதோ
பிதற்றுகிறான்

விலகி இருந்த கால்களுக்கிடையில்
சுகித்துக் கிடந்தவள்
அவனைப் புழுபோல் பாவிக்கிறாளாம்

சொல்லிச் சொல்லி
மாய்ந்து போகிறான்
அந்தப் பெயர் தெரியாத கிழவன்

பேராண்மை கொண்ட பொழுதுகளில்
அவனின் ஆளுமையில்தான்
உலகம் இயங்கியது என்பதை
அவன் என்னைக் கடக்கும்போதெல்லாம்
சொல்லி நகர்கிறான்

இரண்டாம் தாரமாய் வாக்கப்பட்ட அவள்
ரத்தம் சுண்டிவிட்டதென்று
இவனை கண்டுகொள்வதேயில்லையாம்
குரல் கம்முகின்றான்

விடாப்பிடியாய் நடக்கிறான்
கை காலை அசைக்கிறான்
கால்களை அகட்டி வைத்து
தண்டால் எடுக்க முயல்கிறான்
ஆமையென ஊர்கிறான்
குளிர்தாங்காது மப்ளரை காதுவரை
இழுத்துவிட்டுக் கொள்கிறான்.

வாழ்வின் பரஸ்பர புரிதலின்
இறுதி நிலையை எட்டிவிட்ட
அவனது கண்களில்
மரணத்தின் சாயல் தெரிகிறது

நாளை நடைபயிற்சிக்கு
அக் கிழவன் வருவானா ?
தெரியவில்லை…?

வரவில்லையெனில்
அதற்கான அறிவிப்பை
யாரிடமிருந்து
நான் பெறக்கூடும்….?.

——————————————————

காலில் மிதிபடா பூக்கள் !
In Bloom Flower Studio, Ghatkopar East - Florists in Mumbai - Justdial

சுரேந்தர் ஜீயின்
அடகுக்கடை
ஓரத்தில்தான் இன்று இடம்
கிடைத்தது.

யாருமற்ற கடையில்
நானும் அவளுமே
தனித்திருந்தோம்

நட்சத்திரங்கள்
சூல் கொண்ட  இரவில்,

அந்த சாலை முழுவதும்…

சவஊர்வலத்தில்
சிந்திய பூக்கள்
இறைக்கப்பட்டிருந்தன

காலில் மிதிபடாத சில
சம்மங்கியும் அரளியும்
எங்களோடு ஒன்றிக்கிடந்தன

நிர்வாணம் பளிச்சிடும்
நிலவொளியில்…

வியர்வை பிசுபிசுக்காத
அந்தப் பனிபெய்யும்
அகாலக் குளிரில் நாங்கள்
கடையின் ஷட்டர் ஓரம்
இயங்கிக் கொண்டு இருந்தோம்.

இதோ உலகம் விழிக்கப் போகிறது.
சேட்டு அடகு கடையை திறக்க போகிறார்.

இனி எங்களின்
ஏகாந்தப் பெருவெளியில்
உங்களின் நடைபாதை
உலகம் உயிர்பிடிக்கப்போகிறது!

– மகேஷ் நந்தா