நெய்வேலி பாரதிக்குமாரின் கவிதைகள்
த்சோ.. த்சோ
*******************
பொய் வெட்கத்துடன் உதிர்க்கும் ம்ஹும்
அங்கீகரிக்கிறது
கூடலின் போதான மீறல்களை…

செல்லச் சிணுங்கலுடன் இசைக்கும்.. சீச்சீ..
மொழி பெயர்க்கிறது ஆயிரம்
எதிர் அர்த்தங்களை

ஒரு நொடியில்
மின்னி மறையும்
உதட்டுச் சுழிப்பு
பழிக்கிறது
அகராதிகளின்
அத்தனைச் சொற்களையும்…

ஒரு த்சோ த்சோ
உரித்து விடுகிறது
ஏமாற்றங்களின் தொலிகளை..

அர்த்தங்களில்
கால் இடறி
மல்லாந்து கிடக்கின்றன
எல்லா மொழிகளும்..

அகாதத்தின் பொருள் தேடி..‌.
*********************************
ஒரு சொல்லின் நூல் பிடித்து நடக்கையில்
திரும்ப விரும்பா
மொழி வனத்துக்குள் இட்டுச் செல்கிறது அச்சொல்..

கனிந்திருக்கும் சொல்மரத்தின் அருகில் செல்கையில்
அது
மெய் போலிருக்கும்
பொய்யும் வஞ்சகமும் என
பொழிப்புரைக்கிறது..

காதம் என்றால் தூரம் எனில்
அகாதம் அருகிலா என
வினவுகையில்
நீளம் என்று மறுக்கிறது…

அகராதிகளின் கண்ணாமூச்சி விளையாட்டில்
கண்டுபிடிக்காதபடி
சொல் விட்டு சொல் தாவி
ஒளியலாம்…

ஒவ்வொரு முறையும் தேடுவதற்காக நுழைந்து
தொலையலாம்
தொலைவதற்காகவே தேடலாம்…

சிலுவையின் ஆணிகளிலிருந்து புறப்படும் கருணை..
************************************************************
சுமந்து செல்பவர்களே மீண்டும் மீண்டும்
அறையப்படுகிறார்கள்…

குருதியின் தடத்தில் இழுத்துச் செல்லப்படுகின்றன
பொறுமையின் கால்கள்..

சிலுவையின் ஆணிகளிலிருந்து புறப்படும் கருணை போதிக்கின்றது
என்றேனும் ஒருநாள் கடவுளாகலாமென..

புதைக்கப்படுபவர்கள் ஒருபோதும்
உயிர்த்தெழுவதே இல்லை

குனிகின்றவர்களுக்காகவே தயாராகிக் கொண்டிருக்கின்றன
சிலுவைகள்….
ஆமென்..

– நெய்வேலி பாரதிக்குமார்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.