பாங்கைத் தமிழனின் கவிதைகள்
தரணிப் புகழ் தமிழ்நாடு
*******************************
பெயர் சூடி மகிழ்ந்தோமே
பெருமை யென உணர்ந்தோமே
தமிழ்நாட்டுத் திரு நாளை
தலை வணங்கி மகிழ்வோமே!

தமிழ்நாடு பெயர் சூடி
தமிழ்த் தொன்மை நாம்பாடி
தரணிக்கெலாம் நம் புகழை
தண்டோரோ அறைந் தோமே!

தமிழ்நாடு எனும் பேர்தான்
தாத்தன் பரிபாட லிலும்
பதிற்றுப் பத்து மேகலையும்
பறை சாற்றிச் சொன்னதுவே;

சிலம்பு சொல்லும் தமிழகமாய்
திருவிளை யாடலுமே
தமிழ்நாடு எனும் பேரை
தரணிக்கெலாம் சொல்லினவே!

உண்ணாமல் நோன் பிருந்து
உயிர் நீத்தார் சங்கரனார்
உலகினிலே இதைப் போலே
உண்டோ? அட யாருரைப்பார்!

வருங்காலம் உணர்வு பெற
வகுத்தாரே வழி யதனை
தமிழ்நாடுப் பெயர் சூட்டித்
தமிழினத்தைக் காத்தாரே!

பேரறிஞர் அண்ணாவை
பெருமையுடன் இந்நாளில்
தலை வணங்கி மகிழ்வோமே
தமிழரெலாம் வாருங்கள்!

இவன்தான் தமிழன்
***************************
கருப்பாய் இருப்பான் தமிழன்
கனிவாய் இருப்பான் தமிழன்
அறிவாய் இருப்பான் தமிழன்
அன்பாய் இருப்பான் தமிழன்
பணிவாய் இருப்பான் தமிழன்
பண்பாய் இருப்பான் தமிழன்
உழைத்தே பிழைப்பான் தமிழன்
உண்மையாய் இருப்பான் தமிழன்
ஏணியாய் இருப்பான் தமிழன்
ஏதம் இல்லாதவன் தமிழன்
முதலில் பிறந்தவன் தமிழன்
மூத்த மொழி கண்ட தமிழன்
சாதி இல்லாதவன் தமிழன்
சனாதன எதிர்த் தமிழன்
ஆண்டப் பறம்பரைத் தமிழன்
ஆதி திராவிடன் தமிழன்
அகில வாணிபன் தமிழன்
அஞ்சாத நெஞ்சன் தமிழன்
இயற்கையின் காதலன் தமிழன்
ஈகையில் உயர்ந்தவன் தமிழன்
நட்பின் இலக்கணம் தமிழன்
நன்றி உடையவன் தமிழன்!

‘ஹிந்தியா? அப்படின்னா…?’
***********************************
அகிலத்தில் பல்லுயிர்கள்
அவதரித்த போதினிலே
ஆறறிவும் ஆண்மையுமாய்
அகிலத்தில் தோன்றியவர்;
முதல் மொழியை முத்தமிழை
மூவாத செந்தமிழை
வியனுலகில் மனிதகுலம்
விழித்திடவே விதைத்தயினம்!

தரணியிலே தமிழரினம்
தனிப்பெருமை கொண்டகுணம்;
தற்குறிகளிப் போது
தம்பட்டம் அடிக்காதீர்!
வெறியாட்டம் போடுவதும்
விலங்குத்தனம் காட்டுவதும்
சரியாமா யிப்போது?
சனாதனக் கோழைகளே!

ஹிந்திக்கும் எங்களுக்கும்
என்னமுறை உறவுமுறை?
தாய்வழியில் உறவாமோ
தந்தைவழி உறவாமோ?
மாமன்வழி உறவாமோ
மைத்துனரின் மரபாமோ?
ஈனங்கெட்டுப் போவதில்லை
எம் தமிழை இழப்பதில்லை.

என்னாடை என்விருப்பம்
என்னுணவு என்னுணர்வு
எம்மொழியே எம்வாழ்வு
யாரவன்நீ யெமைக்கேட்க?
எம்வலிமை உணராமல்
எகத்தாளம் பேசாதே
இத்துடனே நிறுத்திவிட்டால்
இறையாண்மை காப்போம்யாம்!

கொட்டிக் கொட்டிப் பார்க்காதே
கோபந்தன்னைக் கிளறாதே
கிள்ளிக் கிள்ளிப் பார்க்காதே
கீழ்த்தரமாய் உளறாதே
பெருந்தீயாய் மாறிடுவோம்
பேதைகளே பொசுங்கிடுவீர்!
வரும்காலம் எம்காலம்
வழிவிட்டு விலகிடுவீர்!

இல்லந்தோறும் புனித நூல்
************************************
வள்ளுவனை ஐயன் தனைப் படிப்போர் உலகில்
வாழ்வாங்கு வாழ்க்கையினை வாழ்வார் கேளீர்!
தெள்ளுதமிழ் அள்ளித்தரும் செல்வம் எல்லாம்
திருக்குறளின் புதையல்தான் பருகிப் பாரீர்!

உண்மையுடன் வாழ்க்கைதன்னை வாழ்வோர் யாரும்
ஒப்பற்றத் திருக்குறளை ஓதி வாழ்வார்!
ஆயிரத்து முந்நூற்றுக் குறளால் அய்யன்
அகிலத்தை ஆண்டகதை படித்துப் பாரீர்!

அறந்தானே மானுடத்தின் நாதம் என்றே
அதை வைத்தான் அய்யனவன் முதலில்பாலாய்!
பொருளென்னும் செல்வந்தனை இரண்டாம் பாலாய்
பொய்யில்லாப் புலவனவன் போற்றிச் சொன்னான்!

இன்பமது என்னவென்றே விளக்கிச் சொல்லி
இறுதியிலே மூன்றாம் பால் ஊட்டி வைத்தான்!
உலகோரின் வாழ்க்கையது சிறக்க வேண்டி
உத்தமனோ உண்மைகளை நாட்டி வைத்தான்!

அறியாமல் அகிலத்தில் வாழ்வோ ரெல்லாம்
அய்யனவன் திருக்குறளைக் கற்று வாழ்ந்தால்
அகிலத்தில் மேன்மையுற வாழ்க்கை தன்னை
அற்புதமாய் வாழ்ந்திடவே வழியைச் சொல்லும்!

ஞானிகளின் குருவாக வந்துத் தோன்றி
ஞாலமது சிறந்திடவே வழியைச் சொன்ன
மேன்மைமிகுத் திருக்குறளை இல்லந் தோறும்
புனிதமிகு நூலாகப் போற்றி வாழ்வோம்

– பாங்கைத் தமிழன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.