இயற்கைப் படைப்பின் பாலில் காணும் வேற்றுமை.
இலக்கியப் படைப்பின் பாலிலும் காணும் பேதைமை…
பெண் முன் தாண்டவியலா இலட்சுமணக் கோட்டிட்டு
ஆண்-பெண் சமத்துவம் பேசும் சமூகக்கட்டு
ஆணுக்குப் பெண் சளைப்பில்லை என்பது
சம்பாத்தியத்தில் மட்டுமே
பெண் சமத்துவத்தில் அல்ல..
படி தாண்டினாலும் பத்தினி
என்று வியாக்கியானம் பேசும்
விரும்பிய
படி தாண்டிய பெண்ணை
வசவுகளால் வீசும்.
அதைச் செய் இதைச் செய் என்பர்
பெண் எதைச் செய்தாலும் குற்றம் பார்ப்பர்..
பெண்ணுக்கான முற்போக்கு
பேசுவதில் பயனில்லை
முற்போக்காக வாழும் பெண்களே
எதார்த்தமாக வாழவிட்டு
இலக்கியமாக கொண்டாடுங்கள்.
பெண் கொண்ட கருத்தில் முரண்பாடு காணலாம்..
பெண் மீதே கருத்து முரண்பாடு காணலாமா?
புனையப்பட்ட இலக்கியத்தை வாசிப்பதில் சிறப்பில்லை.
செறிவுற்ற இலக்கியமாக வாழ்வதே
சிறப்பு..
பெண் மீதான போர்த்தொடுப்பு குறைந்திருக்கலாம்..
பெண்மை மீதான படையெடுப்பு
பாரதியின் பிறப்பாலும் மாறப்போவதில்லை..
பாரதியின் படைப்பாலும்
மீளப்போவதில்லை…
பெண்சமத்துவத்தைப் பாராட்டிப்
பேசுவதை விட
பெண் சமூகத்தைப் பிரித்து பார்க்காதிரு..
பெண்ணுரிமைப் பேசாதே..
பெண்ணுயர்வைத் தடுக்காதே..
உலவ விடு பெண்ணை தடுப்பின்றி
மலர்ந்து விடும் பெண்ணுரிமை தடையின்றி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.