1
ஒரு முத்தம் கேட்டதற்கு
இன்று வெள்ளிக்கிழமை
என்று பதில் வந்தது.
ஒரு சைவ முத்தம் சமைத்துக் கொடுத்தனுப்பு என்றதற்குப்
பச்சை நிற அணியிடம்
கொடுத்தனுப்புகிறேன்
என்று பதில் வந்தது.
முத்தம் ஒரு புலனுணவு.
எப்போதும் சூடாகப் பரிமாறப்படும்
அதிசய உணவு.
பின்பு பறக்கும் முத்தம் வந்தது.
உரசாமல் உண்டாகும்
அதிசயச் சிக்கிமுக்கி நெருப்பாய் இருந்தது.
பாலம்கட்ட மணலைச் சுமந்த
அணிலைப் போன்று
இப்போது முத்தங்களைச் சுமக்கப்
பலநிறங்களில் அணிகள் தோன்றுகின்றன.
நேரே தந்தாலும்
யார் சுமந்தாலும்
அன்பின் சூட்டில் சமைத்த முத்தத்திற்குத் தீட்டு இல்லை.
ஆம், தீக்குத் தீட்டில்லை.
முத்தம் என்பது தீ.
2
என் காதல் இருக்கிறது பத்திரமாய்!
எஸ்பிஐயிடம் இருக்கும்
தேர்தல் பத்திரமாய்!
முழுதாய்த் தரச்சொல்லி
உச்சநீதிமன்றம்போல் சொல்கிறாய்!
முழுதாய்த் தந்துவிட்டு
என்னை எங்கேபோய் நிற்கச் சொல்கிறாய்!
3
வண்டியைப் பழுதுநீக்கம் செய்யச்சொல்லி
பழகிய நண்பரின் கடையில் விட்டேன்.
நாள்களாகியும்
வண்டியைப் பற்றி எந்தத் தகவலுமில்லை அவரிடமிருந்து.
விசாரிக்க அழைத்ததில்,
‘முன்பணம் தந்துவிட்டால்
உடனே பார்க்க ஆரம்பித்துவிடுவேன்’ என்றார்.
‘வண்டியையே உங்களிடம் தந்திருக்கிறேனே’ என்றேன்.
‘வண்டி என்னிடம்தான் இருக்கிறது.
ஆனால், என்னுடையதல்லவே!’ என்றார்.
இருக்குமிடத்துக்கும் உடைமைக்கும்
உள்ள இடைவெளி
‘தேவை’ எனும் பாவிழையால்
இணைக்கப்படுகிறது.
அஃது அன்பு, நம்பிக்கை எனும்
ஊடிழைகளால் நெய்யப்படும்போதுதான்
அழகான வண்ணத் துணியாகிறது.
4
ஏமாற்றுகிறார்கள்
என்று தெரிந்தே ஏமாறுவேன்.
எப்படி எப்படியெல்லாம்
அவர்களால் ஏமாற்றமுடியும்
என்று தெரிந்துகொள்ளத்தான்
இப்படி.
நான் ஏமாறவில்லை என்றுகாட்டிக்கொண்டு
அவர்களைத் திருப்பி ஏமாற்றமாட்டேன்.
நான் ‘கவனமாக ஏமாறக் கற்றவன்’.
5
உன் அன்பை எழுதவேண்டும்.
கண்களால் பார்க்காவிட்டாலும்
காதுகளால் கேட்காவிட்டாலும்
நாசியால் முகராவிட்டாலும்
நாவால் ருசிக்காவிட்டாலும்
உடலால் புசிக்காவிட்டாலும்
எழுதமுடியும் என்னால்.
உன் அன்பு ஒரு காந்தப் புலம்.
அதில் நான் சுழலச் சுழல
மின்னோட்டமாய்ப் பாயும்
என் கவிதை.
எழுதியவர்
பித்தன் வெங்கட்ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
என் கவிதைகளைப் பதிவிட்டமைக்கு நன்றியும் மகிழ்வும் ☺️🙏