1.சிறைக்கூடு
சிறகு முளைக்கவில்லை
பறக்க அழைக்கிறது வானம்
சிறையாகி வருத்துகிறது
பாதுகாக்கும் கூடு.
2. நன்றிக்கடன்
பழுடைந்த தெருக்குழாயின்
கண்ணீர்த் துளிகளில்
தாகம் தீர்கின்றன பறவைகள்
பெருமழை தூவி
பூமியை இரட்சிக்கின்றன
மேகங்கள்
3. ஏளனப் புன்னகை
விவரமான ஆளாகவும்
விவகாரமான ஆளாகவும்
வாழத்தெரியவில்லை
பிழைக்க அறியாத ஜடமென்று
ஏளனமாய்ப் புன்னகைத்து
என்னை விலக்குகிறது உலகு
4. மீண்டும் நுழைகிறேன்
*
நிசப்தமான வகுப்பறை
சன்னலுக்கு வெளியே
தாவித்திரியும் குரங்குகள்
*
அதட்டலும் மிரட்டலுமாய்
கண்டிப்போடு கற்பிக்கிறேன்
மலராமல் உதிர்கின்றன அரும்புகள்
*
நூறு முகங்களின் தேவையிருக்கிறது
சலித்துப்போன ஒற்றை முகத்தோடே
மீண்டும் நுழைகிறேன் வகுப்பறைக்குள்.
*
வகுப்பறையை நேசிக்காமல்
விலகியே இருக்கிறார்கள்
சூடுபட்ட ஆசிரியர்கள்
மாறுபட்ட நடத்தையில்
கற்பதை வெறுத்து
எதிர்காலத்தின் சிறகை
இலகுவாய் முறித்துக்கொள்ளும்
குரலற்றப் பறவையாகிப்
பிள்ளைகள் வளர்கின்றன
பள்ளிக்கூடங்கள்
தேர்ச்சியை நோக்கிப்
பந்தயக் குதிரையாய் விரைகின்றன
தேர்வறையின் நரகில்
தீயில் விழுந்த புழுவாய்
வதைந்துகொண்டிருக்கிறது
ஆற்றலுடைய பால்யம்
பழுதுள்ள பாடத்திட்டம்
தள்ளிநின்று இரசிக்கிறது
செவிடான அதன்காதில்
சங்கொலியின் நியாயம்
பூவரசன் பீப்பியின்
சப்தமாகவும் விழவில்லை
பொன்.தெய்வா
ஐவேலி.