கேள்விகளை
எப்போதும் யாருக்கும்
பிடிப்பதே இல்லை

கேள்விகள் தடுமாறச் செய்கின்றன
கேள்விகள் முகத்தில் அறைகின்றன
கேள்விகள் முகமூடியை அம்பலப்படுத்துகின்றன
கேள்விகள் அதிகாரத்தை ஆட்டிப்பார்க்கின்றன
கேள்விகள் போலிகளை காட்டிக்கொடுக்கின்றன
கேள்விகள் எதிரிகளை பலவீனப்படுத்துகின்றன
கேள்விகள் சதிகளை முறியடிக்கின்றன
கேள்விகள் சத்தத்தால் ஓர் யுத்தம்செய்கின்றன

இந்தக் கேள்வி கேட்கும் யுத்தத்தில்
கேட்பவர்களின் குரல்வளைகள் நெறிக்கப்படலாம்
குரல்வளைகள் நெறிபடுதலே
கேள்விக்கான பதிலாகலாம்

கேள்விகள் எப்போதும்
வினைத்தொகையைப் போன்றவை
எல்லாக் கேள்விகளும்
எக்காலத்துக்கும் பொருந்துபவை
எல்லாக் கேள்விகளும்
எப்போதும் பதிலற்றவை
குரல்வளைகள் மாறினாலும்
குரல்கள் கேட்கும்
காற்றின் ஊடாகவும்
கேள்விகள் ஒலிக்கும்

*****
கரித்துணி துவைப்பதென்பது
கடந்த மாதத்தின்
புகைப்பட ஆல்பத்தைத்
திருப்பிப் பார்ப்பது போன்றது
கரித்துணி தவிர்த்து
இடுக்கி பயன்படுத்துவோர்க்கு
இந்தப் பாக்கியம் வாய்ப்பதில்லை
கரி அடுப்பு காலத்தில்
வழக்கத்திலிருந்த பெயர் என்றாலும்
காலம் கடந்து கரியை விடுத்துப்
பெயர் மட்டும் ஒட்டியிருக்கிறது
புடித்துணி என்ற புதுப்பெயர் வந்தாலும்
அவசரத்தில் சொல்வதென்னவோ
அதே ‘கரித்துணி’ தான்
பிசுக்குப் படிந்த துணி அதனை
அவ்வப்போது அலசிமட்டும் போட்டாலும்
எப்போதாவது வாய்க்கும்
சோப்புக்குளியல் அதற்கும்
நீலவண்ணச் சவர்க்காரத்தை
அழுத்தித் தேய்க்கத் தேய்க்க
ஆங்காங்கே ஒட்டியிருக்கும்
மிச்சத் துகள்கள்
துளித்துளியாய் வெளிவரும்
கடந்த மாத உணவுப்பட்டியல்
கடகடவென்று நினைவில் வரும்
பிரியாணிக்குக் கறி வாங்கிய கவரை
ஏதோ மறதியால் உணவுமேசையில் வைத்தது
அடுப்பில் பால் வைத்துவிட்டு
அரிசி களையச்சென்று
பால் பொங்கி வழிந்தது
தோசைக்கு வார்க்க எடுத்த எண்ணெய்
கரண்டியின் காம்பு பட்டு
தவறுதாய்க் கைநழுவி தரைக்கு வார்த்தது
போதாமல் கரைத்த பாத்திரத்திலிருந்து
பொங்கி வழிந்த இட்லிமாவினை
அள்ளி எடுத்ததுபோக மிச்சத்தைத் துடைத்தது
அவசரமாய் ரசத்துக்கு மிளகு சீரகம் இடிக்க
ஏலக்காய் பொடித்த அம்மியைத்
துணியால் ஒற்றி எடுத்தது – என
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
நினைவுக்கு வந்துபோகும்
அலசிய தண்ணீரின்
கரிய நிறம் மறைந்து
பழுப்பு நிறம் வர வர
ஒவ்வொரு நினைவும்
மங்கலாகிப் போகும்
மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு நினைவும்
பாத்ரூமின் தரையில் நிச்சயம் பிசுபிசுக்கும்
ப்ளீச்சிங் பவுடர் போட்டுத்
தரையைத் தேய்த்துக் கழுவ
அத்தனை நினைவுகளும்
அஸ்தமித்துப் போகும்
வெயிலில் காயபோட்டு
மடிக்க எடுக்கும்போது
மொறுமொறுப்பாய் உயிர்பெற்று
அடுத்த நினைவுக்கு
அனிச்சையாய்த் தயாராகும்
இனி எப்போதெல்லாம் செலவின்றிப்
பின்னோக்கிப் போகவேண்டுமோ
அப்போதெல்லாம் துவைக்கப்படலாம்
ஒரு அடுக்களையின் கரித்துணி!
— ப்ரீத்தி
One thought on “ப்ரீத்தி கவிதைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *