(i)விக்கல்:
காதல் மறதியில்
தாப அசரீரி
உன் நினைவு தூபத்தின் இருப்பை
மீட்டுணர்த்தும் தூண்டிலொலி
(ii)Hickey:
வலி ருசித்து
டோபமைனின் முதல் ஊத்தில்
நீ விண்டுண்டு எரித்த கலோரிகளின்
ஆஷ்ட்ரே
(iii) காதுமடல்:
ஆதிக்கூச்சத்தில் பூத்த
அசடு சினுங்கும்
ஓரிதழ் அல்லிவட்டம்
(iv)மச்சம்:
உன் தேக ரகசியங்களின்
கடவுப்புள்ளி.
என் மார்பில்
நீ ஒட்டிக்கொள்ள
மோகமசி குழைத்து வார்த்த
மகரந்தப்பொட்டு
(v)கொலுசு:
ஓடி ஆடி வீடு நிறைக்கும்
ஒலிக்கொலு
&
இணைவிழைச்சுனூடே
கெண்டைக்காலில்
கெச்சட்டமெழுப்பும்
ஜோடிக்குருவிகளின்
ஆதி கீச்சுகள்
(Vi) வியர்வை:
உடலோடிகள்
ஒருவரையொருவர்
கடலாகிக்கொண்டு
உப்புக்குளிக்கும்
உச்சவத்தின் குடமுழுக்கு.
◆◆◆◆◆◆
2) நான் நெருங்குவதை
உணர்ந்து கொண்டு
பட்டென பறந்துவிடும்
பட்டாம்பூச்சிக்கும்
அவளுக்கும்
அந்த தொடுவானத்தின்
நிறமிகள்.
◆◆◆◆◆
3)
ஒரே குடையில்
இரண்டு மேகம்
கூடிப் பொழிகிறது
காதலை.
அப்பொழுதுதான்
மழை விட்டிருந்தது
அவர்களை தனியே.
◆◆◆◆◆
4)
நதியிலிருந்து
நழுவிக்கொண்டு
வருகிறாய் நீராடிவிட்டு
உன் உடலிலிருந்து
ஒழுகுகிறது
நதியின் கண்ணீர்.
=====×××===

