வரைதல்
யானையையும்
காட்டையும்
ஒருசேர வரைந்து பார்க்கிறேன்
வரைவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகியே நிற்கிறது
காட்டையும் தன் தாயையும்
இழந்த அந்த குட்டி யானை ,
நிறம்
மரத்தடி நிழலில்
படரும் வெயிலின் நிழலை
வரைந்து வரைந்து அழிக்கிறேன்
தொடர்ந்து கொண்டே படருகிறது சுட்டெரிக்கும் வெயிலின்
நிறமாகிய அந்த மஞ்சள் நிறம் ,
உயிர்
நானும்
ஓர் பறவையாகவே
என் உடலை தரித்துக்கொண்டு சிறகுகளை விரித்து
வானம் முழுவதுமாகப் பறந்து
பறந்து பார்க்கிறேன்
பார்க்கின்ற திசையெங்கிலும்
காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது
பறவைகளை வேட்டையாட
ஒரு வேடன் ஆக்ரோஷமாக
செலுத்திய சில அம்புகளும்
உயிரற்றுக் கிடந்த
பறவைகளிடமிருந்து
உதிர்ந்த பல இறகுகளும்,
நானும் பறந்து
கொண்டே
இறக்க தயாராகிறேன் மனதால் .
மழை
உங்கள் வீட்டுக்
குழந்தைகளை
மழையில் நனைய விடுங்கள்
இல்லையென்றால்
மழையையாவது வரைய
விட்டு விடுங்கள்
விரல்களாவது
மோட்சம் பெறட்டும்
கண்ணீர்த் துளிகளால் ,
நிறம்
உயரத்திலிருந்து
கீழ் இறங்கி வந்து பறக்கிறது
பட்டாம்பூச்சி
என் இரண்டும் கண்களும்
இரண்டு பூ
கீழிறங்கி வா
தேன் பருகலாம் யென்கிறது பூவின் எனது உதடு
மஞ்சள் நிற பூவிற்கு
சிவப்பு வண்ணத்தை
பூசிவிட்டு
வட்டமடித்து விட்டத்தை
நோக்கிப் பறந்து பாய்கிறது
கனவுக்குள் நுழைந்த பட்டாம்பூச்சி,
குழந்தைக் கனவு
யாரோ
வரைந்த செடியையே
எவ்வளவு நேரம்
இப்படி பார்த்துக்கொண்டிருப்பாய்
யென்று கேட்கும் அம்மாவிடம்
அச்செடியில் பூத்திருக்கும்
பூவின் வாசத்தை
நுகர்ந்து கொண்டிருக்கிறேன்
என பதிலுரைக்கும் அக்குழந்தையின்
இரவு தோறும் வரும்
கனவு முழுவதிலும்
நாளை பூக்க தொடங்கும்
பல பூக்களின் நிறங்களின் சாயல் ,
அப்பா
இரவு நேரம்
திண்ணையில்
படுத்துக்கொண்டு
தூக்கம் வராமல்
அழுது அழுது நிரம்பி வழியும்
என் கண்ணீர் குளத்துக்குள்
யாரோ ஒருவர் நீச்சலடித்தவாறு மேலேறிப் போகிறார்
அந்த நிழல் என்னுடைய
அப்பனின் நிழலாக கூட இருக்கக்கூடும்,
ச.சக்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.