சசிகலா திருமால் கவிதைகள்

சசிகலா திருமால் கவிதைகள்




பெண் என்பவள்…
**********************
பெண் என்ற பிறப்பின்
அர்த்தம் தேடி அலைகிறேன்
விடையறியா வினாவாகவே
சுற்றுகிறது என்னை…

கருகலைப்பிலும் கரையாமல்
கள்ளிப்பாலிலும் உயிர் போகாமல்
தடைகளைத் தாண்டித் தங்கிவிட்ட
உயிர் கண்டு கலங்கி நிற்கும் நெஞ்சங்கள்…

பாரமென்றறியாது சுமந்த உயிரே
இன்று பாரமாகிப் போனதோ ஈன்றவளுக்கு…
பெண்ணாய்ப் பிறப்பெடுத்ததை நினைந்து
ஆனந்தக் கண்ணீர் வடித்தாளோ
ஏளனமாயும் போதைப் பொருளாயும்
பார்க்கும் சமூகத்தில்
ஏன் பெண்ணாய்ப் பிறந்தாயோ என்ற
வேதனையில் அழுதாளோ
கன்னம் தொட்டுக் கரைபுண்டோடும்
அவளின் கண்ணீருக்கு
அர்த்தம் இன்னும் விளங்கவேயில்லை..

ஆண் மகவென்றால்
குடும்ப பாரம் சுமப்பானாம்
பெண்ணாய்ப் பிறப்பெடுத்ததால்
குடும்பத்திற்கே பாரமாகிப் போனதாம்…
கல்யாணம் காட்சி நகைநட்டு சேர்த்திட
எங்கே போவதென்று
மலைத்து நிற்கும் தந்தை..
சீர் செய்தே சீரழியுமாம் உடன்பிறப்பு..

கருவோடு கலைந்திடாத நானோ
அனுதினமும் கருக்கலைப்புச் செய்கிறேன்
என் கனவுகளை…
சுதந்திரமாய் விரித்திட நினைக்கும்
என் சிறகுகளோ ஆங்காங்கே
ஒடிக்கப்பட்டு முடக்கப்படுகின்றன
ஆணாதிக்கம் எனும் அளவுகோல் கொண்டு..

திறந்த மேனியாய் கிடக்கும்
பிறந்த பிள்ளையைக்கூட
பெண்ணென்பதால்
காமமேறிய கண்களால் களவாடுகின்றன
அகமெங்கும் அழுக்கேறிய
சில அகோரிகள்…

கருவறை முதல் கல்லறை வரை
கலவிக்கெனவே பயன்படும்
உணர்வுகளற்ற மரப்பாச்சியெனவே
குருதியெங்கும் ஊறிவிட்ட எண்ணமதை
மாற்றிட ஆளின்றி தவிக்கிறது
பெண்ணினம்…
எத்தனை பெரியார் வந்துதான்
என்ன பயன்?..

அத்தனை அசிங்கங்களையும்
ஆழ்துளைக் கிணறெனவே
ஆழ்மனதில் ஆழமாய் புதைத்திட்டே
பழகிவிட்டது
பாழாய்ப்போன பெண்ணினம்..

பெண்ணினத்தை பிரமிப்பாய்
பார்க்கும் காலத்திலும்
கள்ளிப்பால் கலாச்சாரம்
மாறாத சுவடுகளாய் ஆறாத ரணமாய்
இன்னும் இருந்திடதானே செய்கிறது..
பெண் என்பவள் யாராகத்தான்
இருந்திட முடியும்?…
சதைப் பிண்டமாகவா அல்லது
அக்னிச் சிறகுகள் கொண்ட
சாதிக்கும் பறவையாகவா?…
எப்படிப் பார்த்தாலும் நிரம்புவதேயில்லை
பெண் எனும் அட்சயப் பாத்திரம்…

இரக்கமில்லா நின் நினைவுகள்..
****************************************
தினம் தினம்
எந்தன் உறக்கம் பறித்திடும்
இரக்கமில்லா நின் நினைவுகளை
எச்சரிக்கிறேன்…
வேண்டாமென்று விலகி விட எத்தனிக்கையில்
வேண்டுமென்றே பிடிவாதமாய்
இறுக்கிப் பிடித்துக்கொண்டு
இம்சிக்கின்றதே நின் நினைவுகள்….
விரும்பும் போது விலகிச் செல்வதும்
விலகும் போது விரும்பி வருவதும்
காதலின் எழுதப்படாத விதிகளில்
ஒன்று போலும்….

சசிகலா திருமால்
கும்பகோணம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *