சண்முகப்பிரியா தினகரனின் கவிதைகள் 

 சண்முகப்பிரியா தினகரனின் கவிதைகள் 

 

1

அண்ணாந்து பார்த்து
மழையை ரசிக்கிறது
காற்றில் திரும்பிய குடை
2
காட்சிகளின்றி அரங்கேற்றும்
அடுத்தவீட்டு வாழ்க்கையை
ஒண்டிக்குடித்தன சுவர்கள்
3
கரம் பிடிக்க காத்திருக்கிறது
கம்பி வளையல்
மொட்டை மாடி சுவற்றில்
4
வெறுமையை இறுக்கி
பிடித்திருக்கிறது
துணி உலர்த்தும் கயிறில் கிளிப்
5
அவசரத்தேவையே
அவனது மூலதனம்
கந்துவட்டிக்காரன்
6
கண்ணாமூச்சி
ஆடுகிறதோ
மேகத்தில் மறைந்து நிலா
7
என்ன கோபமோ
காற்றுக்கு
கிழிபடுகிறது வாழையிலை
8
விடியல்தோறும் இன்னும் கொஞ்சமென
கெஞ்சுகிறது இமைகள்
தூக்கம் கலைய
9
யார் இடைமறித்தது
வளைந்து நிற்கிறது
தென்னை
10
அமாவாசையில்
ஏமாற்றத்துடன் திரும்பின எறும்புகள்
கோலமில்லா வாசல்
11
கண்ணீர் சிந்தும்
புன்னகை
பூவில் மழைத்துளி
12
அறுவடை நேரத்தில் அடைமழை
மழையில் கரையும்
வியர்வை
13
எப்போதோ பதுக்கி வைத்தது
பத்திரமாய் உள்ளது
புத்தகத்தில் மயிலிறகு
14
பறக்க விட்டு ரசிக்கிறது
வேண்டுமென்று அழுத குழந்தை
பிடித்த பட்டாம்பூச்சியை
15
ஆணி அறைந்த
சுவற்றில்
சிலுவையில் அறைந்த இயேசு
16
அசையவேயில்லை
மரங்கள்
தியானத்தில் இருக்குமோ?
17
கண்ணை கவரும் விண்மீன்கள்
தெறித்து விழுகின்றன
வானவேடிக்கை
18
இடறியது கல்
குரைக்கிறது நாய்
கோபத்தில் தூக்கி எறிந்ததில்
19
சட்டென திரும்பியதில்
திடுக்கிட்டு பறந்தது
பழகப் பார்த்திருந்த புறா
20
ஆரம்பத்தில் பயந்த குழந்தை
துரத்திப் பிடிக்க ஓடுகிறது
நிழலை பார்த்து.
           ..சண்முகப்பிரியா தினகரன்
Show 3 Comments

3 Comments

  1. Shanthi Saravanan

    மிகவும் சிறப்பு தோழர். வாழ்த்துகள்

  2. Sakthi Bahadur

    அழகான கவிதைகள்… வாழ்த்துகள் தோழர்…

  3. நீ.சிந்து

    அர்த்தமுள்ள கவிதைகள் அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *