சிவராஜ் கவிதைகள்

கைநாட்டு

அ.
மிரட்டி வாங்கிய பத்திரங்களில்
கண்ணீருடன் உருட்டப்பட்டிருக்கிற
கைரேகைகள் தேய்ந்திருந்தன.

ஆ.
கட்டைவிரலில் வண்டி மசகு தடவி
கைநாட்டு போட்ட அம்மாவுக்கு
சரசுவதி என எழுதக் கற்றுக்கொடுக்கிறாள்
பள்ளிக்கூடம் போகும் செல்ல மகள்.

இ.

மண்வெட்டி பிடித்து
கைரேகை தேய உழைத்த ஏழை விவசாயி
கம்ப்யூட்டர் படித்த மகனின்
அலுவலகம் வந்தவர்
அவன் ரேகை வைத்ததைக் கண்டு
கண் கலங்குகிறார்.

ஈ.
கைநாட்டு வைக்கப்பட்ட
விசாவை வைத்துக்கொண்டே
அமெரிக்காவுக்கும்
அரபுநாட்டுக்கும் பறந்த பெரியாத்தாள்
தன் பிள்ளைகள் வீட்டிலிருந்து
திரும்பிக்கொண்டிருக்கிறாள்.

உ.
மைப் பெட்டியில்
தன் பிஞ்சு விரல்களை ஒற்றி ஒற்றியே
விதவிதமான ரேகை ஓவியங்களைத்
தீட்டிக்கொண்டிருக்கிறான் சிறுவன்.
அவற்றிலிருந்து எழுந்து பறந்தன
சிட்டுக்குருவியும் கொக்கும்
வண்ணத்துப்பூச்சிகளும்.

**************************

ருசி

தஞ்சாவூர் திருவோணம்
மாட்டுச் சந்தைக்குப்
போய் வரும்போதெல்லாம்
மீன் வாங்காமல்
திரும்பமாட்டார் அப்பா

சைக்கிளில் கூவிக்கொண்டு வரும்
மீன்காரனின் வியாபாரத்தை
அம்மாதான் தொடங்கி வைப்பாள்

மீன் என்றால்
அவ்வளவு பிரியம் எனக்கு

கடலில்லாத டெல்லியிலும்
புருஷன் வாங்கிவரும் மீனே
குழம்பாகும்

கர்ப்பிணியாய் இருந்தபோது
கண்வனின் கைப்பக்குவத்தில்
சப்புக்கொட்டினேன்

எட்டு மாதத்தில் பிறந்த
என் பிஞ்சுமகள்
ஏழாம் நாள் யமுனையில்…
எந்த மீனின் வயிற்றிலோ?

************************

வெள்ளாமை

விதை போடாமலும்
களை எடுக்காமலும்
செய்யும் வெள்ளாமை இது

ஆடும் மாடும்
காக்கா குருவியும்
தின்னுட்டுப் போக முடியாது

கோடையில்தான்
போர் போராய் குவியும்
சாகுபடி

கண்ணு எரியும்
உடம்பெல்லாம் அரிக்கும்
பாதத்தை பதம்பார்க்கும்
பொருக்கு

குண்டு நெறையா நீரிருந்தும்
குடிக்க தண்ணி கிடைக்காது
மழை வந்தால்
மகசூல் எல்லாம் தண்ணிதான்
உப்பளத்தில்.

******************

நேற்றுவரை

நேற்றுவரை
உன் வாசல்வந்து
காத்துக்கிடந்தது
இந்த வானம்

இரவில் மட்டும் நீ போடும்
உன் வீட்டுச்
சுற்றுச்சுவர் விளக்காய்
இந்தச் சூரியன்

நீ சாப்பிட்டு
கை அலம்பும் இந்த நீர்
சமுத்திரம் என்பதை
நீ எங்கு அறியப்போகிறாய்?

உன் காலடியில்தானே
கிடந்தது
இந்த கார்காலம்

உன் அறையின்
குளிர்சாதனப்பெட்டிக்குள்தான்
முடங்கிக் கிடந்தது
இந்தப் புயல்

நீ ஏறிப்போகும்
படிக்கட்டுக்குள்தான்
புதைந்து கிடந்தது
இந்த இமயம்

உன் தலையணைக்குள்
திணித்து வைத்திருந்ததுதான்
இன்று மேகக்கூட்டமாய்.”

***********************

என் உதவியாளன்

ஐந்தடி அகலமும்
ஏழடி நீளமும் கொண்ட
இந்த இத்தாலி மேஜை
என்னோடு விமானம் ஏறியது
ஒரு படப்பிடிப்புக்குச்  சென்று
திரும்பும்போது

வெளிறிய சாம்பல் நிறத்தில் இருக்கும்
இவன் கால்களில்
சக்கரம் பொருத்தப்பட்டு
சிவப்பு வண்ணத்தில்
பட்டை தீட்டப்பட்டிருக்கும்

முகப்புக் கூடத்துக்குள்
கைகள் இல்லாத இவன்
காபியையும் செய்தித்தாளையும்
வைத்துக்கொண்டு
காத்திருப்பான் காலையில்

சுழல் இருக்கைகளில்
சுற்றி அமர்ந்துகொண்டு
டிஸ்கஷன் நடக்கும்போது
வட்ட மேஜையாகும்
மதியம் சாப்பிடும்போது
டைனிங் டேபிளாகும்

மாலையில் முமுரமாக நடக்கும்
டேபிள் டென்னிச்
கேக்கையும் கோப்பையையும் தாங்கி
முறுவலிக்கும்
பிறந்தநாளில்

தாள்களையும்  அட்டையையும்
வைத்துக்கொண்டிருக்கும்
எழுதுகோல் எனக்காகத் தவமிருக்கும்

மையத்தில் பூச்சாடி புன்னகைக்கும்
என் மடிக் கணினி செல்போன் என
எதையாவது சுமந்துகொண்டிருக்கும் இவன்
என் முதல்நிலை உதவியாளன்.

                      – சிவராஜ்