கவிதை 1
அத்தனை எளிமையானவை ஆட்டுக்குட்டிகள்
ஓநாய்களை ஒளித்துவைத்திருக்கும் புன்னகைகளை
அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுவிட முடிவதில்லை இப்பொழுதெல்லாம்
அடிக்கடி இமைகள் இறங்கி கபட நாடகத்தை காட்டிக்கொடுக்கும் வரை
எலுமிச்சை பழம் போல அத்தனை பரிசுத்தமானது என்று தான்
நம்பிக்கொண்டிருந்தோம்
பச்சைப்பொய்களாய் உருண்டு கொண்டிருக்கும்
இரு விழிகளையும்
ஒலி பெருக்கியின் முன்னால் இரு கைகளையும்
அகல விரித்தபடி
நிற்கும் போது ஒரு ஏசுவோ ஒரு புத்தரோ
தோழர் மார்க்ஸோ மாவோவோ
அவதாரமெடுத்துப்போய்விடுகிறார்கள்
தலைக்குப்பின்னால் பளிச்சிடும் ஒளிவட்டத்தோடு
என் பெருமதிப்பிற்குரிய வெள்ளாடுகளே !
(எனக்கு அப்படித்தான் கேட்கிறது )
ஹ்ஹ்ம் ஹ்ஹ்ம் குரலில் ஒரு சின்ன கரகரப்பு
தொண்டையை சரிசெய்தாயிற்று
நீங்கள் ஆட்டுக்குட்டிகளை கண்டிருக்கிறீர்களா ?
அவைகளை பசுவின் புனித இடத்திற்கு
இனிமேல் உயர்த்திவிடுவோம்
அடுத்த முறையும் நாங்கள் ஆட்சியமைத்தால்
உங்கள் வங்கிக்கணக்குகளில் குறைந்தது
பதினைந்து ஆட்டுக்குட்டிகள் வரவு வைக்கப்படும்
அவைகள் பல்கிப்பெருகும் போது
ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் தனியாகவே
ஒரு வங்கிக்கணக்கு தொடங்கப்படும்
அத்தனை எளிமையானவை ஆட்டுக்குட்டிகள்
பழகுவதற்கு
கவிதை 2
உன்னைப் பார்த்த நொடி கவிஞன இறந்து விடுகிறான்
துள்ளி விழுந்த மழலையை
குருதி தோய்ந்த உடலுடன் எடுத்து வந்தால்
கழுத்தை கட்டிக்கொண்டு தேம்புகிறது
பீப்பாய்களில் நிரம்பியிருக்கும்
நினைவு மதுவை ஒரு மிடறு
மொண்டு குடிக்கிறேன்
ஊழ்வினையாய் வந்து உறுத்தும்
இந்த இரவை கொண்டு விட
போதுமான போதையை தருகிறது
அதன் நெடி
கவிதை 3
மாய வசீகரம்
ஒரு மாயக்கரமொன்று மயிலிறகால் வருடுகிறது என்னை
மயங்கிச் சரிகிறேன் நான்
ஒரு மொட்டு துடித்து மடலவிழ
உள்ளிருந்து வருகிறேன் பொன் வண்டு அளவே
உள்ள நான்
என்னை கொத்தி தூக்கிச் செல்ல எத்தனிக்கும்
காக்கைச் சிறகினில் மறைந்து கொள்கிறேன்
வசதியாக
அதுவே எனக்கு போதுமான வானமாகிறது
கரும் வானத்திலிருந்து நழுவி விழுகிறேன்
எல்லையற்ற வெளியில்
ஒரு ஒற்றை இறகோடு சுழன்று சுழன்று
பூமியை நோக்கிப் பயணிக்க
அந்த ஒற்றை இறகு ஒரு பறவையாய் மாறி
என்னோடு உரையாடுகிறது
வார்த்தைகளற்ற மொழியில்
நடனமிடும் அணுக்கூட்டத்திற்குள் விழுகிறோம்
எண்ணிறந்த அணுக்களுக்குள்
அத்தனை உயிர்ப்போடு நடனமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்
வெள்ளந்தியாய் அத்தனை கடவுள்கள்
என்னுடன் வந்த இறகு
எப்போதோ கடவுளாய் மாறியிருந்தது
கடவுள்களிடமிருந்து பிரிந்து வரவே
மனதில்லை எனக்கு
நாளையும் அலுவலகம் விடுமுறையாயிருந்தால்
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?
என்னுடன் வந்த இறகு போலவே
கொஞ்சநேரமாவது கடவுளாகியிருக்கலாம்
கவிதை 4
ஒரு சிட்டுக்குருவியின்
தலையணைக்கு
இலவம் பஞ்சு
உள்ளறைக்கு பதப்படுத்தப்பட்ட
வைக்கோல்
வாசலுக்கு சிறிது காய்ந்த சுள்ளிகள்
ஒரு வீட்டு முற்றமோ
சர விளக்கு தொங்க விடும்
இரும்பு கொக்கியோ
கொசுவலைக்குள் சாத்தியிருக்கும்
ஒரு சன்னல் கதவோ
சுருட்டப்பட்ட இரண்டு குரோட்டன்ஸ் இலைகளோ போதும்
அழியால் இரும்பு கம்பி கிராதிகள் இல்லை
சுற்றுச்சுவரில் உடைந்த பீங்கான் துண்டுகள் பதிக்கவில்லை
திண்டுக்கல் இரட்டைப் பூட்டுக்கள்
எதுவுமில்லை
வாஸ்து பார்க்கவில்லை
பூமி பூசை இல்லை
கடவுள் மனிதம் நம்பிக்கையில்லை
தொங்கும் தேனடை வடிவம்
மனதில் இருக்கும் கூட்டை
அது கட்டி முடித்துவிட்டது
தன்னியல்பில்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.