கவிதை 1
விடை தெரியாத கேள்விகளும்
கேள்விகளற்ற பதில்களும்
ஒரு மழைக்காலத்தும்பியின் சிறகுகளை
ஈக்களாக மொய்த்துக் கொண்டிருக்கின்றன
இவ்விரவில்
நள்ளிரவில் திசைதொலைத்தலையும்
பறவையின் துயரத்தை
அதன் சிறகுகளைத் தவிர
வேறுயாரறிவாரோ ?
புத்தனின் மனச்சுமையை
போதி மரம் அறிந்திருக்காது
அப்போது
லார்வா சித்தார்த்தனின் இளஞ்சிறகுகுகள்
தேடலின் கொடுஞ்
சக்கரங்களுக்குள்
சிக்கிபிழியப்பட்டு
வீதியில் தூக்கி வீசப்பட்ட நொடி
ஒற்றை சாட்சியாய் இருந்த
பித்துக் குளி நிலவு
நதியில் குதித்து தற்கொலைக்கு முயல்கிறது
தூக்கத்திலிருந்து விழித்த
நதியின் தேவதை
நீ விடியும் வரையில் மீனாக நீந்து
என்று சபித்து விட்டு
மீண்டும் சற்று கண்ணயர்கிறது
காலையில் கண் விழித்ததும்
நதியும் மீனும் புத்தனும்
காணாமல் போக
இளஞ்சித்தார்த்தன்
நேற்றுபாட்டிலில் மீதமிருந்த சரக்கால் கொஞ்சம்
நாவை நனைத்து விட்டு
வீதிக்கு இறங்கி வருகிறான்
அன்றாட பணிகளுக்கு
கவிதை 2
மழைத்துளியின் உறவுக்காக
ஈரச் சிறகை உதறாத பறவை இது
தாங்கொண்ணா அன்பின் அடர்த்தியான மெளனத்திலிருந்து
தனக்கானதொரு
பிரத்யேக வானத்தை சிருஷ்டித்துக்கொள்ளும்
கலையறியும்
இந்த ஜீவன்
நீருற்றைப் போல பீறிட்டெழும் நேசத்தை
முத்தங்களின் வழியே கடத்தி விடும்
சிறு யோகி தான்
இந்தப் புள்ளினமும்
தன் சின்னஞ் சிறு இரகசிய அறையைத் திறக்கும்
பிரத்யேக சாவியை
தன் உடலிலிருந்து
ஒரு இறகாக உருவி
நடுங்கும் உங்கள் கரங்களில்
தரும் போது
சத்தியமாக அது அறிந்திருக்காது
அதனுள்ளே நீங்கள் காணப் போகும்
புத்தம் புது பிரபஞ்சத்தை
தானே இதுவரை கண்டறிந்ததில்லையென்று
கவிதை 3
மழை
நெற்றியில் கை வைத்து அண்ணாந்து பார்ப்பவன்
நீ பூமிக்கு வரும் நாளில்
உன்னை வயலின் இரத்தம் என்கிறான்
கவிஞனோ உடைந்த முகிற் துளிகள் என்கிறான்
மரம் செடி கொடிகளோ
அன்னை மூன்று நாழிகையாய் முலைப்பால் ஊட்டுகிறாள் என்கின்றன
நானோ இன்னும் கண் திறக்காத
குட்டி குட்டி மொக்குகளை
கைகளில் ஏந்தி
என் அன்னை அனுப்பிய
சஞ்சீவி பர்வதனி என்று
ஆனந்தக் கூத்தாடுகிறேன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

