உரையாடல்
எங்கள் உழைப்பின் மீது
ஒரு கரும்புள்ளியாய் விழுந்திருக்கிறது
உங்கள் சாதி
எங்கள் உடல் விளைவித்த பண்டங்கள்
உவப்பானதாகவும்
எங்கள் உடல் அருவெறுப்பாகவும்
ஆகி விடுகிறது உங்களுக்கு
நான்கு வர்ணங்கள்
நான்கு வேதங்கள்
அதிலிருந்து முளைத்து விட்டன
நாலாயிரம் தெய்வங்கள்
தெய்வங்கள் நன்மை செய்பவை
என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறோம்
“நீ பாதத்திலிருந்து பிறந்தவன்
சூத்திரன்
உழைத்து மடிவதே
உனக்கிடப்பட்ட விதி
புரிகிறதா? ”
தெய்வங்களின் மீது அமர்ந்து கொண்டு
பிரம்மன் சிரிக்கிறான்
“கர்மாவை கடைத்தேற்று மகனே
அடுத்த முறை என் சிரசிலிருந்து பிறப்பாய் நீ’
பிரம்மனை உந்தித் தாமரையில்
உதிக்க வைத்த பரந்தாமனிடம்
செல்கிறோம்
” உலகத்தை உய்விக்கும் பொருட்டே
நான்கு வர்ணங்களும் என்னால்
படைக்கப்பட்டவை
சத்ரிய ராமன் என்னுடைய அம்சம்
சம்பூகனுக்கு ஏற்கனவே
மோட்சம் அருளப்பட்டு விட்டது”
இந்த நம்பிக்கையும் பொய்த்தது
இப்போது முழு முதற் கடவுள்
முப்புரத்தை எரித்தைவன்
மூவுலகத்தையும் கடந்தவன்
ஆதி சிவனிடம் செல்கிறோம்
“ஐயனே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அடிமைப் பட்டுக் கிடகின்றன
எங்களின் தலைமுறைகள
முப்புரத்தை நொடியில்
எரித்தது போல்
இந்த சாதியை எரித்து
சாம்பலாக்குங்கள்
எங்களைக் கடைத் தேற்றுங்கள்”
ஐயன் அருள்கிறான்
” கவலை வேண்டாம்
அப்படியே தொடருங்கள்
நானும் உங்கள் சாதிதான்
எனக்கும் சுடுகாட்டில் தான்
இடம் அளித்திருக்கிறார்கள்”
” ஐயனே உங்களாலும் சாதியை
ஒழிக்க இயலாதா ?”
“ஒழிக்க முடியாது
ஆனால் உங்களுக்கு மோட்சம் தர
முடியும்”
” சாதியை ஒழிப்பதை விட
வேறு மோட்சம் என்ன இருக்கப் போகிறது எங்களுக்கு”?
“மௌனம் தான் பதிலா,?
மகாத்மாக்களாலும் முடியவில்லை
மகான்களாலும் முடியவில்லை
இப்பொழுது மும்மூர்த்திகளாலும்
முடியவில்லை
முப்பத்து முக்கோடி தேவர்களை விடவும்
வலிமை வாய்ந்ததாக இருக்கிறதே
இந்த நாட்டில் சாதி”
நாங்கள் வேண்டுமானால் மதம் மாறிவிடவா ஐயனே ?
” மதம் மாறினால் எண்ணிக்கை குறையாதா?
“அடிமைகளின் எண்ணிக்கையா?”
” அப்டியில்லை அப்படியில்லை’
” உங்கள் நெற்றிக் கண்ணை
திறந்து பாருங்கள்
எங்கள் முன்னோர்கள் எங்களுக்குள்ளிலிருந்து
அழுதழுது விம்முகிறார்கள்
உடைந்த சுவர்களில் விழும்
கீறல்களைப் போல
எங்கள் இதயங்களில்
கீறல் விழுகின்றன
அவர்களின் பெருமூச்சுக்களினால் ”
“இந்த யுகத்தின் முடிவில்
அவர்களை அமைதி கொள்ளச் செய்கிறேன் நான் ”
“ஆனால் அவர்களின் ஆன்மா
சாதியை ஒழிக்காமல்
சத்தியமாக அமைதியடையாது”
” சாதியை தவிர்த்து வேறு வரம் கேள்
வழங்கப்படும் ”
” சாதியை ஒழிக்க இயலாத தெய்வங்களிடம்
நாங்கள் என்ன வரம் கேட்பது?
முன்னர் முப்புரத்தை எரித்த தீ
இன்னும் அவிந்து விடவில்லையே ?
” இல்லை”,
” இனி அது போதும் எங்களுக்கு ”
கவிதை 2
எதிர்பாரததொரு முத்தமாக
வந்து சேர்கின்றது
செம்பருத்திப் பூக்களைப்
பார்க்கும் போது
உன் நினைவு
எனக்குள் ஒரு கிமு மனிதன் முளைக்கிறான
கற்களை வைத்து
உன்னை ஒரு குகை ஓவியம்
வரைந்த போதே
ஹோமோ எரெக்டஸ்
முரட்டு ஸேப்பியன் ஆகிவிட்டான்
அவன் காட்டுப் பூக்களைப்
பறித்து முகர்ந்து பார்த்த போது
பறவைகளின் தேவதை
அவனுக்கு இறக்கைகளை அளிக்கிறாள்
வெண்புறாக்களில் நீ
நீந்திப் போகும் போது
உன் தோள்கள் உரசி செல்வது போல்
குதூகுலம் கொள்கிறான்
பால் வீதியில் இருக்கும் அத்தனை
நட்சத்திரங்களும்
மூளைக்குள் இறங்குகின்றன
ஒரு டிரில்லியன் சினாப்சங்கள்
உன்னை என்னோடு
இணைக்கின்றன
வன தேவதை
என் இதயத்தில்
ஓசைகளால் ஆன
மொழியை உருவாக்கி
உன்னை ஒரு கவிதையாக
படைக்கும் நாளில்
அந்தக் கவிதையிலே
மீண்டும் தோன்றுவதாக சொல்லி
மறைகிறாய்
வனம் நீண்டு போகிறது
காலம் நீண்டு போகிறது
பிரபஞ்சம் நீண்டு போகிறது
யுகங்கள் தோன்றுகின்றன
படைக்கப்ட்டுக் கொண்டிருக்கும்
அத்தனை கவிதைகளும்
ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன
எந்தக் கவிதையில் வந்து
நீ தோற்றம் தரப் போகிறாய் என்று
தெரியாமலேயே.

