இரவில் கூடடையாத பறவைகள்
என் தலைக்குள் வந்தடைகின்றன
பறவைகளின் சப்தமென்பதும்
அதன் அன்றாட அங்கலாய்ப்புகளின்றி
வேறேது?
வானம் எத்தனை பெரியதாய்
இருந்தால் என்ன
அங்கே உறங்குவதற்கு ஒரு கிளையில்லையே
சிறகுகள் தான் பறவையென்றாலும்
கால்கள் தானே பறவையின் இருப்பு
உறங்குவது போல் தான்
சாக்காடு என்றா லும்
நினைத்தால் உறங்கிவிட முடிகிறதா
அல்லது செத்துவிடவாவது?
இருப்பில் தகிக்கும்
அலகுகளின் துயரத்தை
முழு நீளப் பாடலாய் பாட முடியாதென்றாலும்
கீச்சுக் குரல்களால் கத்தி தீர்க்க முடிந்தால் போதாதா ?
முரட்டு இருள்
வாசல் மஞ்சளரளியின் உச்சி இலையில்
காற்று சிறிது நெகிழ்த்த
இருளிலிருந்து பிரிந்த சிறிய இருள்
அசைந்து அசைந்து
ரீங்காரித்தது பூக்களைச்சுற்றி
வேளையற்ற வேளையில்
சமயமற்ற சமயத்தில்
சம்பந்தமற்ற இடத்தில்
அது கூடுகட்ட அனுமதி வாங்கியிருக்கும்
மரத்திடம் என்றாலும்
ஒட்டு மொத்த குரல்களுக்கும்
அது அத்துமீறல் என்றன வீட்டில்
அசைவுறாது லாவகமாக ஒடித்து
குப்பைத்தொட்டியில் வீசி வந்தேன்
இருள் பிரியாத பச்சைக்கிளையை
கண் விழிக்கும் முன்பே மகனின் குரல் ரீங்கரித்தது
அத்தனை உற்சாகமாய்
அப்பா அடுத்த கிளைக்கு வந்திருச்சு
கூடுகட்ட
அடுத்த கிளைக்கு அடுத்த திட்டம்
அடுத்த கிளை காலி
மறுபடியும் கூடு முளைக்க அடுத்த கிளை
மரம் மூளியாக அற்புத யோசனை
போர்வையால் போர்த்தி தீப்பந்தம் மூட்டி
கிளைகளை வாட்டினேன்
தீயில் வெடித்த உடல்கள் டப் டப்பென்று சிதற
நாசியில் ஏறியது தேனோடு பச்சை உடல்கள் வாசனை
காலையில் வாசலில் கருஞ்சாம்பலை கூட்டி முடித்த
கையோடு அண்ணாந்து பார்க்க
கொசுவை விட கொஞ்சம் பெரிதான குஞ்சுகள்
சுற்றி சுற்றி வந்தன மொட்டை கிளைகளை
ஏறிட்டு நோக்க முகமின்றி
வீட்டிற்குள் வந்தேன் கதவு சாத்தி
ரீங்கரிக்க ஆரம்பித்து விட்டன
எண் திசையிலிருந்தும்
அமானுஷ்ய குரல்கள்
மகிழ்ச்சியில் குதுகலித்தவள்
அப்படியே
உறங்கத் தொடங்கியிருந்தாள்
வானத்தை எப்படி பரிசளிக்கப் போகிறீர்கள் என்று கேட்டாள்
மனைவி
தெரியவில்லை என்றேன்
கவலையுடன்
” இது கூடத் தெரியலை பாவம்” என்றாள்
வலது காலை மட்டும் அசைத்தபடி
குட்டி பாப்பா
திகைப்படங்கு முன்
” பாப்பாவ அப்படியே கண்ணை முடிக்கிட்டு
கையை நீட்ட சொல்லனும்”
ம்ம்ம் அப்புறம்
” அப்புறம் கை மேல வானத்தை வச்சிட்டு
கையை மடக்க சொல்லனும்”
ம்ம்ம். அப்புறம்
” இப்ப கண்ண திறக்கச் சொல்லனும் சரியா”
ஆனா கண்ணைத் திறந்தா?
“ம்ம்… கண்ணை திறந்து பார்க்கும் போது
பாப்பா கையில ஒரு பேப்பர் நட்சத்திரத்தை
வச்சிட்டு
மேல பார்க்கனும் வானத்தை”
உருண்டோடும் நதியாவேன்
உன் பாதங்களை நனைத்துப்போக
மரிய மக்தலேனாவின் கூந்தலை அலசிப்போக
பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும்
குட்டைகளில் ஒண்டித்தவிக்கும்
தவளைகளுக்கும் தண்ணீர்பாம்புகளுக்கும்
ஞானஸ்நானம் தந்துவிட
குப்பைத்தொட்டியில் சுருண்டு கிடக்கும்
சதைக்கோளங்களுக்கு
எச்சில்கூட்டி விழுங்க
சிறு சாரலாகிவிட
மற்றும் ஒரே குடையின் கீழ்
அரசாளும் மகாராசாக்களுக்கு
தொண்டையில் இறங்காத உப்புகரிக்கும்
ஒரே ஒரு சொட்டு நீர்த்துளியாகி விட
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.