அவள் பொருட்டு

விடிந்தும் விடியாத பொழுதொன்றில்
படுக்கையிலிருந்து எழுந்து வந்தவள்
அவளிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா
என்கிறாள்
தூக்கமின்மையின் நீட்சியாக
சில நாட்களாகவே அவளது
இடது கண்ணுக்கு கீழே தெரிகின்ற
இரண்டு சுருக்கக் கோடுகள்
அன்றும் தெரிந்த போதினும்
அதைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை
அவளிடம் தெரிகின்ற மாற்றங்கள் எதையும்
அவனால் எப்போதுமே கண்டுபிடிக்க முடியாது என்றவள்
வழக்கத்திற்கு மாறாக
தான் சிறிய பொட்டு
வைத்திருப்பதாகச் சொன்னாள்
அன்றைக்கு அவள் நெற்றியில்
பொட்டே வைக்கவில்லை என்பதை
அப்போதும் அவன் சொல்லவில்லை
மனவிரல்களின் கிளறல்
![]()
தனிமை பீடித்திருக்கின்ற
இரவின் நிசப்தத்தில்
மனதிலிருந்து முளைக்கின்றன
முக்கோண வடிவிலான
மூன்று விரல்கள்
புதையுண்டிருக்கிற
நினைவுகளை கிண்டுகையில்
விரல்களிலிருந்து நீள்கின்றன
கோழியின் நகங்கள்
உடைபட்ட முட்டைகளிலிருந்து
வெளிவந்த கூட்டுப்புழுக்களின்
ஊர்தலை ஒத்திருக்கின்றன
இழைக்கப்பட்ட அநீதியின்
சிராய்ப்புகளின் ரணம்
தீராத துயரத்தின் இரைச்சலை
அதிகப்படுத்துகிற தொனியில்
ஒலிக்கின்றன
துரோகத்தின் கொக்கரிப்பு
செரிக்காத வார்த்தைகளின்
அசைபோடலில்
எச்சமென நிலத்தில் விழுகிறது
கழிவிரக்கம்
சொற்களின் நிறம்

அன்றைய தின உரையாடலுக்கென
தன் மனத்தில் பூத்திருந்த சொற்களைப்
பறித்துக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னான்
நம்பமறுத்த பார்வைக் கணங்களைத்
தவிர்க்க விரும்பி
உள்ளங்கைகளை அகட்டிக் காண்பித்தான்
அப்போது தான் விரிந்திருந்த மருதாணி இலைகளைப் போல
கோள வடிவிலிருந்த சொற்களிலிருந்து
பச்சைய மணம் விசிறத் தொடங்கியது
உரையாடலின் இடைச்செருகலாக
சொற்கள் பயன்படுத்தப்பட்டு
தீர்ந்து போயிருந்த
நிறைவுக் கணப்பொழுதில்
உள்ளங்கைகளில் அப்பியிருந்தது
சொற்களின் இளஞ்சிவப்பு நிறம்
-வே.முத்துக்குமார்-

