சபிக்கப்பட்ட நிகழ் காலம்
உதிர்ந்த இலைகள்
உருண்டோடுகின்றன.
சூறைக் காற்றின் ஒப்பாரியில்
நிலத்தின் பெரு மூச்சு
வெறுமையாய்
விகசிக்கிறது.
துயர் மீதூர
சோகம் கனத்து
மேகங்கள்
துண்டு… துண்டாக உடைகின்றன.
கண்ணீர் சிந்தியபடி
கவட்டுக்குள்
முகம் புதைத்திருக்கும்
அவனின் மற்றும் அவளின்
துக்கம் புகைகிறது.
சற்று நேரத்திற்கு
முன்பாக
சொந்தங்கள் கூடி
எரித்து விட்டுப் போன…
பசியால் செத்த
அந்த நிராகரிக்கப்பட்ட
சின்னக் குழந்தையின்
மெளனச் சிதையிலிருந்து.
பசி
தெரு முழுக்க
நாய் ஒன்று
அலைகிறது…
விழிகளில்
பரிதவிப்பு வழிய.
வயிற்றின் உதைப்பில்
ஒய்வு ஒழிச்சலின்றி..
அந்நியரின் குரூரத்தில்
வலி பட்டு குமைகிறது.
வெயிலில் கொதிக்கும்
அடைக்கலம்…
மழையில் நனைந்து..
உயிர்க்கும் அவஸ்தையாகிறது.
கனாக்கள் நடமாடும்
நடுநிசியில்
அதன் பெருமூச்சு
ஊளையிடலாக…
உரத்து ஒலிக்கையில்..
உலகம் நடுங்குகிறது
மரண முன் அறிவிப்பு என.
தின வலி
ஆற்றுக் கரைகளாய்
நானும்..அவரும்..
கூட்டுக்குள் அடைபட்டு
திக்கு முக்காடுகின்றன..
குழந்தைகள்.
தாமதம்
என் மனதை
ஊதி..ஊதி..
எரிய வைக்கிறது.
வேலைக்குப் போன மனுசன்
வெறுங்கையுடன்
தள்ளாடி வருவாரோ..?
அடுப்பு முழிக்குமா..?
பசித்து..மயங்கிய..
பிள்ளைகள்
புசித்து..தெளிந்து..
சிரிக்குமா..?
சொட்டு சொட்டாய்
நேரம்..
என் தலையில் சொட்டியபடி.
குடைச்சல்
என்னால்…
தாங்க முடியவில்லை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

