கவிதைகள் - வசந்ததீபன் | Poem - Vasanthadheepan

1

வழி துலங்கியது
நடக்கிறேன்
கனவுகள் சுமைதான் நாக்கு தள்ளுகிறது
மரமானான்
பறவைகள் கூடு கட்டின
பசியாறினார்கள்
நிழலுக்கு வந்தவர்கள்
பறவையாக நினைத்தாள்
சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன
பயந்தாள் அவளுக்கு
கால்கள் மரத்துப்போயின
கொசுக்கள் பங்களாக்களில் பிறக்கின்றன
ரத்தமும் கண்ணீரும் குடித்து வாழ்கின்றன
அவற்றிற்குப்
பேசப் பாடச் சிரிக்கத் தெரியும்
மிதிபடுகின்றன சருகுகள்
சரசரப்பொலி துணையாக பேசிக் கொண்டு வருகிறது
தனிமையை சீக்கிரம் கடக்கணும்
பழங்காலத்தை நினைவூட்டும்
ஒரு மஞ்சள் கீற்று.

 

2

மன்னிப்பு பல தப்புகளை மூடுகிறது
கங்கு போர்த்திய சருகு சாம்பலாகும்
தவறுகள் திருத்தப்படலாம்.
குழந்தையின் பேச்சு கிண்கிணி ஒலி
துருதுருன்னு திரியும் சுண்டெலி
பசித்தால் வீறிடும் ஆலைச்சங்கு
நீ வரைந்த ஓவியம்
நீரில் நனைந்தது
தீயில் எரிகிறது
சோளக்காட்டு பொம்மை காவல் காக்கிறது
பன்றிகள் காட்டை நாசம் செய்கின்றன
நாடு அமைதியாய் அழுகிறது
காய்கறிகளை தெருவில் கொட்டினர்
உழைப்புக்கு விலை இல்லையாம்
இல்லாதவர்களுக்குக் கொடுக்க மனசற்றவர்கள்
விடாமல் துரத்துகிறது நிழல்
பிடிகொடுக்காமல் ஓடுகிறேன்
தப்பிப் போனது பாதை
திருப்தியாய்ச் சாப்பிட்டு முடித்தாயல்லவா
மோட்டு வளையை ஏன் பார்த்தாய்?
மறக்காதே பசி தீர்த்தவன் கடவுள்
வாடும் என தெரிந்தே பறிக்கிறார்கள்
வதையென்று அறிந்தே செய்கிறார்கள்
மன்றாட்டை செவி மடுக்கத் தேவையில்லை.

3
நீ அழகான பிசாசு
உன் நினைவுகள் கொதிக்கும் ஆறு
காதல் என்னைத் தின்று கொண்டிருக்கிறது
நான் இருந்தேன்
நீ அழைப்பாயென காத்திருந்தேன்
உன் நிழல் கூட என்னை நினைக்கவில்லை
உள்மன யாத்திரை நிகழ்வைக்  கொலை செய்யும்
ஞான தரிசனம் பிரச்சனைகளிடமிருந்து தப்பித்தல்
நிஜம் உண்மைகளை உறுத்துவந்து ஊட்டும்
பருகக் கொடுக்க தேநீரல்ல
கைமாற்ற  பாரம் அல்ல
யாவற்றையும் இழப்பது மரணம்
தாமரையின் முகம் மிருகத்தின் சாயலாயிருக்கிறது
குளத்தைக் குடித்த இறுமாப்பு தெறிக்கிறது
நீர்வாழ் உயிரினங்கள் அதிர்ந்து உறைகின்றன
சிவனின் வாசஸ்தலம் மயானம்
ஆதியோகியின் பீடம் காடுகளின் சுடுகாடு
நரகத்தின் கதவைத் திறக்கவிருக்கிறது சைத்தான்
எளிமைதான் அழகு
இனிமைதான் உறவு
தனிமைதான் உணவு
கொப்பரைத் தேங்காய்கள் வெயிலில் காய்கின்றன
செக்கடித் தெருவே காலியாகி விட்டது
நாயொன்று செக்கில் மோண்டு கொண்டிருக்கிறது
புதுத்துணிகளோடு கடையை விட்டு வெளியேறுகிறேன்
வழியெல்லாம் பூக்கள் இறைந்து கிடக்கின்றன
விழா முஸ்தீபோடு சந்தோஷம் காத்திருக்கிறது
பார்த்தால் துடிப்பேன்
மொழிந்தால் குமுறுவேன்
தொட்டால் வெடிப்பேன்
நிழலே திரும்பிப் போ
நான் மட்டும் போகிறேன்
பிரிந்தால்தானே விலக முடியும்
தைலமரக் காய்களை பொறுக்குகிறேன்
வண்ண வண்ண கடற்சங்குகள் போலிருக்கின்றன
தேவதைகள் போன்று பூக்கள் பறந்துவருகின்றன
புழுவை சித்திரவதை செய்வார்கள்
பாம்பைக் கண்டால் கால் பிடரியில்பட ஓடுவார்கள்
எளியோர் எக்காலமும் வதைக்கப்படுவார்கள்.
எழுதியவர் 
வசந்ததீபன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *